சி.பி.கே. [திருச்சூர்] சாமியின் கேள்வி:
சின்னக் குழந்தையை முதுகில் உப்பு மூட்டை தூக்குவதில் ‘கிக்’ அதிகமா, மனைவியை உப்பு மூட்டை தூக்குவதில் அதிகமா?
பதில்:
குழந்தையைத் தூக்குகிற போது ‘கிக்’எங்கிருந்து வரும்?
அது ஒரு சுகமான சுமை. அது முதுகில் சவாரி செய்யும் முயல் குட்டி. ஒரு கூடைப் பூவைச் சுமந்து செல்லும் சுகம். குழந்தையின் தளிர்க்கரம் நம் கழுத்தைச் சுற்றியுள்ள மயிலிறகு. அதைச் சுமக்கும்போது நம் மனம் ஆனந்தத்தில் துள்ளும். ‘கிக்’ இங்கே மிஸ்ஸிங்.
இரண்டாவதோ..........
சற்றே கனமான சுமை. [மனைவியின் ஆரோக்கியத்தைப் பொருத்து அது கூடவும் செய்யும்!]
சுமப்பது சற்றுச் சிரமம் என்றாலும் வலியே தெரியாது.
மனைவியின் இதயம் நம் முதுகின் மீது, ‘படக்...படக்...’ என்று துடிப்பதை நாம் துல்லியமாய் உணர்வோம். அது பேசும் மொழி நமக்குப் பேரின்பத்தை வாரி வழங்கும்.
நம் காதோரம், “போதும் விடுங்க...பிளீஸ்” என்று கெஞ்சுவது போல் கொஞ்சுவாளே, அது ஓர் இன்னிசையாய் நம் நெஞ்சில் தேன் பாய்ச்சும்.
அவளின் தளிர்க் கரங்களில் பூசிய மஞ்சள் வாசனை நம் தலைக்குள் புகுந்து ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’ அடிக்கும்.
அவளின் நீண்ட வெள்ளரிப் பிஞ்சு விரல்கள் நம் கழுத்தில் மாலையாய்ப் பின்ன அந்தப் பிஞ்சுகளைச் செல்லமாய்க் கடிக்கத் தோன்றும். நம் ஒட்டு மொத்த மேனியும் சிலிர்க்கும்.
அகத்துறை இலக்கியத்தில்..........
தலைவி, தலைவனின் முதுகில் இப்படிச் சவாரி செய்யும்போது, தலைவன் சொன்னானாம்.....
“நங்கையே, இன்று வரையில் என் முதுகில் காயம் பட்டதாய்ச் சரித்திரம் இல்லை. இன்றுதான் உன்னால் என் முதுகில் இரு வேல் பாய்ந்து என் நெஞ்சுவரை தாக்கியதால் காதல் போரில் நான் புறமுதுகு காட்டியவன் ஆனேன்” என்று.
போதுமா நண்பரே?
===============================================================
பதில்: விக்கிரமாதித்தன், ‘மேகலா, `97 ஆகஸ்ட்’