அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 17 மார்ச், 2021

சீச்சீ...ச்சீய்...இந்தச் சாமியார்கள்!!!

நன்றி: 'இந்து' நாளிதழ்

சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று தங்கியிருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணித்துச் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.

சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்யவிருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா, மரணித்த பின்னரும் இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார்.  ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார்.

அருளாசி வழங்க[?] 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் பெரிய பெரிய மனிதர்களே விழுகிறார்கள். அவரின் வருமான வரி ஏய்ப்புக்கும் உதவி செய்கிறார்கள். வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் கால் கடுக்கக் காத்து நிற்கிறார்கள்.

"விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள்" என்று திமிராகப் பேசும் இரவி சங்கரைத் தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.

அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்ஐ.பி.என். தொலைக்காட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை; போற்றிப் புகழ்ந்து அவர்தம் புகழ் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

போலி வேடம் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும், சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை, இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கிவிடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன போலிச் சாமியார்கள்.

======================================================================================

நன்றி: இளநம்பி[புதிய கலாச்சாரம்]

https://rsyf.wordpress.com/tag/