வெள்ளி, 27 நவம்பர், 2020

புரியாமல் எழுதியே 'பிரபல எழுத்தாளன்' ஆன ஜெயமோகன்!!!

https://www.jeyamohan.in/2470/ என்னும் தளத்தில்['ஜெயமோகன்'] வெளியானது பின்வரும் கேள்வி-பதில்['தியானம்', November 26, 2020] பகுதி. பிழைகளைத் திருத்தவில்லை. பல பத்திகள் நீக்கப்பட்டுள்ளன. அடைப்பில் இடம்பெற்றுள்ள வினாக்களும் விளக்கங்களும் என் சிந்தனையில் முகிழ்த்தவை.

'மதிப்பிற்குரிய ஜெ,

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும்.

தியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம் கிடைக்கும்போது இதையும் கவனத்தில் கொண்டு எழுதலாமே? ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல புத்தகங்கள் இருப்பின் அவற்றை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.

இப்படிக்கு

கிறிஸ்

ன்புள்ள கிறிஸ்டோபர்,

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.

நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி[மனம் என்பது எண்ணங்களின் நீட்சி என்றால், மனமும் எண்ணமும் ஒன்றா? எண்ணங்கள் உருவாவதே மனதில்[மூளை]தான். அப்புறம் எப்படி இரண்டும் ஒன்றாகும்? ஆரம்பமே சொதப்பல்!]    என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்[கூடும் என்ன கூடும், எண்ணங்களின் பிறப்பிடமே மூளைதான். மூளையைத்தான் வழக்கில் மனம் என்கிறோம். அது[மனம்] இன்றளவும் நிரூபிக்கப்படாதது].

அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து[மனதுக்கு விளிம்பா? அடிச்சி விளையாடுறார் ஜெமோ?!] விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை[விளிம்பு என்று ஒன்று இருப்பதாகச் சொல்லிவிட்டு, இவையெல்லாம் இல்லை என்பது ஏன்?]. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.

ஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல்[மனம் வேறு அதன் செயல் வேறு அல்லவா?] என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து[மனம் பிரிகிறதா? ஹ...ஹ...ஹ!!!]] ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்[நம் மனதை நாம் பார்க்கிறோமா?[இது ஜெமோ போன்ற ஞானிகளுக்கு மட்டுமே புரிகிற விசயம்!]. இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

இந்த மனச்செயல் நின்று, அது[எது?] இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம்  அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.

இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம்[இது சரி. அப்புறம், இதுவரையினான, புரியாத வெட்டி வியாக்கியாணம் எல்லாம் எதற்கு?]. ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம்[???] கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் [இது எதுக்கு, சம்பந்தமே இல்லாமல்?].

உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்[இரண்டும் இல்லாமல் ஆதல் எப்படிச் சாத்தியம்?] 

அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது[அதான், ஏற்கனவே மெய்மறத்தல்னு சொல்லிட்டாரே?]. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்[நல்லாவே குழப்புறாரய்யா!]

ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு[எப்படியெல்லாம் சொற்சிலம்பம் ஆடுகிறார்?]

ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது.  அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.

ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது

நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்[மெய்மறத்தலுக்கு இத்தனை விளக்கமா?]......

தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல்என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.

பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்[இது வேறயா?].

தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.[தியானத்துக்கே சரியான விளக்கம் தரல. எது தியானம் அல்ல என்று ஆராயுறாராம்!} ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.  -ஜெ'

இதுவரை பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி. உங்களின் பயனுள்ள நேரத்தை வீணடிக்க விரும்பாததால், எஞ்சியுள்ள பத்திகளை[15] தவிர்த்திருக்கிறேன்.

எதைப் பற்றியும் சலிப்பில்லாமல் எழுதித் தள்ளுகிற திறமை ஜெயமோகனுக்கு உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால், இவரின் படைப்புகளில் மிக மிக மிகப் பெரும்பாலானவை இந்தக் கட்டுரையைப் போலவே வாசிப்பவரின் மனதைக் குழப்பிப் பித்தம் தலைக்கேறச் செய்பவை என்பது என் திடமான நம்பிக்கை.

இவர் எப்படிப் பிரபல எழுத்தாளர் ஆனார் என்பது இன்றளவும் விடுவிக்கப்படாத புதிர் எனலாம்.

===============================================================