அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 8 அக்டோபர், 2020

'கொரோனா'... மிக மிக மிக முக்கியமான தகவல்!!!

கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப்பிலும் பிற சமூக வலைதளங்களிலும் வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் செய்தி இது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் அந்த வைரஸ் 90 நாள்களுக்கு இருக்கும் என்பதே அது. இது எந்தளவுக்கு உண்மை?

முதலில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என பார்க்க, நாம் அறியவேண்டிய மருத்துவ விஷயம், த்ரோட் ஸ்வாப் எனப்படும் ஆர்டி பிசிஆர்தான். முதலில் ஆர்டிபிசிஆர் என்பது என்னவென நாம் அறிந்துகொண்டோமானால் இந்தத் தகவலில் இருக்கும் அறிவியல் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

கொரோனா வைரஸ் விஷயத்தில் இதன் பங்கு என்னவென்றால்,

பொதுவாக நமக்கு வரும் தொற்றுகளில் பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் ஆகியவற்றை, அவற்றிற்கான அறிகுறிகளை வைத்தோ, அல்லது சாதாரணமாக உடனடியாகச் செய்யக்கூடிய ரத்த மாதிரி பரிசோதனைகளை வைத்தோ அவற்றின் தாக்கம் இருப்பதை அறிந்து உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்து விடலாம்.

ஆனால், வைரஸ் அப்படி அல்ல. அதனை ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடி டெஸ்ட்டுகளின் மூலம்தான் அறிய முடியும். நமக்கு ஏற்கெனவே தெரிந்த வைரஸ் பாதிப்புகளால் வரும் நோய்களான மஞ்சள் காமாலை எனும் ஹெப்படைடிஸ், டெங்கு காய்ச்சல், அனைத்திற்கும் மேல் எய்ட்ஸ் எனும் ஹெச்.ஐ.விக்குக்கூட ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடி டெஸ்ட்கள்தான் பரவலாகச் செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் உலகிற்குப் புதியது என்பதாலும், இதற்கான சரியான ஆன்டிஜென், ஆன்டிபாடி டெஸ்ட்டுகளின் வருகை தாமதமானதாலும், இந்தப் புதிய வைரஸின் முப்பரிமாண மாற்றங்கள் மிக வித்தியாசமாக இருப்பதாலும், மரபணுக்களை ஆராயும் இந்த RT-PCR மூலம், கொரோனா வைரஸின் RNA-க்கள் எனப்படும் வைரஸ் மரபணுத் துகள்களை அறிந்திடச் செய்யும் இந்தப் பரிசோதனைதான் எளிதாக நோய்த்தொற்றை அறிந்திட உதவுகிறது.

அதே நேரத்தில் நோய்த்தொற்று அறியும் மற்ற பரிசோதனைகள் பற்றிய நம்பகமான ஆய்வுகள் இல்லாத காரணத்தினாலும், இவ்வகை தாமதங்களால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இந்த வைரஸால் கொல்லப்படக்கூடாது என்பதாலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறியும் பரிசோதனை என மருத்துவ உலகம் ஆர்டி பிசிஆர் சோதனையை அறிமுகப்படுத்தியது.

இந்தச் சோதனை, நம் உடல் நீரில் இருக்கும் நம் மரபணுவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் ஏதேனும் அந்நிய RNA பொருள்களைக் கண்டறிந்து, அதனை ஒரு கருவியின் உதவி மூலம் அவற்றின் பிரதிகளைப் பெருக்கும்.

அப்படி இருக்கும் பிரதி, நமக்குத் தேவையான அந்நிய வகை RNA பொருளாகத்தான் இருக்கிறதா என்பதை அடுத்த கருவி ஆய்வு செய்யும். அப்படிச் செய்தபின், அந்தப் பிரதிகளில் இருப்பது ஒரே வகையாக இருந்தால் அவை பாசிட்டிவ்வாக கணிக்கப்படும்.

வெவ்வேறு RNA துகள்களாக இருந்தாலோ, தேவைப்படும் அளவு அந்தப் பிரதிகளை எடுக்க முடியாதது தெரிந்தாலோ பரிசோதனை முடிவானது நெகட்டிவ்வாக கருதப்படும். இதுதான் கொரோனா பாசிட்டிவ் - கொரோனா நெகட்டிவ் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், இதில் நீங்கள் அறியவேண்டிய முக்கிய தகவல் என்ன தெரியுமா? இந்த RT- PCR பரிசோதனை என்பது கொரோனா வைரஸையோ, வைரஸ் கிருமி இருப்பதையோ கண்டறியும் பரிசோதனை அல்ல.

மாறாக அந்த வைரஸிற்குள் இருக்கும் மரபணு, அதாவது RNA எனப்படும் மரபணுவுடைய துகள்களைத்தான் இவை பிரதிகளாக்கி கண்டறிந்து நமக்குக் காட்டும்.

எனவே, தற்சமயம் மக்கள் பயப்படுவது போல, இந்த கொரோனா நோய்க்கிருமி நம் உடலில் 90 நாள்கள் இருப்பது என்பது உண்மையல்ல. ஏனென்றால் நாம் பரிசோதனையில் பார்ப்பது வைரஸ் அல்ல. அதன் ஆர்.என் ஏ துகள் மட்டும்தான்.

அடுத்ததாக, தொற்று ஆரம்பித்த முதல் 11 நாள்களுக்குள் நம் உடலில் இதற்கென பிரத்யேகமாக எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாக்கப்படும் எதிர்ப்பாற்றல் செல்கள், இந்த RNAக்களை கூட விட்டுவிடாமல் அவற்றை உடைத்து நொறுக்கிவிடும்.

கொரோனா குணமான பின்பும் உடல்நிலை மோசமடைவது ஏன்? `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' அலெர்ட்

அப்படி உடைந்திட்ட RNAக்களால், அதன் பிறகு பொதுவாக நோயைப் பரப்பவும் முடியாது. உடலில் நோயைப் பெருக்கவும் இயலாது. அவை Inactive Fragments எனப்படும் வீரியமில்லா துகள்களாகவே உடல் நீரிலும் நம் செல்களிலும் ஆங்காங்கே காணப்படலாம்.

இந்த நேரத்தில் நாம் செய்யும் வழக்கமான RT-PCR பரிசோதனைக்கு, நம் உடலுக்கு சம்பந்தமற்ற அந்நிய பொருள் (Foreign RNA particles)தானே...

ஆதலால், இந்தப் பரிசோதனை வழக்கம்போல் உடைந்த வீரியமில்லா RNA துகள்களைக் கண்டறிந்து, அதன் பிரதிகளை உருவாக்கி மீண்டும் அந்த நபருக்கு பாசிட்டிவ் என தெரிவிக்கும். இதைத்தான் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று வந்ததாகவும், நோய்த்தொற்று வந்து குணமான சிலருக்கு மீண்டும் RT-PCR பரிசோதனை பாசிட்டிவ் எனக் காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதைக் கண்டு நிச்சயமாக அச்சப்படத் தேவையில்லை. இதனால் வரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்களால் தொற்று உள்ளவருக்கோ, அவருடன் இருப்போருக்கோ எந்தவிதச் சிக்கலும் கிடையாது.

ஆனால் உங்களை நோய்த்தொற்று பாதித்து, அறிகுறிகள் வந்து, மருத்துவ சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் அறிகுறிகள் குறையாமல் இருந்தாலோ, அதிகமாகத் தென்பட்டாலோ, அது வீரியமடைந்த நோய் எனச் சொல்லலாம். தேவைப்பட்டால் இன்ன பிற உடல்நிலை கண்டறிய உதவும் பரிசோதனை, ரத்த மாதிரிகள், சிடி ஸ்கேன் அல்லது ஒரு ஆன்டிபாடி பரிசோதனை செய்து, நோய் எதிர்ப்பு செல்கள் இருக்குமானால், நோய் நம்மை விட்டு விலகியதாக எண்ணிக்கொள்ளலாம்.

=====================================================================

நன்றி: விகடன் https://www.vikatan.com/health/healthy/is-it-true-that-coronavirus-will-stay-in-our-body-for-90-days   [published 06.10.2020 at 7 PM. Updated:Yesterday at 7 PM]