உலகில் சமுத்திரங்களை உடைய நாடுகள் பலவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடலில் வாழ்விடங்களை அமைத்திருக்கின்றன என்பது பலரும் அறியாத செய்தி. இவ்வாறான சமுத்திர நகரங்கள் உல்லாசப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாய்லாந்தின் 'கோ பன்யி' நகரம்:
தாய்லாந்து என்பது உல்லாசப் பயண நகராகும். அந்நாட்டிற்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டித் தருவது சுற்றுலாத் துறையாகும். அங்கு அமைக்கப்படும் அனைத்து நிர்மாணங்களும் சுற்றுலாத் துறையை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன. இதே நோக்கத்துடன்தான் 'கோ பன்யி' நகரம் சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம் அமைக்கப்பட்டுள்ள இடம் ஒரு தீவு. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு ஒரு மீனவக் கிராமமாக இருந்தது இது. இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சமுத்திர நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்த[பூகட்]த் தீவுக்கு வரும் அதிகமான உல்லாசப் பயணிகளின் பகல் நேர உணவு உள்ளிட்ட பல தேவைகளைக் 'கோ பன்யி' நகரம் பூர்த்தி செய்கிறது.
மெக்ஸிகோவின் வெனிஸ்:
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முகமாக அமைக்கப்பட்ட மெக்ஸிக்கோவின் மெக்ஸிகெல்டினன் நகரை மெக்ஸிக்கோவின் வெனிஸ் என கூறுகிறார்கள்.
சிறிய இயற்கைத் தீவை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நகரம் நாளுக்கு நாள் தனது தரைப் பிரதேசத்தை அதிகரித்து வருகிறது. வறட்சியான காலத்தில் இந்த நகரம் ஏனைய தீவுகளைப் போல் காட்சியளித்தாலும், மழைக் காலத்தில் அங்கு பாறைகள் கடல் நீரினால் மூடப்படுவதனால் உல்லாசப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
தற்போது நிரந்தரமாக 800பேர்வரை வசிப்பதோடு, அவர்களின் முக்கிய வருமானத்துக்கான வழியாகச் சுற்றுலாத் துறை அமைந்துள்ளது.
ஜப்பான்:
ஜப்பான் மிகவும் பாரியப் பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்ட மிதக்கும் நகரை அமைக்கும் எண்ணத்தில் உள்ளது. ஜப்பானியர்கள் இதனை 2025ஆம் ஆண்டில் நிறைவு செய்ய எண்ணியுள்ளார்கள். தீவு இராச்சியமான ஜப்பானில் எங்கு திரும்பினாலும் கடலைக் காண முடியும்.
அதனால், அங்கு கடலில் நகரத்தை அமைப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. இந்த நகரத்தை அமைப்பதன் முக்கிய நோக்கம் மக்களுக்குச் சொகுசான வசிப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். அதனுடன் இணைந்த பொருளாதார நன்மைகளும் உண்டு. வானளாவிய கட்டடங்கள் அமைக்கப்படுவதுடன் ஜப்பான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முதலிடம் அளிப்பது நகரங்களுக்கு அருகில் காடுகள் வளர்ப்பிற்காகும். அதன் பிரகாரம் அங்கு காடுகளும் வளர்க்கப்படவுள்ளன.
துபாய்:
துபாயில் கடலுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட தீவு:
அதற்கேற்ப, கடலை நிரப்பி அதன் மீது அனைவரையும் கவரக் கூடிய வகையில் செயற்கைத் தீவுகளைப் பல தசாப்தங்களுக்கு முன்னரே அமைக்கத் தொடங்கினார்கள். தற்போது அது போன்ற பல தீவுகள் அங்கு காணப்படுகின்றன. அத்தீவுகளில் உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் விடுதிகள் மற்றும் வீடுகள், பல்நோக்கு மையங்கள் என்று பலவும் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது 'பாம் ஜுமேரா' செயற்கைத் தீவுக் கூட்டமாகும். அது துபாய் பாலைவனத்தில் வளரும் முக்கியத் தாவரமான பாம் மரத்தின் கிளையின் வடிவத்தில் மிக அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது; அது மாத்திரமல்ல மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய தீவாக வரலாற்றில் இணைந்துள்ளது. இந்த தீவைச் சுற்றி செல்லும் 5.4 கிலோ மீட்டர் மோனோ ரயில் பாதை இன்னுமொரு விசேடமாகும்.
இந்தோனேசியா:
தற்போது இந்தோனேசியாவின் தலைநகராக ஜகார்த்தா காணப்படுகிறது. எதிர்காலத்தில் அந்நகரம் நீரில் மூழ்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் புதிய நகரொன்றை அமைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.
போர்னியோ தீவில் அமைக்கப்படவுள்ள நகரமும் நீரிலேயே அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்தோனேசியா பல தீவுக் கூட்டங்களின் இணைப்பாகும். இதனால் கடலின் மேல் வாழ்வது அவர்களுக்குப் புதிதல்ல. எதிர் காலத்தில் சர்வதேசத்துடன் இணைந்த மத்திய நிலையத்தை முறையாகத் திட்டமிட்டு, தலைநகரை அமைக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த உதாரணங்களைத் தவிர மேலும் பல நாடுகள் தங்களுக்குரிய கடலில் நகரங்களை அமைக்க திட்டமிட்டு வருகின்றன.
============================================================================