அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 16 மார்ச், 2021

வேட்டைக் காடுகள்!!


#என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. அது விசயத்தில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டு விலங்குகளைக் கொஞ்சம்கூடப் பயமில்லாமல் சர்வசாதாரணமாக வேட்டியாடுவார் என்று ஊரார் சொல்லுவார்கள்.

"தாத்தா, கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா" என்று நான் சிறுவனாக இருந்தபோது ஒரு தடவை அவரிடம் கேட்டேன். 

"அடேய் பையா, வேட்டைக்குப் போவதே அந்தத் திரில்லுக்காகத்தானே?" என்று கேட்டுச் சிரித்தார் தாத்தா.

ஆமாம், வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ரொம்பவும் ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. 

காடு என்பது அதிபயங்கரமான இடம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டு மிருகம் பாயுமோ என்பதையெல்லாம் அனுமானிக்கவே முடியாது. எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு காட்டு விலங்கால் தாக்கப்பட்டு உயிரைப் பறி கொடுக்க நேரலாம். இருந்தும், அதில் ஈடுபாடுடையவர்கள் வேட்டைக்குப் போவதைத் தவிர்ப்பதில்லையே, ஏன்?

இம்மாதிரியான சவாலான செயல்களைச் செய்வதில் அளப்பரிய சுகம் கிடைக்கிறது என்பார்கள். அது உண்மைதான்.

மன்னர், தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ சிங்கத்தையோ பிடித்துவரச் செய்து, அதை மரத்தில் கட்டிவைத்து அம்பெய்தோ துப்பாக்கியால் சுட்டோ கொன்றுவிட முடியும். ஆனால், பெரிதாகச் சந்தோசப்பட்டுக்கொள்ள அதில் ஏதுமில்லை.

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையிலிருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தான் முழுமையான மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கிறது.

இதுவொரு மாய வேட்டை.

இந்தக் கோணத்தில் சிந்தித்தால், வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதான். எதிர்பாராத நபர்களிடமிருந்து எதிர்பாராத நேரத்தில் தாக்குதல்கள் வரும். அவற்றால் உண்டாகும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி ஈட்டுவதில்தான் பெருமளவில் மகிழ்ச்சி கிடைக்கிறது.

"இவன் இப்படிச் செய்துவிட்டானே; என் ஆருயிர் நண்பன் எனக்குத் துரோகம் செய்வானென்று நான் கனவிலும் நினைக்கவில்லையே; செழித்து வளரும் என்று நினத்துத் தொடங்கிய வணிகம் இப்படிப் படுத்துவிட்டதே" என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதால் எந்தவிதப் பயனும் இல்லை. 

வேட்டைக்குப் போகும் எவரும், "இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது அநியாயம்" என்று புலம்புவதில்லை.

நாம் நம் வாழ்க்கையையும் ஒரு வேட்டைக் காடாக நினைத்துக்கொண்டால் எந்தவொரு சவாலையும் அஞ்சாமல் எதிர்கொள்ளலாம்; வெற்றி மேல் வெற்றி பெற்றுச் சாதனைகள் நிகழ்த்தலாம்! -சுவாமி சுகபோதானந்தா#


======================================================================================