பலவகைப்பட்ட ராமாயணங்களில் பௌத்த ராமாயணமும் ஒன்று.
அதில், தசரத ராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும், அவர்களில் மூத்தவளுக்கு ராமன் லக்ஷ்மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஓர் ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது. பரதனுக்குப் பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்த தசரதன் வாக்குத் தவறி ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான்.
ஆனால், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைக் காட்டுக்கு அனுப்பினான். பரதன் அவர்களைக் கொன்றுவிடுவான் என்ற அச்சத்தால் அவ்வாறு செய்தானாம்..
ஆயினும், பரதனோ ராமனைத் தேடிக் காட்டுக்குப் போய் அவனையே பட்டத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தான் நாட்டுக்குத் திரும்பி வர முடியுமென்றதாகவும், அதுவரை அவனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி பரதன் கேட்டு வாங்கி அழைத்துவந்ததாகவும், பன்னிரண்டு வருஷமான பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர்மக்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குத் திருமணம் செய்வித்துப் பட்டங் கட்டினதாகவும் சொல்கிறது பௌத்த ராமாயணம்.
அந்தக்காலத்தில் அண்ணனும் தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும், எகிப்து தேச ராஜதர்மமே சகோதரியை மணப்பது தான் என்றும் இதை அறிந்துதான் ரிக்வேதம் 10ஆவது மண்டலத்தில் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கும் மேலும் ஆதாரமாக, சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் என்பவர் தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின் பகுதிக் குறிப்பு 431ஆம் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
சீதை தசரதனுடைய மகள். அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார். சீதையின் பாதம் பூமியில் பட்டால் பூமி இழுத்துக்கொள்ளும் என்பதால், பூமியில் அவளின் பாதம் பட்டுவிடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான்.
தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாளாம். அப்போதே பூமிக்குள் மறைந்தும் போய்விட்டாள்.
பிறகு கொஞ்ச காலம் கழித்து, ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள்.
ஆனால் ஜனகனுக்கு அவள், தான் முன் வளர்த்து வந்த சீதை என்பது தெரியாமல் போனதால், அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டானாம்.
இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும், ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் ஐயங்கார் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்றியும் இதே தோழர் சீனிவாசய்யங்கார், “எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவனது மனைவியைத் தூக்கிக்கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு” என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாராம். அந்தச் சாபத்தின் பலனாய் ராவணனானவன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்துகொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும் பார்க்கவ புராணம் சொல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஐயங்கார்.
மேலும், சீதை ராவணன் மகள் என்றும், அவள் பிறந்த காலதோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னாராம். அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்து விட்டான். அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக்கொண்டு வரப்பட்டதாகவும், அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததான் என்பதாகவும் ஒரு கதை உண்டு என்கிறார் அவர்.
கதைகள் முழுக்க முழுக்கக் கற்பனையாகவே இருப்பினும், மிகுந்த சுவை பயப்பவை என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை!
===============================================================
'பகுத்தறிவு', கட்டுரை[மே 1936]