செவ்வாய், 5 ஜனவரி, 2021

குடிமகன்களுக்கேயான ஒரு சிறப்புக் குறுங்கதை!

“அப்பா, என்னோட வகுப்பாசிரியர் இன்னிக்கி உன்னைக் கையோட கூட்டிட்டு வரச் சொன்னார்” என்றான் பரணி, தன் தந்தை மாணிக்கத்திடம்.

“ எதுக்குடா?”

“தெரியல.”

“வேறெதுக்கு, ‘தினமும் கிழிஞ்ச சட்டை போட்டுட்டு வர்றான். புதுத் துணி எடுத்துக் குடு’ன்னு சொல்வாரு. மாசக் கடைசியில் முதலாளி சம்பளம் தருவாரு. புதுசு எடுத்துடலாம். நான் சொன்னதா உன் வாத்தியார்கிட்டே சொல்லிடு.”

முண்டாசுக் கட்டுடன், வழக்கமாக மூட்டை சுமக்கும் அரிசி மண்டிக்குக் கிளம்பினான் மாணிக்கம்.

அன்று மாலையில், சரக்கடித்துவிட்டு வீடு திரும்பிய மாணிக்கத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பரணியின் வகுப்பாசிரியர் மதிவாணன் அவன் வருகைக்காகக் காத்திருந்தார்.

மடித்துக் கட்டியிருந்த கைலியை அவசரமாக நெகிழவிட்ட மாணிக்கம், “ஐயா, மண்டியில் நிறைய வேலை இருந்துச்சி. அதான் வர முடியல. இந்த மாசச் சம்பளத்தில் பரணிக்குப் புதுத் துணிமணி எடுத்துடுறேன்” என்றான் பவ்வியமாக.

“அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் பையன் போடுற டிரஸ்ஸைப் பத்தி யாருக்கும் அக்கறை இல்ல. அவன் படிப்பைப் பத்திப் பேசத்தான் உங்களை வரச் சொன்னேன்......

.....உங்க மகன் ரொம்பப் புத்திசாலி. ரொம்ப நல்லா படிக்கிறான். மாதத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்குகிறவன். ஆனா, அது எப்பவாவதுதான். பெரும்பாலும் குறைச்ச மதிப்பெண்தான் வாங்குறான். ஏன் இப்படின்னு விசாரிச்சேன். 

‘அப்பா குடிச்சிட்டு வர்றதால தினசரி அம்மாவோட சண்டை போடுவார். படிக்கவே முடியாது. நல்ல புத்தி வந்து குடிக்காம கொஞ்ச நாள் இருப்பார். அப்போ நல்லா படிச்சி நிறைய மார்க் எடுப்பேன். அவர் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சதும் படிக்க முடியாம போயிடும்’னு சொன்னான்.

ஏய்யா, நீங்க குடிச்சி வீணாப் போறதும் இல்லாம பையனோட எதிர்காலத்தையும் பாழடிக்கிறீங்களே. இது உங்களுக்கே நல்லா இருக்கா? பையனுக்கு வாத்தியார் என்கிறதைத் தவிர உங்களோட எந்த ஒட்டுறவும் இல்லாத எனக்கு இவன் மேல இருக்கிற அக்கறைகூட இவனைப் பெத்த உங்களுக்கு இல்லையே” என்றார் மதிவாணன்.

“இனி கடவுள் சத்தியமா குடிக்க மாட்டேன். என்னை நம்புங்கய்யா.” -கண்ணீர் மல்கச் சொன்னான் மாணிக்கம்.

===============================================================