#யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஓர் ஆடவன், தனியான ஓர் இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.
‘இல்லறத்தில் பிரம்மச்சரியம்’ என்று இதனைக் காந்தியடிகள் விவரித்திருக்கிறார்.
நான் பல இடங்களில் குறிப்பிட்டதுபோல, ‘இயக்கத்தில் இயலாமை,’ 'இருந்தும் இல்லாமை,’ ‘கிடைத்தும் ஏற்றுக்கொள்ளாமை’ என்பதெல்லாம் இதுவே. இதை யோகாசனம், என்பதைவிட ‘மோகாசனம்’ என்பது பொருந்தும்.#
-யோகாசனத்துக்கு, 'மோகாசனம்' என்று கவர்ச்சிகரமாகத் தலைப்புக் கொடுத்த கண்ணதாசனுக்கு, பிரமச்சரியம் காப்பதற்குப் பெண்களுடனான சகவாசத்தை அறவே தவிர்ப்பது, அவர்கள் மீதான நினைப்பைக் கட்டுப்படுத்துவது, மனதை வேறு வகையான எண்ணங்களால் நிரம்பி வழிந்திடச் செய்வது என்றிவைையே ஆகச் சிறந்த வழிகள் என்பதையும், சராசரி மனித வாழ்க்கையில் இம்மாதிரி யோகாசனப் பயிற்சி சாத்தியமே இல்லை என்பதையும் அவர் அறிந்திராதது மிகப் பெரிய அவலமாகும்.
தந்தை சாகக் கிடந்த நேரத்தில் மனைவியை மருவிச் சுகம் கண்டுகொண்டிருந்தவர் காந்தி['சத்தியசோதனை'யில் அவரே எழுதியிருக்கிறார்]. வாலிபத்தில் இச்சையை அடக்க அரும்பாடு பட்டார் அவர்; பெண்ணுடன் நிர்வாணமாகப் படுத்துத் துறவறம் காக்கும் பயிற்சியெல்லாம் வயதான காலத்தில் அவர் மேற்கோண்டது; இதனாலெல்லாம் அவர் மீதான நன்மதிப்பு குறையவும் செய்தது[தனது பரிசோதனை குறித்துத் தனது ஆதரவாளர்களிடம் காந்தி தெரிவித்தபோது அவர் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார். ஒருவர் இந்தச் சோதனை அவரது பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் என்று கூறினார். ஒருவர் காந்தியிடம் இருந்தே விலகிவிட்டார்[https://www.bbc.com/tamil/india-45533445] போன்ற வரலாற்று உண்மைகளைக் கவிஞர் அறிந்திருக்கவில்லை.
#மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது ‘பாலுணர்வு’ ஒன்றே. பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லைதான். ஆனால், காமம் எந்தவொரு மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கும்[100% உண்மை].
கிடைக்காத பெண்ணுக்காக ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்துவிட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும். அதன் பெயரே, ‘இல்லறத்தில் பிரம்மச்சரியம்'!
சித்தர்கள் இதனை, ‘இச்சா பத்தியம்’ என்றார்கள். காந்தியடிகள் பிற்காலங்களில் இப்படி வாழ்ந்து காட்டினார். அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார்.
தேகம் ஆன்மாவை வென்றுவிடும்; தறிகெட்டு ஓடும். ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம்[https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21649]#
-என்றிப்படி, உறுதிப்படுத்தப்படாத ஆன்மாவைப் பற்றியும், நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு யோகாசனம்[மோகாசனம்] பற்றியும்கூட 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் விவரித்திருக்கும் கண்ணதாசன், #எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மச்சாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர். உடம்பின் சுக்கிலத்தை[???] உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர் மேற்கொண்டிருந்தார்# என்றும் எழுதியிருக்கிறார்.
-இவற்றிற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கவிஞர் கொஞ்சமும் யோசித்தாரில்லை. ஓரளவு அறிவியலறிவுகூட இவருக்கு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
'மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே ‘இச்சா பத்தியம்’ என்றும் சொல்லியிருக்கிறார்.
"உடலுறவின் மீதான இச்சை நீடிக்கும்வரை, மனம் கலந்து உடல் இணைந்து இன்புறத்தானே மனைவி? அவளைச் சகோதரியாகப் பாவிக்கும் பாவனை எதற்கு?" என்று கேட்கத் தோன்றுகிறது நமக்கு. கண்ணதாசனுக்கு ஏனோ தோன்றவில்லை.
கண்ணதாசன் அற்புதமானதொரு கவிஞன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கடவுள் மறுப்பாளனாக இருந்து, தீவிர ஆன்மிகவாதியாக ஆன பிறகும் சிறந்ததொரு கவிஞராகவே இருந்தார்; சிறப்பாகச் சிந்திக்கக்கூடிய பகுத்தறிவாளராக மட்டும் இருந்ததில்லை!
===============================================================================