சனி, 13 மார்ச், 2021

தற்கொலை புரியும் கள்ளக்காதலர், உறவில் 'உச்சம்' தொட்டவர்களா?!?!


காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள முடியாத ஆணும் பெண்ணும் தற்கொலை செய்துகொள்வது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. காதலைப் புனிதமானது என்று இளசுகளை நம்பவைத்து, அவர்களை மனநோய்க்கு உள்ளாக்கியது, கவிஞர்கள், கதாசிரியர்கள், திரைப்படக்காரர்கள் போன்றோரின் கைங்கரியம் ஆகும்.

காமம் என்னும் உணர்ச்சிக்குத் தெய்வீகத் தன்மை என்னும் முலாம் பூசியவர்கள் இவர்கள்தான். இதை ஒரு தொழிலாகச் செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் திருந்துவார்களேயானால் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் நிகழவே நிகழாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

காதலர்களைப் போலவே 'கள்ளக் காதலர்கள்'['கள்ளக் காமுகர்கள்' என்பதே சரியான சொல்லாட்சி] எனப்படுவோரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

கள்ளக் காதலர்கள் எனப்படுவோர், 'கள்ளத்தனமாக, அதாவது, திருட்டுத்தனமாக உடலுறவில் ஈடுபடுபவர்கள் ஆவார்கள். இந்தக் கள்ள உறவு, இவர்களின் சொந்தபந்தங்களுக்குத் தெரியவரும்போது இவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்[இடைஞ்சலாக இருக்கும் இல்வாழ்க்கைத் துணைவர்களையோ, இளம் சிறார்களையோ, உறவினர்களையோ தீர்த்துக்கட்டுபவர்களும் இருக்கிறார்கள்] .

உயிரை மாய்த்துக்கொள்வது பொதுவான நிகழ்வு எனினும், அதற்கான காரணங்கள் வேறு வேறானவை.

குடும்ப கௌரவம், அல்லது, தன்மானம் பறிபோவதைத் தாங்கிக்கொள்ள இயலாமை ஒரு முக்கியக் காரணம்.  இது ஆண் பெண் என்னும் இருபாலருக்கும் பொதுவானது.

பெண்ணின் கணவனோ, கணவனின் மனைவியோ, அவர்களைச் சார்ந்தோரோ கண்டிக்கவில்லை என்றால் அல்லது, கண்டுகொள்ளாமல் இருந்தால் கள்ள உறவைத் தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

"இனியொரு தடவை ஒன்னா இருக்கிறதைப் பார்த்தா வெட்டிப் போட்டுடுவேன்" என்று தாலி கட்டியவனோ, பெண்ணின் குடும்பத்தார் யாருமோ கடுமையாக எச்சரிக்கை செய்யும்போதுதான், திருட்டுத்தனமாக உடலுறவைத் தொடரும் இருவர் தற்கொலையைத் தேர்வு செய்கிறார்கள்.

அடி உதை பட்டாலும், அஞ்சாமலும் அயராமலும் இன்பசுகம் பகிர்ந்து, கள்ள உறவு பேணும் இணைகளும் இருக்கவே செய்கின்றன.

இனியும் தொடர்ந்தால் நம்மை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள் என்னும் ஆபத்தான நிலை உருவாகும்போதுதான் ஓடிப்போகிறார்கள்; அல்லது, இணைந்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

நமக்குள்ள விடை தெரியாத கேள்வி என்னவென்றால்.....

இனி இணைவது சாத்தியமே இல்லை என்னும்போது பிரிந்து இருந்துவிடலாம்; திருந்தி வாழலாம். 

திருந்தவே இயலாது என்றால், "இவர் இல்லாவிட்டால் இன்னொருத்தர்", "இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி" என்று இவ்வகையில் மனதைத் தேற்றிக்கொள்ள இருவருமே தவறுவது ஏன்?

"உடலுறவு சுகம் பெறுவதில் என்னை உச்சம் தொட வைக்கும் இவர் போல இன்னொருவர் கிடைக்க மாட்டார்" என்று அவள் நம்புவது காரணமா? "இவளைப் போல ஒத்துழைப்புத் தருவதற்கு இனியொருத்தி வாய்க்க மாட்டாள்" என்று அவனும் எண்ணுகிறானா?

'கள்ளக்காதல் ஜோடி தற்கொலை' என்னும் செய்தியை வாசிக்கும்போதெல்லாம் என் மனதில் எழும் கேள்வி.....

"உயிரினும் மேலாக மதிக்கப்படுகிற இந்தக் கள்ளப் புணர்ச்சி தரும் சுகத்துக்கு ஈடு இணை என்று எதுவும் இல்லையோ?!

======================================================================================