வெள்ளி, 23 ஏப்ரல், 2021

இழந்த சக்தியை மீட்டெடுக்க 'இலவச'ப் பாலுறவுச் சிகிச்சை!!!

[ரோனித் அலோனி]

பணத்துக்காக உடலுறவுக்கு உடன்பட்டால் அது விபச்சாரம். அதையே இலவசமாகச் செய்தால்.....

அது தியாகமாக ஆகிப்போவதும் உண்டு.

எதற்காக இந்தத் தியாகம்? உலகில் எங்கெல்லாம் நடக்கிறது?

'ஒருவரைப் பாலியல் துணைவராக[தொழிலாளி அல்ல]ப் பயன்படுத்தி நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் இந்தப் பணி  பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது' என்பது நமக்குப் பேராச்சரியம் தரும் செய்தி. 

இதில் முன்னணி வகிக்கும் நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றிருப்பது 'இஸ்ரேல்' ஆகும்.

ஆம், இஸ்ரேலிய அரசாங்கம் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக இந்தப் பணியை அனுமதித்திருக்கிறது. 

சுற்றிலும் பகை நாடுகள் இருப்பதால் அடிக்கடி போர் நிகழ்கிறது. பெரும் எண்ணிக்கையிலான படை வீரர்கள் காயம் அடைகிறார்கள். ஒரு வீரர் காயமடைந்து, அவரின் பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டால், அரசே அவருக்கு வாடகைத் துணை மூலம் சிகிச்சையளிப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது.

இந்தச் சிகிச்சைக்காகத் தனிப்பட்டவர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மனிதாபிமானத்தின் உச்சம்.

'ரோனித் அலோனி' என்பவர் இம்மாதிரியான தியாகத்தைச் செய்துவரும் அதிசயப் பெண் ஆவார்.

டெல் அவிவ் நகரில் பாலியல் சிகிச்சையளிக்கும் இவரின் அறையில்  வாடிக்கையாளர்கள் அமர சொகுசான சோபா, விளக்கமளிப்பதற்கு ஆண், பெண் உறுப்புகளின் வரைபடங்கள் ஆகியவை உள்ளன.

பக்கத்து அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படுக்கை இருக்கும். இங்குதான் வாடகைத் துணைவர்கள், அலோனியின் வாடிக்கையாளர்களுக்குப் பாலியல் பாடம் எடுப்பார்கள். உறவில் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதைக் விவரிப்பார்கள்; இணைசேரக் கற்றுத் தருவார்கள்.

அலோனி. பாலியல் மறுவாழ்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

"சிகிச்சை பெறவே இங்கு வருகிறார்கள். இன்பமடைவதற்காக வருவதில்லை. அதனால் இது விபச்சாரம் இல்லை" என்கிறார் அலோனி உறுதியாக தொனியில்.

"இங்கு 85 சதவிகிதம் நெருக்கம், தொடுதல், அளித்தல், பெறுதல், தொடர்புகொள்ளுதல் ஆகியவைதான். இணைசேருவதுடன் சிகிச்சை நிறைவுபெற்றுவிடுகிறது."

அலோனியின் சிகிச்சை மையத்துக்கு வெவ்வேறு வயதுடைய, பலவகைப் பின்னணியைக் கொண்டவர்கள் வருகிறார்கள்.

"என் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு உடல் குறைபாடுகளைக் கொண்டவர்களுடனேயே இருந்து வந்திருக்கிறேன். அவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் மீட்க முடிந்திருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறேன்" என்கிறார் அலோனி.

நியூயார்க்கில் படித்துக் கொண்டிருந்தபோது வாடகைத் துணைவர் ஒருவரின் அறிமுகம் அலோனிக்குக் கிடைத்தது. 1980-களில் இஸ்ரேலுக்குத் திரும்பி வந்த பிறகு வாடகைத் துணைவர்களைப் பயன்படுத்துவதற்கு மூத்த மதத் தலைவர்களிடம் அனுமதி பெற்றார்.

மதத் தலைவர்கள் ஒரேயொரு கட்டுப்பாட்டை மட்டும் விதித்தார்கள். எந்தவொரு மணமான பெண்ணையோ, ஆணையோ வாடகைத் துணைவராகப் பயன்படுத்தக்கூடாது என்பதே அது. அதை அலோனி கடைபிடித்தார்.

செராபினா ஒரு வாடகைத் துணைவர்[பெண்தான்]. ரோனித் அலோனியின் மையத்தில் பத்தாணடுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர். மிகவும் அழகான, மெலிந்த தேகம் கொண்ட, எதையும் தெளிவாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்.

"சிகிச்சையின் அங்கமாக என் உடல் பயன்படுத்தப்படுவது பற்றி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்று கூறுகிறார் செராபினா.

செராபினா, தான் ஒரு 'பயண வழிகாட்டியை'ப் போன்று செயல்படுவதாக எண்ணுகிறார். தனக்குத் தெரிந்த வழியில் தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதுதான் தனது வேலை என்கிறார்.

40 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார் செராபினா. 

"அது விடுமுறையைக் கழிப்பது போலத்தான். சிகிச்சை பெற்றவரைப் பிரியும்போது. சில நேரங்களில் அழுகை வரும். இருப்பினும் மகிழ்ச்சிதான்" என்கிறார்.

"சிகிச்சை பெற்றவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவோ, குழந்தை பெற்றதாகவோ கேள்விப்பட்டால் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை" என்று நெகிழ்கிறார்

மாலை நேரத்தில் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள பாலியல் நிபுணர்களுக்கு ஆன்லைனில் உரையாற்றுகிறார் அலோனி.

வாடகைத் துணைவர் முறை வழக்கமான முறைகளைவிட அதிகப் பயனளிப்பதாகப் பல்வேறு தகவல்களுடன் விளக்குகிறார்.

மிகவும் தீவிரமான, காயம்பட்ட வீரர்களுக்கு நவீன அறுவைச் சிகிச்சைகளுடன், வாடகைத் துணைவர் முறையும் சேர்ந்து சிறந்த பலன்களைத் தருகிறது என மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறார் அலோனி. 

======================================================================================

உதவி: https://www.bbc.com/tamil/global-56770101