அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 24 பிப்ரவரி, 2021

சில நேரங்களில் சில பெண்டாட்டிகள்![சிரிக்கவும் சிந்திக்கவும்]

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

”போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.


======================================================================================
பழைய ராணி வார இதழில் வெளியான என் கதை