அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 5 மே, 2021

"செல்லையா, 'அந்த' ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லையா!"

95 வயது 'இளவட்டம்' செல்லையா[புதுக்கோட்டை, கொத்தமங்கலம் கிராமம்] அவர்களுக்கு,

இந்த வயதிலும் பனை மரம் ஏறி, நுங்கை இறக்கி, கடைவீதியில் விற்பனை செய்கிறீர்கள் என்று உங்களை வியந்து பாராட்டி 'நக்கீரன்' இதழ் சிறப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறது. நுங்குக் குலைகள் இறக்குவதோடு, பனை ஏறி மட்டை இறக்குவது, மட்டைகளால் வீடு மேய்வது போன்ற வேலைகளையும் செய்கிறீர்களாம்.

இச்செய்தி என்னைப் போன்றோரைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நூறு வயதைக் கடந்து மிகப் பல ஆண்டுகள் வாழ்ந்திட மனதார உங்களை வாழ்த்துகிறோம்.

உங்களின் வயது 95.  இந்த வயதில் பனை ஏறுவது எளிதல்ல; அல்லவே அல்ல.

ஆயினும், நீங்கள் இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள். நோய்நொடி நெருங்காத அளவுக்கு உடல் வலிமையைத் தக்க வைத்திருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமாயிற்று?

நீண்ட காலம் வாழணும்னா.....

*'காலை எழுந்ததும் காபிக்குப் பதிலாக ஒரு தம்ளர் எலுமிச்சை நீரைக் குடிக்கணும்.

*உடம்பு திடகாத்திரமா இருக்கத் தினமும் தேன் அருந்தலாம்.

*உணவில் உப்பு, சர்க்கரை, போன்றவை அதிகம் கூடாது.

*பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் சேர்க்க வேண்டும்.

*தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

*யோகா, தியானம் எல்லாம் தேவை.'

என்றிவ்வாறெல்லாம் மேடைகளில் பேசுறாங்க; பத்திரிகைகளில் எழுதுறாங்க.

அலோபதிக்காரன், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால் ஆரோக்கியமா நீண்ட காலம் வாழலாம்கிறான். சித்த வைத்தியன், 'அது தப்பு. காம இச்சையை அடக்கு. விந்துவை வீணடிக்காம, அடிவயிற்றிலிருக்கும் குண்டலினியை முன் மண்டைக்கு ஏத்து, ஏத்துங்கிறான்.

இப்படி ஆளாளுக்குப் புத்திமதிகளை அள்ளி விடுறாங்க. 

சரின்னு படுறதையெல்லாம் மக்கள் கடைபிடிக்க முயற்சி பண்ணுறாங்க.

என்ன பண்ணியும்.....

<>பல பேருக்கு 40 வயசிலேயே, 4 கிலோ மீட்டர் நடந்தா நாக்கு வெளியே தள்ளுது.

<>50 வயசிலேயே சர்க்கரை, ரத்த அழுத்தம், ஞாபக மறதின்னு அத்தனை நோய்க்கும் அடைக்கலம் தர்றாங்க.

<>60 வயசாயிட்டா 'ஆட்டம் பாட்டம்' எல்லாம் அடங்கிப்போய் ஆன்மிகவாதியாகிக் கோயில் கோயிலா அலைய ஆரம்பிச்சுடுறாங்க.

செல்லையா அவர்களே,

நீங்களோ, 95 வயதில் பனை மரம் ஏறி நுங்குக் குலை பறித்து, நீங்களே அதைச் சைக்கிளில் ஏற்றிபோய்ப் பக்கத்து ஊர்களில் விற்பனை செய்கிறீர்கள்.

இதற்கான ஆற்றல் உங்களுக்கு வாய்த்தது எப்படி? எப்படி?

மனம் திறந்து அந்த ரகசியத்தைச் சொல்வீர்களா செல்லையா?

நக்கீரனிடமாவது சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ரகசியத்தை அது நாடறியப் பரப்புரை செய்துவிடும்!

===============================================================================

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/puthukottai-district-kothamangalam-old-man-sellaiya  -29/04/2021 (10:14)