அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 9 ஜனவரி, 2021

1 மனிதன் = 1500000 எறும்புகள்!!!

'அரிதும் அறிவோம்' என்னும் பெயரில் ஒரு வலைப்பக்கம். நாம் அறியாத செய்திகள் இடம்பெறுகிற அரியதொரு தளம்.

இத்தளத்தில் வெளியான சிறந்த இரண்டு பதிவுகள் உங்களின் வாசிப்புக்கு.
2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இயங்குவதாகத் தெரியவில்லை. காரணத்தையும் அறிய இயலவில்லை.

ஊறும் எறும்புகள் கூறும் கருத்துகள்

நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, அதாவது மனிதன் பிறந்த காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே வாழும் ஒரு உயிரினத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?  இந்தச் சிறிய உயிரினங்கள், டினோசர்களுடன் வாழ்ந்தவை. மனிதன் போலவே எல்லாக் கண்டங்களிலும் தன் குடியிருப்பை நிறுவி வாழ்ந்து வருபவை.

உலகில் மிக மேன்மையான பிறப்பு எதுவென்றால் மனித இனம் என்றுதானே சொல்லுவோம்? ஆனால், மனிதர்களைவிட உன்னதமான பிறப்பு எறும்புகள்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். அதாவது, எறும்புகள் மனிதர்களைக்கூடத் தந்திரமாக வென்றுவிடும் அளவுக்குக் கூரிய அறிவு படைத்ததவையாம். 

புத்திசாலி எறும்புகளான ஃபார்மிக்கா எறும்புகளால் 1 முதல் 60 வரையிலான எண்ணிக்கையை சுலபமாக எண்ண முடியுமாம். 

எறும்புகளின் வாழ்கை,  நடை, பாவனைகள் எல்லாம் மனிதர்களை ஒத்து இருப்பதாகக் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். மனிதன் ஒரு சமூக விலங்கு. அதைப் போலவே எறும்புகளும், கூட்டம் கூட்டமாகக் குடியிருப்புகள் அமைத்து வாழும் தன்மை உடையவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

எறும்புகள் தங்கள் எடையை விட 50 மடங்கு எடையைச் சுமந்து செல்லும் ஆற்றல் உடையவை.  இது எவ்வாறு சாத்தியம் ஆகிறது என்றால், இவைகளின் தசைகள் மனிதர்களின் தசைகளைவிட இறுக்கமானவை ஆகும். சில எறும்பு வகைகளில் போர் செய்யும் எறும்புகள், தங்கள் தலைகளைப் புற்றின் வாயிலில் அடைத்துவைத்து எதிரிகள் வராமல் கடமை ஆற்றும். 

சில வகைச் செடிகளின் தண்டுகளில் வெற்றிடம் இருக்கும். அங்கே குடி இருக்கும் எறும்புகள் செடிகளின் சாற்றை உண்டு வாழ்வதோடு மட்டுமல்லாமல், அவற்றிற்கு நன்றிக் கடனாக அந்தச் செடிகளைப் புழு, பூச்சிகள் அண்டாமல் காக்கவும் செய்கிறது.

இந்தப் பூமியில் உள்ள எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு தெரியுமா?  இதில் வாழும் அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாகும். அதாவது, இந்தப் புவியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நிகராக, பதினைந்து லட்சம் எறும்புகள் வாழ்கின்றனவாம். வியப்பாக இருக்கிறது அல்லவா ?  

மனிதர்களைப் போலவே உயர் நிலையில் உள்ள சில எறும்புகள் தங்களைவிடப் பலம் குறைந்த எறும்புகளை அடிமையாக்கி வேலை வாங்குமாம்.

அதெல்லாம் இருக்கட்டும், எறும்புகள் எப்படி ஒரே நேர்க்கோட்டில் போகிறது  என்று பல முறை ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் அல்லவா? முதலில் Scout Ant  எனப்படும் ‘சாரணர் எறும்பு’ உணவைத் தேடி அங்கும் இங்கும் அலையுமாம். அது உணவைக் கண்டபின் பாதி உண்டு, ஒரு நேர்கோட்டில் தன் குடியிருப்பை நோக்கித் திரும்பும். அப்படித் திரும்பும்போது ஃபெரோமோன் ( Pheromone ) என்ற ஒரு நறுமணத்தைப் பீச்சிக் கொண்டே செல்லுமாம். இதை மோப்பம் பிடித்துத்தான் மற்ற எறும்புகள் உணவு சேகரிக்கின்றன. 

அந்த நறுமணத்தை நீர் அல்லது வேறு ஏதேனும் தடை செய்யுமாயின், எறும்புகள் எல்லாம் திருவிழாவில் காணமல் போன குழந்தைகளைப் போல் அங்கும் இங்கும் ஓடுகின்றன. 


'ஆனைக்கு ஒரு காலம் வந்தால்.....'

“ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் “ -இது நாம் அறிந்த பழமொழி. 

யானை[ஆனையை யானை என்று தவறாக அர்த்தம் பண்ணுகிறோம்] போன்ற பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலக் கட்டங்களில் வெற்றி பெற்றால்,  பூனையைப் போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த  நேரம் வரும் போது வெற்றி பெறுவார்கள்; அதாவது, வலியோர்களுக்கு ஒரு காலம் வந்தால், எளியோர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பதே இன்றளவும் நாம் அறிந்த இதற்கான பொருள். 

இப்பழமொழிக்கு இவ்வாறு பொருள்கொள்வது தவறாகும்.

‘ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்’ என்பதே உண்மையான பழமொழி.

‘ஆ’ என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்குப் பொலிவு ஏற்படும். 

‘பூ’ நெய் என்றால் பூவிலிருந்து கிடைக்கும் தேன். இந்தத் தேனை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. இந்தக் கருத்தை உணர்த்தவே 'ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்'  என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆக, இப்பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் உணர்க

===============================================================

நன்றி: https://aridhumarivom.blogspot.com/2014/04/yanaikku-oru-kaalam-vandhaal-poonaikku.html