இந்தப் பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் ஏற்கனவே பல 'பேரழிவு'களில் அழிந்துவிட்டன. பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை.
எல்லாப் பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனித இனத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் அதன் அழிவு தவிர்க்க முடியாதது.
மனித இனம் அழியும் என்பதில் அறிவியல் அறிஞர்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்.
அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர்.
அழிவுக்கான காரணங்கள்:
மக்கள் தொகைப் பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கும் என்பது அவர் வாதம்.
பூமி?
அழியாது. மனித இனம் அழிந்த பிறகும் இந்தப் பூமி இருந்துகொண்டே இருக்கும்.
மனித இனம் அழியும்போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினங்களும், செடி கொடிகளும்கூட அழிந்துவிடக்கூடும்.
அழிவில்லாதவை:
மனிதனின் அழிவுக்குப் பிறகு, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்படுவதால், பூச்சிகள் பல்கிப் பெருகும்.
பூச்சிகள் பெருகப் பெருக அவற்றை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள், ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவுச் சங்கிலியில் உள்ள அனைத்துக் கண்ணிகளும் பெருகிட வாய்ப்புள்ளது.
மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர் பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார் வைஸ்மேன் என்னும் அறிஞர். ஆடுகளும் மாடுகளும் மெல்ல மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை மட்டும் தப்பி வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
ஆறாம் அறிவு[சிந்திக்கும் திறன்]?
பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான் இது. புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது. அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு.
மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஜீன்கள் ஆரோக்கியமானவைதானா என்பதை அளவிடுவதற்கும் புத்திசாலித்தனம் பயன்பட்டது.
இவ்வாறு பலவகையிலும் பயன்பட்ட மனிதனின் புத்திசாலித்தனம்[ஆறாம் அறிவு]கூட முற்றிலுமாய் அழிந்துவிடும்.
மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை. காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததைப் பாபூன் செய்யக்கூடும்[அதாவது, சிந்திக்கும் திறனை அவை பெறக்கூடும்]. ஆயினும், அவை நம்மைப் போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்திடக்கூடும்” என்று குறிப்பிடுகிறார் வைஸ்மேன்.
இந்தப் புவியின் எதிர்காலம்?
மனிதன் அழிந்த பிறகும் அவனால் உண்டாக்கப்பட்ட பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம்.
நாம் விட்டுச் செல்லவிருக்கும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள்கூட ஆகலாம். நாம் விட்டுச் செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.
நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம்.
பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் அந்த மின்காந்த அலைகளின் தாக்கமும் ஒரு காலக்கட்டத்தில் அழியும்.
* * *
2007ஆம் ஆண்டு வெளியான 'மனிதர்கள் அற்ற உலகம்'[அலன் வைஸ்மேன்] என்னும் புத்தகத்தில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக bbc கட்டுரையில்{https://www.bbc.com/tamil/science-53326369 [பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின்]-8 ஜூலை 2020} குறிப்பிடப்பட்டுள்ளது.
==============================================================================