வியாழன், 18 பிப்ரவரி, 2021

கூடிக்களித்தல்[லிவிங் டுகெதர்]!!!

#நடிகை 'ஷமதா அஞ்சன்' ஒரு வருட 'லிவிங் டுகெதர்' முடிந்து காதலரைக்[கவுரவ் ஷர்மா] கரம் பிடித்தார்#[https://tamil.filmibeat.com/news/darbar-actress-shamata-anchan-got-married-080326.html] என்பது செய்தி.

கடந்த ஆண்டு ரஜினியின் தர்பார் படத்தில் ரஜினிக்கு உதவும் பெண்ணாக[போலீஸ் அதிகாரி] 40 நிமிடம் நடித்துள்ளாராம். 

"ஒன்றாக ஒரு வருடம் கழித்த[கூடிக்களித்தல்!] பிறகு வாழ்நாள் முழுவதையும் ஒருவருக்கொருவர் செலவிட விரும்புகிறோம் என்பது எங்களுக்குப் புரிந்தது. புதிய ஆண்டு அழகாகத் தொடங்கியுள்ளது" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இந்த நடிகை.

'வாழ்நாள் முழுவதும் இருவரும் ஒன்றாகச் செலவிட விரும்புகிறோம் என்பது புரிந்தது" என்கிறார். இப்படிச் சுற்றிவளைக்காமல், 'கல்யாணம் பண்ணிக்கப் போறோம்'னு இரண்டு மூன்று  வார்த்தைகளில் முடித்திருக்கலாம்.

'சேர்ந்து வாழ்ந்த ஒரு வருடத்தில் அந்தரங்க சுகானுபவம் திருப்தியாக இருந்தது' என்கிறார். அந்த ஒரு வருடத்தில் திருப்தி கிடைக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இருவரும் பிரிந்திருப்பார்கள். அப்புறம்..... 

திருமணம் இல்லாமலே காலம் கடத்துவதா? அல்லது, இன்னொருவருடன் சேர்ந்து இன்னொரு வருடம் 'கூடிக்களித்து'க் கழிப்பதா? அப்படிக் கழித்தும் திருப்தி கிடைக்காவிட்டால்..... 

வேறொரு ஆளைத் தேடிக்கொள்ளலாம்தானே?

ஒருவேளை, திருப்தி கிடைக்காமல் போவது தொடருமேயானால்.....

'லிவிங் டுகெதர்' என்ற பெயரில் எத்தனை பேருடனும் கூடிக் களிக்கலாமா?

இதற்கு வரம்பே கிடையாதா?

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படிக் கூடிக் கும்மாளம் போடும் வாழ்க்கை முறையை அறிமுகம் செய்த உலகமகா புத்திசாலி யார்?!

அவர் யாராயினும், 'கல்யாணம்' என்னும் ஆயுள் சிறையில் சிக்கிக்கொள்ள விரும்பாத  இன்றைய இளசுகள் அவரைப்  பாராட்டி மகிழவே செய்வார்கள்.

நம் போன்ற கிழடுகளின் மனதில்தான் புகைச்சல்!!!

=================================================================================