தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எவை என்பதையும் அய்யாக்கண்ணு அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.
அம்மணக் கோலத்தில் சென்று 'மனுத் தாக்கல்' செய்யத் துணிந்த அஞ்சாநெஞ்சரான அய்யாக்கண்ணு அவர்களைப் பாராட்டுவதோடு, யாமறிந்ததோர் ஆலோசனையையும் அவருக்கு வழங்கிட விழைகிறோம்.
அய்யாக்கண்ணு அவர்களே,
பிறந்த மேனியராய் 'மனுத் தாக்கல்' செய்யும் திட்டத்தை நீங்கள் அம்பலப்படுத்திவிட்டீர்கள். தேர்தல் அதிகாரியின் அலுவலகம் நோக்கிப் புறப்படும்போதே போலீசு உங்களைக் கட்டிய கோவணத்தோடு கைது செய்து வாகனத்தில் ஏற்றிவிடும். ரகசியம் காக்காதது நீங்கள் செய்த மிகப் பெரும் தவறு.
அதோடுகூட, நீங்கள் நிர்வாணமாகச் சென்று 'மனுத் தாக்கல்' செய்வதால் பலன் ஏதும் விளைந்துவிடாது என்பதை உணருங்கள். 'பாஜக'வைத் தண்டிக்க விரும்பும் உங்களுக்கு நாம் வழங்கும் மகத்தான மாற்று யோசனை ஒன்றுளது. அது.....
*அம்மணக் கோலத்தில் சென்று 'மனுத் தாக்கல்' செய்யும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக முதலில் அறிவியுங்கள்[இது காவல்துறையை ஏமாற்றும் ஒரு தந்திர உத்தி].
*வாக்கெடுப்புக்குச் சில நாட்கள் இருக்கும்போது, வேட்பாளர்களின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டிவிடும். அத்தகையதொரு சூழலில், பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் உங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆட்களை அணி பிரித்து அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 100 பேராவது இடம்பெறுதல் மிகவும் அவசியம்.
*தெருக்களில் சன நெரிசல் மிகுந்து காணப்படும் தருணம் பார்த்து, உங்கள் அணியினர் பா.ஜ.க. கொடியைக் கையில் ஏந்தி, "உங்கள் ஓட்டு பா.ஜ.க.வுக்கே" என்று முழக்கமிட்டவாறு அணிவகுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது ஒட்டுத் துணிகூட உடம்பில் இருத்தல் கூடாது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளுதல் மிக மிக மிக முக்கியம். 'தேமே' என்று கால்கடுக்க நின்றுகொண்டிருக்கும் வெகு சில போலீசாரால் உடனடியாக அவர்களைக் கைது செய்ய இயலாது என்பதைக் கருத்தில் கொள்க.
பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் இதை நிகழ்த்திக் காட்டினால் 20 வேட்பாளர்களும் வாக்காளர்களின் கடும் வசவுக்கு உள்ளாகிப் படுதோல்வியைச் சந்திப்பார்கள் என்பதில் எள்முனை அளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.
எம் அன்புக்குரிய அய்யாக்கண்ணு அவர்களே,
இத்திட்டம் நிறைவேறும்வரை, இது நீங்களும் நாமும் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கட்டும்.
வென்றிடுக விவசாயிகள் சங்கம்! தோற்றிடுக பாஜக வேட்பாளர்கள்!!
======================================================================================
கொசுறுச் செய்தி:
#தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏப்., 6இல் நடக்கிறது. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளைத் தவிர, மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு, இந்தியத் தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. சின்னங்களின் பெயர்கள் ஆங்கிலம், ஹிந்தியில் இடம் பெற்றுள்ளன. அவை, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலக அறிவிப்புப் பலகையில், சுயேச்சை வேட்பாளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆப்பிள், ஏர் கண்டிஷனர், அலமாரி, பலுான், பேங்கிள்ஸ், பேட், பேட்ஸ்மேன், பெல்ட், பெஞ்ச், பிரட், பாக்ஸ், பக்கெட், கேக், பிஸ்கட், பிளாக்போர்டு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றுள்ளன# -தினமலர்