அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 11 மார்ச், 2021

நாதியற்றுப் போகுமா நாத்திகவாதம்?!?!

கடவுள் நம்பிக்கையின் விளைவாகவும், ஆன்மிகம் வளர்ப்போரின் அயராத பரப்புரையின் பலனாகவும்  நம் மக்கள் சுமந்து திரியும் மூடநம்பிக்கைகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்புக்கென்றே தம் வாழ்நாளின் மிகப் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர் பெரியார். அவரைப் பின்பற்றி, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம்வரை, நாத்திகம் பேசிக்கொண்டிருந்த திராவிட இயக்கத் தலைவர்கள், தடம் பிறழ்ந்து ஆத்திகர்களாக மாறினார்கள்[அறிஞர் அண்ணா: "ஓன்றே குலம்; ஒருவனே தேவன்"]. 

பொதுவுடைமை இயக்கங்களைச் சார்ந்தவர்களில் கணிசமானவர்கள் 'நாத்திகர்கள்' என்று அறியப்படுகிறார்களே தவிர, அவர்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை.

முழு முனைப்புடன் தீவிர அரசியல் செய்யும் நடிகர் கமலஹாசன், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பகுத்தறிவாளன். கடவுளை வணங்காதவன்"  என்றவர், பிறிதொரு பேட்டியில் "நான் நாத்திகவாதியல்ல" என்றார். கடவுளை நம்பாதவன் நாத்திகவாதிதானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் நமக்கு அவர் ஒரு குழப்பவாதியாகத்தான் தெரிகிறார்.

நாத்திகவாதியோ, பகுத்தறிவுவாதியோ கடவுள் நம்பிக்கை காரணமாக மக்கள் கொண்டுள்ள மூடத்தனங்களைக் கண்டிக்கும் நோக்கம் அவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

பகுத்தறிவை வளர்க்கும் மன்றங்கள் பலவும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயங்கிக்கொண்டிருந்ததை நாம் அறிவோம். அந்த இயக்கங்கள் எல்லாம் இந்நாளில் என்ன ஆயின என்று அறிய இயலவில்லை.

ஆக,

பல மூடநம்பிக்கைகளுக்கு மூலமாக விளங்குகிற கடவுள் நம்பிக்கையைச் சாடும் இயக்கங்களோ, இறைமறுப்பாளர்களோ இங்கு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது இன்று இணைய ஊடகம் ஒன்றில் வாசித்த கட்டுரை.

அதை உங்களுடன் பகிர்கிறேன்.

#பெரியார் சமூக நீதி, ஜாதி, கடவுள், பெண்கள், பார்ப்பனர்கள்... இப்படிப் பல விஷயங்களில் தனக்கு என்று ஒரு கருத்து வைத்திருந்தார். சில கருத்துக்களை அவரே பின்னர் மாற்றிக் கொள்ளவும் செய்தார். உதாரணத்துக்கு, திருக்குறள் பற்றிய பார்வை, முதலில் வேறாக இருந்தது. பிறகு அதை மாற்றிக் கொண்டார். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்றார். பிறகு, தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், கடவுள் எதிர்ப்பு என்பதில் மாத்திரம் அவர் உறுதியாக இருந்தார். அவர் விமர்சனம் கடுமையாக இருந்தது. எனவே அதற்கு எதிர்ப்பும் கடுமையாக இருந்தது. ஆனால், அதற்காக அவர் பயப்படவில்லை. தனது கருத்தை, தொடர்ந்து சொல்லி வந்தார்; எழுதி வந்தார். அவருக்கு என்று ஆதரவாளர்களும் இருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியபோது, அண்ணாவும் ஆரம்பத்தில் நாத்திகச் சித்தாந்தத்தில் நம்பிக்கையோடுதான் இருந்தார். காலப் போக்கில் அண்ணாவின் நாத்திகப் பார்வை வேறு மாதிரியானது. திராவிடர் கழகத்தில் இருந்தபோது கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்த அண்ணா, திமுக தொடங்கிய சில காலத்திற்குப் பிறகு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார். பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன்...பிள்ளையாருக்குத் தேங்காயையும் உடைக்க மாட்டேன் என்றார்.

அப்போது ‘ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் அண்ணா’ என்று பெரியார் அவரை விமர்சித்தார். ஒரு காலத்தில், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக ஏசிய பெரியார், 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார். அண்ணாவைக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி நாத்திகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி. காமராஜரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அண்ணா மேல் இருந்த கோபத்தில், பெரியார் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அண்ணாவைத் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துப் பிரச்சாரம் செய்தார். பெரியார், காங்கிரஸ் கட்சியை ஆதரித்துப் பேசும்போது, காமராஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் தலைவர் என்று புகழ்ந்தார்.

அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதி திமுக தலைவரானார். இந்து அறநிலையத் துறை சார்பாகக் கோயில்களில் திமுக உறுப்பினர்களை அறங்காவலர்களாக நியமித்தார் கருணாநிதி. கருணாநிதி அவ்வப்போது நாத்திகம் பேசினாலும் “நான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல.. பார்ப்பனியத்துக்குத்தான் எதிரி” என்று புதுவிளக்கம் எல்லாம் தந்தார்.

திருவாரூர் தியாகராஜர் தேரை மீண்டும் ஓடவிட்டதைப் பெரிய சாதனையாகப் பேசினார் கருணாநிதி. பெரியார் மறைவிற்குப் பிறகு வீரமணி திராவிடக் கழகப் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஆனால், அவர் தீவிர நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர் என்று சொல்லப்படவில்லை. பெரியார் திடலில் இயேசு பிரச்சாரம் நடந்தது. இந்துக்கள் திருமணம், சமஸ்கிருத மந்திரம் ஓத, வெங்கடாஜலபதி படம் எல்லாம் வைத்து இந்து முறைப்படி திருமணங்கள் நடந்துவருகிறது. எல்லாம் பணம் செய்யும் மாயம். அதனால்தான் தங்களது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சட்டசபையில் ‘நான் பாப்பாத்தி தான்’ என்று சொன்ன ஜெயலலிதாவிற்குச் சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்தார் வீரமணி.

ஸ்டாலின் திமுக, ஆன்மீகவாதிகள் நிறைந்த கட்சியாகக் கிட்டத்தட்ட மாறிவிட்டது. மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, கருமாரியம்மன் கோயில், மாங்காடு, ஐயப்பன் கோயில் என்று அவர் போகாத கோயில் இல்லை. அறிவாலயம் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார்களில் வெங்கடாஜலபதி, முருகர் படம் என்று ஆன்மீகம் அறிவாலயத்துக்கு உள்ளும் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டது. துர்கா ஸ்டாலின் தனது கணவருக்காகப் போகாத நரசிம்மர் கோயில் இல்லை. காசி, திருப்பதி என்று எல்லாத் திவ்ய தேசத்திற்கும் துர்கா ஸ்டாலின் போய்வந்து கொண்டிருக்கிறார். கருப்பர் கூட்டம் கந்த சஷ்டிக் கவசச் சர்ச்சையை ஏற்படுத்தியபோது, இவர்களை இயக்குவது திமுகதான் என்று பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்தபோது, அலறி அடித்துக்கொண்டது திமுக. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ‘திமுக வில்-ஒரு கோடி இந்துக்கள் உறுப்பினர்கள்’ என்றார்.

கோயிலுக்கு முக்கிய வருமானமே திமுகவினர் போடும் ஆயிரம், 2000, 5000 காணிக்கைகள்தான் என்று பேசினார் பாரதி. திருச்செந்தூர் கோயில் வாசலில் நின்றபடியே ஆர்.எஸ். பாரதி ‘என் குலதெய்வமே இவர்தான்’ என்றார்.

பாரதிய ஜனதா கட்சியினர் திரும்பத் திரும்ப திமுகவை இந்து எதிர்ப்பாளர் என்று பிரச்சாரம் செய்ய... திமுகவினர் இந்துக்களுக்கு ஆதரவாக என்னென்ன செய்தார்கள் என்றெல்லாம் பேசினார்கள். திமுக ஆட்சியில் இந்துக் கோயில்களுக்கு என்னென்ன செய்யப்பட்டது என்று ஒரு தொடரையே, முரசொலியில் எழுதி இந்துக்களைச் சமாதானம் செய்ய முயற்சி செய்தது ஸ்டாலின் கட்சி. இப்போதும்கூட திமுக தலைவர்கள் இந்து ஆதரவுப் பிரச்சாரங்களை, தொடர்ந்து செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் வீரமணியைக்கூட கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார்கள். வீரமணியும் திமுகவின் திடீர் கடவுள் ஆதரவு மற்றும் இந்து ஆதரவுப் பேச்சுக்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.

ஆதிமுக-வைப் பொருத்தவரை அண்ணா பெயரில் கட்சி இருந்தாலும், எம்ஜிஆர் கடவுள் பக்தியுடன்தான் இருந்தார். அடிக்கடி மூகாம்பிகை கோயிலுக்குப் போனார். அதே சமயம் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை, அரசு அலுவலகத்தில் எம்ஜிஆர்தான் அறிமுகப்படுத்தினார். தீவிர பெரியார் பக்தரான நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத் தலைவியாக இருந்தார். ராஜாராம் தனது சட்டைப்பையில் வெங்கடாஜலபதி படத்தை வைத்துக்கொண்டுதான் வீட்டை விட்டுக் கிளம்பினார். அவரும்கூட ஆரம்பத்தில் நாத்திகச் சித்தாந்தத்தில் நம்பிக்கை உடையவராக இருந்தவர்தான். முதல்வராக இருந்த ஜெயலலிதாவைப் பொருத்தவரை ஆடி அமாவாசை, கிருஷ்ண ஜெயந்தி என்று எல்லா இந்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் செய்தி சொன்னார். 

ஆக மொத்தத்தில் இப்போது திராவிடக் கட்சிகள் உரத்த குரலில் நாத்திகம் பேசுவது இல்லை என்பதுதான் உண்மை. 

இதற்கு முக்கியக் காரணம் இன்றைய மக்களின் அடிப்படை ஆன்மீக உணர்வு. இன்றைய நவீன உலகில்கூட மக்களின் பக்தி உணர்வை அது எந்த மதமானாலும் கட்டுப்படுத்த முடியவே இல்லை என்பதே நிஜமான உண்மை!#

======================================================================================

நன்றி: https://vikatakavi.in/magazines/188/6718/Kanamal-poona-nathigamjason.php 19 Dec, 2020 

நீட்சி அஞ்சி, கட்டுரை சற்றே சுருக்கப்பட்டது.