அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 11 பிப்ரவரி, 2021

போடாதே போடாதே! கோயில் உண்டியலில் பணம் போடாதே!!


தேவைக்கு மேல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையோ, வருமானவரிக் கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தையோ, சாமிகளுக்கான உண்டியலில் போடாமல் வேறு என்ன செய்வது என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்கக்கூடும். அவர்களுக்காகத்தான் பதிவு.

கோயில் உண்டியலில் நீங்கள் போடுகிற பணமோ தங்க நகைகளோ 100%  நல்ல வழிகளில்தான் செலவிடப்படுகிறது என்பது குறித்து நீங்கள் யோசித்ததுண்டா? "இல்லை" என்பதே உங்களில் பெரும்பாலோரின் பதிலாக இருக்கும்.

"கடவுளுக்கான காணிக்கை அது. இவ்வாறெல்லாம் யோசிப்பது பாவ காரியம்; கடவுள் தண்டிப்பார்" என்று பலரும் அஞ்சுவதே அதற்கான முக்கியக் காரணம்.

'அனைத்தையும் படைத்தவர் கடவுள்; மனிதன் பணத்தைக் கண்டறியக் காரணமானவரும் அவரே. அவருக்கெதற்குப் பணமும் நகை நட்டுகளும்?' என்று கொஞ்ச நேரம் சிந்தித்திருந்தால் செய்யக்கூடாத இந்தத் தவற்றைச் செய்திருக்க மாட்டீர்கள்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் உங்களைத் திருத்திக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டது போல், தேவைக்கு மேல் உங்களிடம் பணமோ விலைமதிப்புள்ள பொருள்களோ இருந்து, அவற்றை நல்ல வழிகளில் செலவிட விரும்பும் நல்ல மனமும் உங்களுக்கு இருந்தால்.....

கீழ்வருவது 'பி.பி.சி.' என்னும் இணைய ஊடகத்தில் வெளியான செய்தி[https://www.bbc.com/tamil/india-55930408]. முதலில் இதைப் படியுங்கள்.

#கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய்ப் பிரியாணிக் கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்குக் காரணம் இருபது ரூபாய்க்குப் பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாகப் பிரியாணிப் பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.

மதிய வேளையில், சாலையோரத்தில் இரு குடைகளுக்குக் கீழ் அமைந்திருந்த பிரியாணிக் கடையில் பரபரப்பாக இயங்கி வந்த ஷப்ரினாவை நேரில் சந்தித்தோம்.

சூடான பிரியாணியை ஷப்ரினா தட்டில் எடுத்து வைக்க, அவரது கணவர் வாழை இலையில் பார்சல் கட்டிக்கொண்டே இருந்தார். இருபது ரூபாய்ப் பிரியாணியை ருசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ஒருபுறம் வாடிக்கையாளர்கள் பார்சலை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்துச் செல்கின்றனர். மற்றொருபுறம் 'பசிக்கின்றதா.. எடுத்துக்கோங்க' என எழுதப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்பட்ட பிரியாணிப் பொட்டலங்களைப் பலர் எடுத்துச் செல்கின்றனர். இலவசப் பெட்டியில் பொட்டலங்கள் தீர்ந்ததைக் கவனித்த ஷப்ரினா, விறுவிறுவென்று சில பொட்டலங்களைக் கட்டி மீண்டும் பெட்டியில் வைத்துச் செல்கிறார்#

மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

உங்களிடம் உங்களின் தேவையை மிஞ்சிய பணம் இருந்தால், கோயில்களைத் தேடி ஓடாதீர்கள்; உண்டியலில் பணம் போடாதீர்கள். 

அந்தப் பணத்தை ஷப்ரினாவிடம் கொடுங்கள். அன்றாடம் ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாத மேலும் பலரின் பசிக்கு அவர் உணவு கொடுப்பார்.

இலவசப் பிரியாணிப் பொட்டலம் வழங்குவதை அவர் விளம்பரத்திற்காகச் செய்கிறார் என்று சந்தேகப்பட்டால், அவரின் செயல்பாட்டைச் சில வாரங்களோ, சில மாதங்களோ கண்காணியுங்கள். அவர் செய்யும் சேவைக்கு மனிதாபிமானமே காரணம் என்பது உறுதியான பிறகு அவருக்கு நீங்கள் துணை நிற்கலாம்.

கோவையில் மட்டுமல்லாமல் ஊரூருக்கு ஷப்ரினாக்கள் இருப்பார்கள்; தேடினால் கிடைப்பார்கள். நீங்கள் விரும்பும்போது விரும்புகிற ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டலாம். 

வெறும் அனுமானக் கடவுள்களையும், அவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் நம்பி முட்டாள் ஆகாதீர்கள்; மனிதாபிமானமுள்ள மனிதர்களை நம்புங்கள். பலரும் நம்பினால்.....

'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள். தலை காக்கிறதோ இல்லையோ, பல உயிர்களைக் காக்கும்!

=================================================================================