அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 8 ஏப்ரல், 2021

'ஆதியோகி சிவன்'...அப்பட்டமான கட்டுக்கதை!!!

ஜக்கி வாசுதேவால் பிரபலப்படுத்தப்பட்ட/படுகிற இந்த ஆதியோகி சிவன் என்பவர் யார்?

இதற்கு விடை தேடுவதற்கு முன்னால், 'யோகி' என்னும் சொல்லுக்கு ஜக்கி வாசுதேவ் தரும் விளக்கம் என்ன என்பதை அறிவோம்.

'யோகிகள் வித்தியாசமானவர்கள். அவர்கள் யோகத் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள். அதற்காக யோகப் பயிற்சிகள் செய்பவரெல்லாம் 'யோகி'கள் கிடையாது'[https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/yogi-gnani-munivar-enna-vithiyasam]'  -இப்படி ஆரம்பிக்கிறார் ஜக்கி.

'யோகாவைத்  'தொழில்நுட்பம்' என்கிற அவரே, அதைப் 'பயிற்சி' என்றும் குறிப்பிடுகிறார்[தொடக்கமே குழப்பம்].

'பயிற்சி' என்பதே ஏற்புடையது[யோகா தொழில்நுட்பம் அல்ல; அது வெறும் பயிற்சியே].

'இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒன்று' என்று தன் அனுபவத்தில் உணர்ந்து தெளிந்தவர்தான் 'யோகி' என்பது அவர் தரும் கூடுதல் விளக்கம்.

பிரபஞ்சம் என்பது வரம்பற்று விரிந்து பரந்து கிடப்பது. அதை 'ஒன்று' என்னும் எண்ணிக்கைக்குள் அடக்குவது தவறு. இதெல்லாம் அந்த யோகிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஜக்கிக்கும் புரியாது.

இப்படியொரு விளக்கம் தந்ததோடு நிற்கவில்லை இவர். 'உயிரின் தன்மையை அறிந்து அதைக் கையாளவும் அறிந்தவர் அவர்' என்றும் சொல்கிறார்.

உயிர் என்பதே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 'அதைக் கையாளவும் அறிந்தவர்' என்று அடித்துவிடுகிறாரே, அதென்ன கையாள்வது?

உயிரை எப்படிக் கையாள்வது? 

அடுத்து, 'அதில் முழுமையாகத் திளைத்திருக்கும் பேறு அவருக்கு[யோகிக்கு]க் கிடைக்காமல் இருக்கலாம்' என்கிறார். உயிருக்குள் முழுமையாகத் திளைத்திருப்பது என்றால் என்ன? யாரிடம் விளக்கம் கேட்பது? ஜக்கியிடமே கேட்கலாம். சொல்வாரா?

[பிறருக்கும் புரியாமல் தனக்கும் புரிதல் இல்லாமல் பேசுவதே ஜக்கியின் வழக்கம் என்று ஏற்கனவே ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்].

இவர், 'சிவன்' என்று குறிப்பிடுவது, சைவ மதத்தவர் முழுமுதல் கடவுள் என்று நம்புகிற சிவபெருமானை.

அந்தச் சிவபெருமானைத்தான் 'ஆதியோகி'[சிவன்] என்றும் குறிப்பிடுகிறார்

யோகிக்கு இவர் தந்த விளக்கங்கள்[யோகப் பயிற்சி பெற்றவர்; பிரபஞ்சம் ஒன்று என்பதை அறிந்தவர்; உயிரின் தன்மையைப் புரிந்துகொண்டவர்]எல்லாம்  அவர் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. சிவபெருமானோ சைவர்கள் நம்பிக்கையின்படி, அனைத்தையும் படைத்த முழுமுதல் கடவுள்.

மனிதனாகப் பிறந்து, யோகப் பயிற்சியாளராக வாழ்ந்த மனிதனை அல்லவா முழுமுதல் கடவுளான 'சிவன்' என்கிறார் இந்த உலகப் புகழ் பெற்ற ஜக்கி வாசுதேவ்!

இவர், 15000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, 'ஆதியோகி' என்று சொல்கிற அந்த நபரை,  சிவபெருமான் ஆக்கி, ஏழு சீடர்களுக்கு 'முழுமையான சுதந்திரத்தை உணர்த்திடும் 112 வழிகளைக் கற்றுக் கொடுத்தார்' என்று சொல்லியிருப்பது மிகப் பெரிய அபத்தம்.

சுதந்திரமாம்.

எதிலிருந்து, அல்லது எவரிடமிருந்து விடுதலை பெறுகிற சுதந்திரம் அது?

7 சீடர்கள், 112 வழிகள் எல்லாம் என்ன கணக்கு? வரலாற்றுச் சான்றுகள் உண்டா?

'ஆதியோகி, தனிமனிதனின் உள்நிலை மாற்றத்திற்கான கருவிகளை வழங்கினார். தனிமனிதனின் மாற்றமே, உலக மாற்றத்திற்குக் காரணமாய் அமையும். மனிதன் நல்வாழ்வும் முக்தியும் பெற, “உள்நோக்கிப் பார்ப்பது ஒன்றே வழி” என்பதுதான் அவரின் முக்கியச் செய்தி. அறிவியல்பூர்வமான யோக முறைகளின் மூலம் மனித நல்வாழ்விற்கு வழிசெய்வதற்கான ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்' -இதுவும் யோகிக்கு ஜக்கி தரும் விளக்கம்தான்.

உள்நிலை மாற்றத்திற்கான கருவிகளை யோகி வழங்கினாராம். கருவிகள் எவை என்பதும்  ஜக்கி வாசுதேவுக்கே வெளிச்சம்.

மக்களுக்கு 'யோகா' கற்றுத் தருவதோடு தன் பணியை வரன்முறைப்படுத்தியிருந்தால்ஜக்கி வாசுதேவை, 'யோகா வாசுதேவ்' என்றே பாராட்டலாம். 

ஆனால், தன்னைத்தானே 'சத்குரு' ஆக்கிக்கொண்டு புரியாத தத்துவங்கள் சொல்லி, மக்களை மூடர்கள் ஆக்குவதை ஒரு தொழிலாகவே செய்கிறாரே இவர், இதைத் தடுத்து நிறுத்தப்போவது யார்? யாரெல்லாம்? எப்போது? 

======================================================================================