செவ்வாய், 20 அக்டோபர், 2020

'கற்பு' உருவான கதை!

இது அந்தக் காலத்துக் கதை. பொழுதுபோக்காக வாசிக்கலாம்.

திரேதாயுகத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஸ்வேதகேது என்ற முனிவர்தான், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கற்பு நெறிகளை வகுத்தவராம். அதற்கு மூலகாரணமான ஒரு நிகழ்வு கீழே.

ஸ்வேதகேதுவின் தந்தை உத்தாலகன். அவர் பலராலும் மதிக்கப்பட்டவர். மனைவி, மகன், மகள் என்று வாழ்ந்தவர்.

அந்தக் காலத்தில் ஒரு சம்பிரதாயம் இருந்தது. 

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்[அதிதி] வீடு தேடி வந்தால், அவரை வரவேற்று உபசரிப்பது வழக்கம்.

அவர் விரும்பும் உணவு வகைகளை உண்ணத் தருவதோடு, வீட்டு உரிமையாளரின் மனைவியுடனோ மகளுடனோ அவர் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டால், அவளை அவருக்கு விருந்தாக்க வேண்டும். பெண்களும்  சம்மதித்துவிடுவது[விருப்பம் இல்லாதபோதும்கூட] வழக்கத்தில் இருந்தது.

ஸ்வேதகேது ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் தந்தைவெளியே காத்திருக்க, அவருடைய தாயுடன் படுக்கை அறையில் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் இருப்பதைப் பார்த்துச் சினம் கொண்டார்.

கட்டுக்கடங்காத சினத்துடன் தந்தையை நோக்க, "இது கலங்காலமாக இருந்துவரும் வழக்கம் மகனே" என்றார் உத்தாலகன்.

"என்ன கொடூரமான வழக்கம் இது? என் தாய் குழந்தை பெற்றால் அதற்குத் தந்தை யார் அப்பா?" என்றார் ஸ்வேதகேது.

உத்தாலகன் சிரித்தார்; சொன்னார்: "மகனே, நீகூட எனக்குப் பிறக்கவில்லை. ஒரு முன்பின் அறிமுகம் இல்லாத விருந்தாளிக்குப் பிறந்தாய். இருந்தும், ஒரு தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் நான் செய்துவருகிறேன்."

ஸ்வேதகேது முனிவர்களைக் கூட்டிவைத்து விவாதித்தார். "இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும்" என்றார்.

"சம்பிரதாயத்துக்கு எதிராக நீ கலகம் செய்கிறாய்" என்றார்கள் மற்ற முனிவர்கள். "பெண்கள் இதை விரும்பித்தான் செய்கிறார்கள்" என்றும் வாதிட்டார்கள்.

ஸ்வேதகேது தன் கருத்தில் பிடிவாதம் காட்டவே, ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து 'விருந்தினருக்கு[அதிதி] வீட்டுப் பெண்ணை விருந்தாக்கலாம். ஆனால், கரு உருவாகும் நாட்களில் அதைத் தவிர்த்திட வேண்டும்' என்பதே அந்த உடன்பாடு.

அதன் பிறகு, மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்பு நெறிகளைப் புகுத்தினாராம் ஸ்வேதகேது.

இன்றும்கூட சில கிராமங்களில், "விருந்தாளிக்குப் பிறந்தவளே" என்று வாய்ச்சண்டையில் திட்டுவது வழக்கத்தில் உள்ளதாம்.

===============================================================