வியாழன், 28 ஜனவரி, 2021

நீதிதேவதையைக் கண் கலங்க வைக்கும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு!?

#சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை சமீபத்தில் ஒரு தீர்ப்பு அளித்தது. 'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என, அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, குழந்தைகள் நல அமைப்பான, ஐ.பி.பி.எப்., எனப்படும் சர்வதேசத் திட்டமிட்ட பெற்றோர் அமைப்பின் தெற்காசியப் பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தோலுடன் தோல் தொடர்பு இல்லாதது பாலியல் அத்துமீறலாகாது என்பதை ஏற்க முடியாது. இது ஒப்புதல் தொடர்பானது. இது போன்ற சம்பவங்களில், வயதில் மூத்தவரான ஒரு ஆண், தன்னைவிட வலு குறைந்த சிறுமியிடம் நடத்தும் அத்துமீறல் இதுவாகும்.

தனது வலுவைக் காட்டும் வகையிலேயே[வக்கிர உணர்ச்சியைத் தணிப்பதற்காக என்பதே சரி], இதுபோன்ற செய்கையில் ஈடுபடுகின்றனர். அதை ஒரு குழந்தையால் எப்படித் தடுக்க முடியும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக, இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதை உயர்நிலை நீதிமன்றம் ரத்து செய்யும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக்கான தேசியக் கமிஷன், மஹாராஷ்டிர அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளது. நாக்பூர் கிளையின் தீர்ப்பை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது#

இது, நேற்றைய நாளிதழ்ச் செய்தி[https://m.dinamalar.com/detail.php?id=2697262].

குழந்தைகள் நலப் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அமைப்புகள் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என்பது தீர்ப்பு.

தோலும் தோலும் தொடர்பில்லாத நிலையில் சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது தவறில்லை என்றால்.....

ஒரு முறை என்றில்லாமல், ஆடை மறைத்த மார்பகத்தை எத்தனை தடவையும் தொடுவதோ, கையை அகற்றாமல் விரும்பும்வரை தொட்டுக்கொண்டே இருப்பதோ, ஆடையுடன் சேர்த்து மார்பகத்தை வாயால் கவ்வுவதோ, ஆடை சிறிதும் விலகாத வகையில் கட்டி அணைப்பதோகூடத் தவறில்லை என்றாகிறது. 

சிறுமியை நெருங்கக்கூட வேண்டாம்; எட்ட நின்று பாலியல் இச்சையுடன் உற்று நோக்குவதும், ஆபாசமாகச் சைகைகள் செய்வதும்கூட, சிறுமியின் மன உணர்வைச் சிதைக்கும்தானே?

'அவன் அவளைப் பார்வையால் விழுங்கினான்; பார்வையாலேயே கற்பழித்தான்' என்றெல்லாம் கதாசிரியர்கள் எழுதுவார்கள். இப்படிப்பட்ட வக்கிர எழுத்துகளை நீதியரசர் படித்ததில்லையா, படித்தவர்கள் சொல்லக் கேட்டதில்லையா?

'பாலியல் இச்சையுடன், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல் மார்பைத் தொடுவது தவறில்லை' என்று இன்று தீர்ப்பு வழங்கும் நீதியரசர், நாளை 'பாலியல் இச்சை இல்லாமல் தோலோடு தோல் உரசினாலும் தவறில்லை' என்று தீர்ப்பு வழங்குவாரோ என்னும் அச்சமும் நம்முள் எழுகிறது.

நம் நீதியரசர்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். சிறுமியர் நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, இத்தீர்ப்புக்கு மாற்றாக ஏற்கத்தக்கதொரு தீர்ப்பை வழங்குவாராயின் அவர்கள் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை.

===================================================================================