குமுதம் வார இதழில் ஆண்டுக்கணக்கில் அவர் எழுதிக்கொண்டிருப்பதன் ரகசியமும் இதுதான். https://charuonline.com என்னும் அவரின் வலைப்பக்கத்தில் அண்மையில் அவர் எழுதிய பதிவுகளிலிருந்து சில பகுதிகள் கீழே.
'என் இருபத்தைந்தாவது வயதில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள Inspector General of Prisons என்ற அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தேன். பொன்.பரமகுரு அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே டெய்லர்ஸ் ரோட் என்று நினைக்கிறேன், ஷாந்தி மேன்ஷனில் ஒரு அறையில் வசித்தேன்.
எதிரே சட்டக் கல்லூரி விடுதி. என் அறையில் இன்னொரு அன்பர். ஒரு வருடம் அவர் என்னோடு அறைவாசி. இப்போது நான் சொல்வதை நீங்கள் யாருமே நம்ப முடியாது. ஆனால் உண்மை. அந்த அன்பரோடு நான் ஒருநாள் கூடப் பேசியதில்லை. அவரும் பேசியதில்லை. அவர் பாட்டுக்கு வருவார், போவார். நான் பாட்டுக்கு வருவேன், போவேன். இது அல்ல முக்கியம். அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது என்பதுதான் விசேஷம். ஆனால் பார்த்தால் அசட்டுத்தனமாக ஒரு புன்முறுவல் பூத்துக் கொள்வோம். அதுதான் நான். எனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களோடு பேசவே மாட்டேன், ஒரு வார்த்தை கூட.'
!!!சாரு தங்கியிருந்தது விடுதி அறை. இருவருக்கும் ஒதுக்கப்பட்டது அந்த அறை என்றாலும், முதலில் வந்து இடம்பிடித்தவர், அடுத்து வந்தவரிடம் எதுவும் விசாரிக்காமலே அவரை எப்படி அறையில் சேர்த்துக்கொண்டார்? ஆளுக்கொரு சாவி கொடுக்கப்பட்டிருந்தாலும் உடன் தங்கியிருப்பவருடன் பேசியதே இல்லை என்பது, இருவரும் பரம்பரைப் பகையாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம். இருந்தாலும், சாருவுக்கு மனசு சுத்தம். பொய் சொல்லவில்லை என்று நம்புவோம்.
'புருடா' என்னும் சொல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று சாருவே தன் பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். புருடா விடுவது சாருவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு:
'ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஒரு தம்பி என்னிடம் “அங்கிள், நீங்கள்ளாம் மொத்தமா எத்தனை ரைட்டர்ஸ் இருப்பீங்க?” என்று கேட்டான். பள்ளியின் வைரம். உடம்பெல்லாம் மூளை. எனக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சந்தேகம் என்றால் அவனைத்தான் கேட்பேன். நான் அவனுக்கு என்ன பதில் சொன்னேன் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு கேள்விதான் என் பதில். “மெட்ராஸ்ல எத்தனை தெருநாய் இருக்கும்னு நெனைக்கிறே? அவ்ளோ இருப்போம்!” இதற்குப் பிறகு ஏதாவது கேட்பானா அவன்?
!!!தன்னையும் இணைத்து இப்படி இழிவாக விமர்சிக்கும் துணிவு வேறு எந்தவொரு எழுத்தாளருக்கும் வராது. இப்படி ஏடாகூடமா எதையாவது உளறி வைத்து, வாங்கிக் கட்டிக்கொள்கிற மனப்பக்குவமும் அவருக்கு உண்டு!
'சாமான்யர்கள் உளறுவதற்கு அவர்களுக்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம். அவர்களுக்கு அவையடக்கம் சொல்லித்தர நான் ஆள் இல்லை. புதியவர்களோடு உரையாட எனக்கு நேரமோ பொறுமையோ இல்லை. எனக்கும் எத்தனையோ உறவுகள் இருக்கின்றன. அவந்திகா உறவிலும் என் உறவிலும் யாரோடும் நான் வைத்துக் கொள்வதில்லை. என் சொந்தத் தங்கை நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எனக்கு வாட்ஸப் பண்ணியது. நான் பதிலே அனுப்பவில்லை. தொடர்ந்து நாலைந்து நாட்கள் அனுப்பி விட்டு நிறுத்துக் கொண்டது. அவர்களோடெல்லாம் உரையாடுவதற்கோ பாசம் பாராட்டுவதற்கோ எனக்கு ஆர்வம் இல்லை.
இதையெல்லாம் நண்பர்களிடம் சொன்னால் என் நெருங்கிய நண்பர்கள் நம்புவார்கள். மற்றவர்கள் புருடா என்பார்கள். இந்த புருடா என்ற வார்த்தைதான் என் வாழ்க்கையை ரோலர்கோஸ்டராக ஆக்குகிறது.
மற்றவர்களால் நம்ப முடியாத ஒரு வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மூன்று மணி நேரம் போகம் செய்வது பற்றி ஒரு நாவலில் எழுதினேன். உடனே எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.
ஒரு சக எழுத்தாளர் “சாருவுக்கு செக்ஸ் பற்றி எதுவும் தெரியவில்லை” என்று எழுதினார். நான் என்ன என் நாவலுக்கு கோனார் நோட்ஸா எழுத முடியும்? நான் பதினேழு பதினெட்டு வயதில் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தேன். இருபத்திரண்டுவரை சாமியாராகப் போய் விடுவேன் என்று வீட்டில் பயந்தார்கள்.
தஞ்சாவூரில் ஒரு சாமியார் எனக்கு ஹதயோகத்தில் சிலதைக் கற்றுக் கொடுத்தார். சிலதுதான். அதில் ஒன்று வஜ்ரோலி. இந்த வஜ்ரோலி தெரிந்தவர்களால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் போகம் செய்ய முடியும். இது பற்றி நான் இதுவரை ஒரு வார்த்தை எழுதியதில்லை. இப்போதும் எழுதப் போவதில்லை. ஏனென்றால், வஜ்ரோலி என்பது ஒரு aphrodisiac ஆக மட்டுமே பயன்படுத்தக் கூடியது அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.
அதை நான் எல்லோருக்கும் கற்பிக்க முடியாது. பெண்ணையும் சரி சமமாகப் பாவிப்பவர்களுக்கு மட்டுமே என்னால் அதைப் பூரணமாகக் கற்பிக்க முடியும். இங்கே நான் வஜ்ரோலி என்ற பெயரை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதே பெரிய விஷயம். ஏன் இதுவரை சொல்லவில்லை என்றால், யாரிடமும் சொல்லக் கூடாது என்பது என் குருவின் ஆக்ஞை. சொல்லி விட்டு, மௌனமேவ உசிதம் என்றார் சம்ஸ்கிருதத்தில். ஏன் என்றேன். மௌனம் சர்வார்த்த சாதகம் என்றார். வாய் விட்டுச் சொன்னால் மெய் விட்டுப் போகும், சொல்லாதே, பலிக்காது. இப்போது மட்டும் ஏன் சொல்கிறேன் என்றால், குரு இல்லாமல் இதைக் கற்க முடியாது. இன்னொன்று, நான் காமத்தைக் கடந்து விட்டேன்.
!!!'இப்போது மட்டும் ஏன் சொல்கிறேன்' என்று சொன்னவர், 'வஜ்ரோலி' பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. 'காமத்தைக் கடந்துவிட்டேன்'[காமத்தின் கரை காணுகிற வயசு!] என்றும் 'கரடி' விட்டிருக்கிறார்.
இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ சரக்கடித்தவர் போல் சாரு 'சரடு' விட்டுக்கொண்டிருந்தாலும், அவருக்கான வாசகர் எண்ணிக்கை எப்போதும் குறைவதே இல்லை. காரணம்.....
அவர் எழுத்தில் அப்படியொரு கவர்ச்சி! ஹி...ஹி...ஹி!!
==============================================================