பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள்.
கோயிலுக்கு அருகே உள்ள போதமலையிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே வந்தாளாம். வந்த வேலை முடிந்து மலைக்குத் திரும்பும்போது பிரசவ வலி உண்டானதாம். அக்காலத்தில் தீண்டாமை வேரூன்றியிருந்ததால் பெண்கள் யாரும் உதவ முன்வரவில்லை.
'உதவிக்கு வராத ஊரிலுள்ள பெண்களுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது; பிணியும் வறுமையும் இவர்களை வாட்டட்டும்' என்று சாபமும் கொடுத்துவிட்டு, இறந்து பிறந்த தன்னுடைய இரு குழந்தைகளை ஓடையில் வீசிவிட்டு உயிர் துறந்தாள்.
அவளின் சாபம் பலித்தது.
மேலும், ஓர் ஆணின் கனவில் தோன்றி, 'ஆலமரத்தடியில் எனக்குச் சிலை வைத்து, மலைவாழ் மக்கள் முன்னின்று பூஜை செய்ய, ஆண்டுதோறும் ஆடுகளைப் பலியிட்டுச் சமபந்தி விருந்து வைத்து விழா நடத்த வேண்டும்' என்றும், 'அந்த விழாவில் எனக்கு உதவாத ஊர்ப் பெண்களை அனுமதிக்கக் கூடாது' என்றும் உத்தரவிட்டாள்.
அவ்வுத்தரவின்படி நூறாண்டுகளுக்கும் மேலாக ஆடி மாதத்து நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று விழவை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
நோய் நொடிகள் அகன்று, பெண்கள் அழகழகான குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்களாம்!
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரோ ஒருவர், அல்லது பல ஆண்கள் சேர்ந்து கட்டிவிட்ட கதையைச் சொல்லி, பெண்களைப் புறக்கணித்து[ஏமாற்றி?] ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கிடா விருந்து சாப்பிடுகிறார்கள் என்பது நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது.
பொங்களாயி அம்மனுக்குப் பலி கொடுக்கப்படுவதும் பெண் ஆடுதான் என்பது மிகப் பெரிய சோகம்!
=======================================================