வெள்ளி, 7 மே, 2021

'அ.தி.மு.க.' 'பா.ஜ.க.'வின் ஆயுட்கால அடிமையா?!

#சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட இருக்கிறது. அதிமுகவைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மூத்த அமைச்சர்களாக இருந்த திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பழனிசாமியைக் கொண்டுவர எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தைக் கொண்டுவர மற்றொரு தரப்பினரும் விரும்புகின்றனர். 

*ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப் பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும், பழனிசாமி இதை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ‘‘எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்படுவார். பழனிசாமியுடன் பேசி இது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்#

-மேற்கண்டவாறு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது[https://www.hindutamil.in/news/tamilnadu/668005-admk-opposition-leader.html]

இந்நிலையில்[இச்செய்தி உண்மையானது எனின்], 'ஓபிஎஸ்'ஸிடமும் 'இபிஎஸ்'ஸிடமும் நாம் கேட்க விரும்புவது.....

ஜெயலலிதா மறைந்த பிறகு, பதவி ஆசை காரணமாகவும், வேறு ஏதோ காரணங்களுக்காகவும் பா.ஜ.க. தலைவர்களின் தயவு வேண்டி அவர்களின் அடிமைகளாக இருந்தீர்கள்[இருவரில் யார் சிறந்த அடிமை என்பதில் கடும் போட்டியே நிலவியது].

தமிழின்  மீதும் தமிழினத்தின் மீதுமான பற்றுதலைச் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அவர்களால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை அமைச்சர்களாக நான்கு ஆண்டுகளைக் கழித்தீர்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் தோற்றீர்கள்.

உங்களின் தோல்விக்குப் பா.ஜ.க,வுடனான கூட்டுறவும் காரணம் என்பது உங்களுக்குத் தெரியும்.

தோற்ற பிறகாவது திருந்துவீர்கள்; அடிமைத் தளையிலிருந்து விடுபடுவீர்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு எத்தனை பெரிய தவறு என்பதை மேற்கண்ட செய்தி[*] உறுதிப்படுத்தியிருக்கிறது.

வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்ற[உங்கள் தயவில்] அவர்கள், 65 தொகுதிகளில் வெற்றி கண்ட உங்களுக்கான  எதிர்க்கட்சித் தலைவர் போட்டியில்[விட்டுக்கொடுக்க மனம் இல்லாவிட்டால், வாக்கெடுப்பின் மூலம் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யலாம்]   பஞ்சாயத்துப் பண்ணுவது எத்தனை பெரிய இழிவு என்பதை நீங்கள் உணரவில்லையா?

தவிர்க்கவே முடியாத காரணங்களால் அதைத் தாங்கிக் கொள்கிறீர்களா?

உங்களின் செயல்பாடு, உங்களின் சுயமரியாதையை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கவுரவத்தையும் பாதிக்கும் என்பதை அன்புகொண்டு உணருங்கள் தலைவர்களே!

==============================================================