ஓர் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்று தானாகத் தோன்ற முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படித் தோன்றுகிறதென்றால் அது நிச்சயம் மனித வேலையாகத்தான் இருக்கமுடியும். இதைக் கேரளப் பகுத்தறிவாளர்கள் முயன்று அம்பலப்படுத்தினார்கள்.
“1925-க்கு முன்பாகப் பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு எனும் தெய்வீக ஒளி காட்சியளிப்பதாக வயதான பெரியவர்கள் யாரும் சொன்னதில்லை. 1940க்குப் பிறகே இந்தக் கதை பரவியது” என்கிறார் ஜோசப் எடமருகு. இவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர்.
மகரஜோதி எப்போது முதன்முதலில் அம்பலப்படுத்தப்பட்டது என்பதைச் 'சபரிமலை அய்யப்பன் - உண்மையும் கதைப்பும்' என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.
“1940-களுக்குப் பிறகு பரப்பப்பட்ட மகர விளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் பகுத்தறிவாளர் சங்கத்தின் தீவிரப் பணியாளரான எம்.ஆர்.எ ஸ். நாதன்தான்.
கேரளப் பகுத்தறிவாளர்கள், மகரஜோதி மடமையைத் தோலுரித்த போதும் அய்யப்ப சேவா சங்கமும் தேவஸ்வம் போர்டும் பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
1990ஆம் ஆண்டு பகுத்தறிவாளர்களின் உண்மை விளக்கப் பேரணி தொடர்பான பிரச்சினையின்போது, அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனார், “தேவஸ்வம் போர்டுதான் மகரஜோதியை ஏற்றுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான், பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லும் பேரணியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
கடவுளின் பெயரால், ஒரு புரட்டு காலம் காலமாக நடந்து வருகிறது. அதை ஆதாரபூர்வமாகப் பகுத்தறிவாளர்கள் நிரூபிக்கிறார்கள். இதற்குப் பின்னும் சபரிமலை சாஸ்தாவை நோக்கிச் சென்று தம் பொருளையும், அறிவையும் இழக்கும் பக்தர்களை என்னவென்பது?