செவ்வாய், 26 ஜனவரி, 2021

பகுத்தறிவுப் பெண் சிங்கம் 'தஸ்லிமா நஸ்ரின்'!!!

உலகறிந்த  பெண் எழுத்தாளர் 'தஸ்லிமா நஸ்ரின்'. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு,  1994ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெயர்ந்து  வாழ்ந்துவருபவர். 

வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மதசார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் கைவிடப்பட்டபோது, தைக் கண்டித்து 69,70-களில் நடந்த போராட்டங்களில் இவரும் பங்கேற்றார்.

இவர், அனைத்து மதங்களையும் விமர்சிப்பவர். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோதும் எதிர்த்தார். இந்து மதச் சாமியார்களையும் எதிர்த்தார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்தபோதும் எதிர்த்தார்.

கிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கத் தவறவில்லை.  

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இவர் ஆளானது ஏன்? அதிரவைக்கும் காரணங்களைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்காக இந்தப் பதிவு.

*என்னை யாரும் இஸ்லாமியர் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.

*மதம் பெண்களைத் துன்புறுத்துகின்றது. சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.

*கல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்குச் சம உரிமை தேவை. மதத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும். 

*நாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றன. மற்ற மதங்களுக்கு இருக்கும் இந்த நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல.

*இஸ்லாமியர்களுக்குச் சுயமான சிந்தனை இருக்கக் கூடாதா? இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகள்தான் தகுதிபடைத்தவர்களா?

*மதங்களைவிடவும் மேலானது மதசார்பற்ற மனிதாபிமானம். அதை வலியுறுத்துவது நம் அனைவரின் கடமை.

இவ்வகையிலான கருத்துகளை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதொடு.....

நாத்திகரான எழுத்தாளர் தபா பாபா என்ற பிரபல இணையப் பதிவர் கடந்த 2013-இல் நடந்த ஷபாக் போராட்டத்துக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டதையும், 

1915ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய்[அவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு கொண்டவர். அனைத்துப் பிரச்சினைகளுக்கு விவாதங்கள் மற்றும் முறையான அணுகுமுறையுடனே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியவர். வங்கதேசத்தில் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கான இடம் பறிக்கப்பட்டபோது, அவர்களுக்கான பாதையை ஏற்படுத்தியவர் அவிஜித் ராய். வங்கதேச எழுத்துலகத்துக்கு அவரது பங்களிப்பு எடை போட முடியாதது] தனது சொந்த நாட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கச் சென்றபோது சந்தேக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்தார் தஸ்லிமா நஸ்ரின்.

"அறிவுஜீவிகளையும் சுதந்திரச் சிந்தனையாளர்களையும் அவர்கள்[அடிப்படைவாதிகள்] கொலை செய்கின்றனர். பாகிஸ்தான், முற்றிலும் இஸ்லாமியமயமான நாடு. ஆனால் வங்கதேசத்தின் அரசியல் சாசனம் மதச் சார்பற்றது.

மதச் சார்பற்ற கல்வியே இந்தச் சமூகத்துக்கு தேவை. மதராஸாக்களின் போதனை அல்ல. மதப் பிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை அனுமதிக்கக் கூடாது" என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இவை போன்ற சீர்திருத்தக் கருத்துகளைக் கிஞ்சித்தும் அஞ்சாமல் பரப்புரை செய்கிறார். 

தஸ்லிமா நஸ்ரின் அவர்களை மனமாறப் போற்றுவோம்.

==================================================================================

https://www.hindutamil.in/news/india/36368--9.html இல் வெளியான, தஸ்லிமா நஸ்ரின் அளித்த பேட்டியை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இப்பதிவு.