சனி, 15 மே, 2021

'கனி' சுவைத்துக் 'கர்ப்பம்' தரித்த அஞ்சனாதேவி!!!

உலகில் வாழ்ந்த...வாழ்ந்துகொண்டிருக்கும் கோடானு கோடி உயிரினங்களில் மனிதனைத் தவிர, சிந்திக்கும் அறிவு வாய்க்கப்பேற்ற உயிரினம் வேறு எதுவும் இல்லை.

அஃறிணை உயிர்கள் ஆறறிவுடன் செயல்படுவதெல்லாம் புராணக் கதைகளில் மட்டுமே. இதிகாசங்களிலும் இப்படியான புளுகுகள் நிறைய உள்ளன. 

ராமாயணக் கதையில் இடம்பெறும் குரங்கினத்தைச் சார்ந்த அனுமன் இதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்று. 

அனுமன் பற்றிய கதையை உண்மையென நம்பியதோடு அதைக் கடவுளாக்கி வணங்கி வழிபடும் வழக்கம் இன்றளவும் ஒழிந்திடவில்லை. இந்தப் புண்ணிய பூமியில் பரவலாக உள்ள அனுமன் கோயில்களே இதற்குச் சான்றாகும்.

எத்தனை எத்தனை பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் அயராது அறிவுரை நல்கியும் அனுமன் பக்தர்களைத் திருத்துவது இன்றளவும் சாத்தியப்படவில்லை; அவர்கள் திருந்தும்போது திருந்தட்டும் என்று காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எப்போதேனும் ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் திருந்துவார்கள் என்னும் சிறிதளவு நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில், கொஞ்சம் நாட்களுக்கு முன்பு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி ஊடகங்களில் வெளியானது. அந்தச் செய்திhttps://www.dinamani.com/  (-22.04.2021).....

'திருப்பதி அருகே 'சேசால' மலைத் தொடரில் உள்ள அஞ்சனாத்திரியே அனுமன் பிறந்த அதிகாரப்பூர்வ இடம்' என்று திருமலைத் தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது'[22 பக்க ஆவணம்] என்பதாகும். தேவஸ்தானத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு இந்த ஆதாரங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்ததாம். இதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டனவாம்.

இந்த ஆதாரங்கள் எல்லாம் பல்வேறு புராணங்களிலிருந்து திரட்டப்பட்டவை என்றும் தேவஸ்தானம் சொல்லியிருக்கிறது.

அறிவியல் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் இந்நாளில் புராணங்களையும், கற்பனையில் உருவான சில இதிகாசங்களையும் ஆதாரமாகக் காட்டுவது எள்ளி நகையாடற்குரியதாகும்.

இவர்கள், அனுமன் பிறப்பு பற்றிய ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார்கள்.

அஞ்சனாதேவி என்னும் பெண்மணி ஆகாசக் கங்கைக்கு அருகே 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாராம். தவத்தை மெச்சிய வாயுபகவான், அஞ்சனாதேவியின் முன்னால் தோன்றி ஒரு தெய்வீகக் கனியை அளிக்க, அதை அஞ்சனா உண்டதன் விளைவாக அனுமன் பிறந்தாராம்.

இந்தக் கதையைக் கண்டுபிடிக்க 12 புராணங்களைக் குழு ஆராய்ந்தது என்று சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறது தேவஸ்தானம். 

நாம் இவர்களிடம் முன்வைக்கு கேள்வி.....

"பெருந்தைகையீர்,

ஒரே ஒரு விழுக்காடுகூட[001%] நம்புவதற்குச் சாத்தியம் இல்லாத இம்மாதிரிக் கட்டுக்கதைகளையெல்லாம் சொல்லி, மக்கள் மூடநம்பிக்கைகளின் கோரப் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவேனும் விடுபட்டுவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா?!

கொரோனா கொடுந்தொற்றின் அடங்காத பசிக்குத் தினம் தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் இரையாகிவரும் அவல நிலையில், இவ்வாறெல்லாம் புனைந்துரைக் கதைகளைப் பரப்பிப் பக்தி வளர்க்க நினைக்கிறீர்களே இது அநியாயம் இல்லையா பெரியவர்களே?

ஏழுமலையான் சாமியின் பெயரில் கோடானு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருக்கிறது. இறந்தவர்களை எரிப்பதற்குகூட மயானங்களில் இடமில்லாத நிலையில், அதிலிருந்து  உங்களால் இயன்ற அளவு நிதியளித்து உதவி செய்யலாம்.

செய்தீர்களா?

இல்லையெனில், இனியேனும் செய்வீர்களா? 

============================================================================