நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. குளுக்கோஸ் பிரத்தியேக முறையில் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் செல்கள் அவற்றின் இயக்கத்திற்குப் பயன்படுத்துகின்றன. இதுபோல, நமது உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது.
உயிர்க்காற்று[ஆக்சிஜன்]?
உடலின் இந்த ஆக்சிஜன் தேவைக்கு வெளிக்காற்றில் உள்ள ஆக்சிஜனைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். வெளிக்காற்று மூக்குத் துவாரங்களின் வழியாகப் புகுந்து மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களை அடைந்து அங்குள்ள எண்ணற்ற நுண்ணறைகளை நிரப்புகிறது. அந்த நுண்ணறைகளின் சுவர்களில் இரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன.
அந்த இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் இரத்தச் சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின், காற்றிலுள்ள ஆக்சிஜனைக் கிரகித்துக்கொள்கிறது. பின்னர், இந்த ஹீமோகுளோபின் இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் செல்கள் அனைத்துக்கும் தேவையான ஆக்சிஜனைக் கொண்டு கொடுக்கிறது.
செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவது மட்டும் மூச்சு மண்டலத்தின் வேலை இல்லை.
வளர்சிதை மாற்றச் செயல்களின்போது ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மூச்சுக் காற்றின் வழியாக உடலுக்குள் புக முயலும் நோய்க் கிருமிகளை வடிகட்டித் தடுத்து நிறுத்துவது, நாம் பேசும்போது ஒலியை எழுப்புவதற்குத் தேவையான காற்றை வழங்குவது போன்ற மற்ற வேலைகளையும் மூச்சு மண்டலம் கவனித்துக்கொள்கிறது.
மூச்சுக் காற்று போலவே நம் உடலுக்குச் சளியும் தேவையானதுதான். அது உடலுக்குப் பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது. சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அவை நுரையீரலில் உள்ள சளியில் சிக்கிக்கொள்ளும். இந்தச் சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது.
ஓரிரு நிமிடங்களேனும் மூச்சை நன்கு இழுத்து விடுவது, சளியை வெளியேற்றுவதற்கான சிறந்த வழியாகும்.
கொரோனா கிருமிகள் தொண்டைச் சளியில் குடியேறித்தான் நுரையீரலைச் சென்றடைந்து அதைச் சிதைத்து நம் உயிரைப் பலி கொள்கின்றன. மூச்சுப் பயிற்சியானது, கொரோனா தொண்டைச் சளியில் ஒட்டியபோதே அதை வெளியேற்றி நுரையீரலுக்குள் நுழைந்துவிடாமல்
தடுத்துவிடுகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
மூச்சுவிடுவது சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. சுவாசத்தைச் சரியாகச் செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்தால் சிறந்த பல பலன்களைப் பெற முடியும்.
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடமும் மாலையில் 5 நிமிடமும் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும் என்பது பொதுவானதொரு கருத்து.
காலை நேரத்தில் இதமான வெயிலில் அமர்ந்து, அரை மணி நேரம் போல[இடைவெளி விட்டு] மூச்சை இழுத்துச் சற்று நேரம் நிறுத்திப் பின்னர் வெளியேற்றுவது மிகுந்த பயனைத் தருவதாக அமையும்['யோகா' பயிற்சி பெற்றவர்கள் அதைத் தொடரலாம்].
நடைப் பயிற்சியில் ஈடுபடும்போதும்கூட அவ்வப்போது மூச்சை இழுத்துவிடலாம்.
இரவில் உறங்கச் செல்லும்போது, நீட்டிப் படுத்த நிலையில் உறக்கம் வரும்வரை மூச்சை இழுத்துவிடுவது ஆழ்ந்த உறக்கத்திற்கு மட்டுமல்லாமல், உடல் நலன் பேணவும் வழிகோலுகிறது.
மூச்சுப் பயிற்சியைப் பொருத்தவரை, கொஞ்சமும் சிரமப்படாமல், மன மகிழ்ச்சியுடன் இதனைச் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.
மூச்சுப் பயிற்சியால் உடலுக்குள் செல்லும் நச்சுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
காய்ச்சல் அல்லது அதிகப்படியான உடற்சூடு மூச்சுப் பயிற்சியால் தணியும்.
கொரோனா மட்டுமல்லாமல் ஏனைய தொற்றுகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.
இளம் வயதிலிருந்தே தொடர்ந்து இப்பயிற்சியை மேற்கொள்வதால், இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
முதுமைப் பருவத்திலும், மூளைச் செல்கள் புதுப்பிக்கப்பட்டுச் சுறுசுறுப்பாகச் செயல்பட இப்பயிற்சி பயன்படுகிறது.
பெருமூச்செறிவதன் மூலம் மனப் பதட்டத்தைத் தணிக்கலாம்.
ஆக, மூச்சுப் பயிற்சியால் பெறும் பயன்கள் மிகப் பலவாகும் என்பதை அறிந்துணர்ந்து அனைவரும் செயல்படுதல் வேண்டும் என்பது என் உளப்பூர்வமான வேண்டுகோள் ஆகும்.
நன்றி.
======================================================================================