அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 4 மே, 2021

'ஆண்-பெண் உறுப்பு'[சிவலிங்கம்] வழிபாடு தமிழர் நாகரிகமே!

உலகிலுள்ள வழிபடு தெய்வ உருவங்களிலேயே விசித்திரமானதும் தனித்துவமானதும்  சிவலிங்க வடிவமாகும். இதனுடைய கதை என்ன? 

இந்து மதத்தைக் கட்டி ஆள்பவர்கள் பார்ப்பனராக இருப்பதால், அவர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், உலகின் மூத்த, தமிழரின் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தில் இடம் பெற்றுள்ளதாலும், அதற்கப்பால் வெகு காலத்திற்குப் பின்தான் ஆரியர்கள் சிந்துவெளிப் பகுதிக்கு வந்தனரென்பதாலும் இது பழந்தமிழரின் வழிபடுபொருள் என்பது புலனாகும்.

யார் படைத்தனர் என்பதோடு எதற்காகப் படைக்கப்பட்டது என்பதும் ஆய்வுக்குரிய பொருள். இதைப்பற்றி திரு. மஞ்சை வசந்தன் அவர்கள் 'தமிழா நீ ஓர் இந்துவா?' என்ற நூலில் சிறப்பானதொரு வாதத்தை முன்வைத்திருக்கிறார்.

உலகின் இனங்களிலேயே தமிழினம்தான் இயற்கையை நேசித்து இயற்கையையே மிகுதியாக வழிபடுபொருளாகக் கொண்டு வாழ்ந்த இனம்.

தன்னை வாழ்விக்கும் மழையைத் தெய்வமாக்கி மாரியம்மை என்று இன்றும் வழிபட்டு வருகிறது. ஒளியால் இவ்வுலகத்தை உய்விக்கும் ஞாயிற்றை ஒவ்வொரு வருட முகிழ்விலும் தை 1இல் நன்றியோடு வணங்குகிறது. உழவுக்கு உதவிடும் ஆடு, மாடுகளையும் நன்றியறிதலோடு மாட்டுப்பொங்கலன்று வழிபடுகிறது. தான் பயன்படுத்தும் கருவிகளைக்கூட ஆயுதப் பூசையன்று நன்றியோடு நினைவு கூர்கிறது. இந்தத் தமிழர் பண்பாட்டைத்தான் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள் 'வளமை வழிபாடு' என்று அழைக்கின்றார். (காண்க: தமிழரின் அடையாளங்கள், பாலம் பதிப்பகம்.) ஆக, தனக்குப் பயன்படும் கருவிகளைக்கூட நன்றியறிதலோடு போற்றும் மாண்புதான் தமிழரின் மாண்பு. நன்றியுள்ளவன்தான் தமிழன்.

இந்த முறையில்தான், தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள உதவிய இனப்பெருக்க உறுப்புகளை வணங்கும் வழக்கத்தை உண்டாக்கினான். இது தமிழரின் வளமை வழிபாட்டின் ஒரு கூறுதான்.

மிகப் பல இடர்களுக்கு இடையே வாழ்ந்த மக்களுக்கு இனப்பெருக்கத் தேவை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை எளிதே ஊகித்தறியலாம். விலங்குகளிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆட்பலம் தேவையல்லவா? இந்த நிலையில்தான் தன்னுடைய இருப்பிற்கே அடித்தளமான இனப்பெருக்க உறுப்புகளை நன்றியோடும், மரியாதையோடும் பார்த்தான். நமது தற்போதய வாழ்க்கையை மறந்து, மனவெளியில் அக்காலக் கட்டத்திற்குப் பயணித்துப் பாருங்கள் அதன் தேவையும், வலியும் புரியும். அந்த உறுப்புகளை ஒருவகையில் மாயையானவைகளாகக்கூட அவன் பார்த்தான். இன்று உள்ள அறிவியல் தெளிவு அன்று அவனிடம் இல்லையென்பதையும் சேர்த்து நினைவுகூருங்கள். இன்றுள்ள அறிவியல் தெளிவோடு பார்த்தாலும் இது ஒரு மாயையான விடயம் தானே?

இனப்பெருக்கத் தேவை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை மனிதனின் மலைவாழ் காலத்திற்கு வெகுகாலத்திற்குப் பிறகுகூட 'பழய ஏற்பாடு' பைபிள் காலத்தில் இருந்த நிலையை ம. செந்தமிழன் தனது 'நிலம், பெண்ணுடல் நிறுவனமயம்'(பண்மைவெளி வெளியீட்டகம்) என்ற நூலில் வேறொரு விடயமாக எடுத்துக்காட்டியுள்ளார். இங்கே இரண்டு பெண்களும் அவர்களது தகப்பன் மட்டும் இருப்பர். அந்தப் பெண்களில் ஒருத்தி மற்றவளிடம் இயம்புவாள், "நம் இனத்தைப் பெருக்க நம் அப்பனைத்தவிர இங்கு வேறு ஆண்மகன் யாரும் இலர். எனவே, நம் தகப்பனுக்கு மது கொடுத்துவிட்டு நாம் அவனோடு படுத்துக்கொள்வோம்" என்று. ஆக, மலைவாழ் காலத்தில் இனப்பெருக்கத் தேவையின் வீச்சு எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பது எளிது. இவைகளை வைத்துப் பார்க்கும்போது லிங்க வழிபாடு தோன்றியதன் தேவையைப் புரிந்து கொள்ளலாம்.

'லிங்கம் என்ற பெயர் எப்போது ஏற்பட்டதென்பது தெரியவில்லை. ஆனால், சிவம் என்பது மட்டும் முதலில் தோன்றிய பெயர் எனத்துணிய இடமுண்டு. இனப்பெருக்கத்தோடு உடன்பட்ட இன்னொன்று, பெண்களின் பூப்புக்குருதி. குருதியின் நிறம் சிவப்பு. இதனடிப்படையில் லிங்கத்திற்கு முதலில் பெயர் வைத்தவன் குருதியின் நிறத்தை வைத்து 'சிவம்' என்று அழைத்திருக்கலாம்.

அந்தக் காலத்திலே வீர மரணம் எய்துபவர்களுக்கு நடுகல் நட்டு வழிபடுவார்கள். நடுகல்லுக்கு அக்காலப் பெயர் 'ஆலங்கம்' என்பது. சிவலிங்கம் நடுகல்லைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளதால், ஆலங்கம் என்று அழைக்கப்பட்டு, அது மறுவித்தான் லிங்கம் என்றானது.'

மேற்கூறிய அவரது விளக்கத்திற்குப் பிறகு நமக்கு விளங்குவது என்னவென்றால், 'சிவம்' என்பது பெண்ணுறுப்பின் அடிப்படையில் தோன்றிய பகுதிப் பெயர்தான். அதேபோல, ஆணுறுப்பின் அடிப்படையிலான பகுதிப் பெயர் 'ஆலங்கம்' என்பது. ஆனால், இந்த உருவத்தின், (ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகளின் தொகை வடிவத்தின்), தொகைப்பெயர் ஒன்று தேவை. அது, (சிவம் + ஆலங்கம்) சிவாலங்கம். இது மருவித்தான் 'சிவலிங்கம்' என்ற பெயர் தோன்றியது என்பது திண்ணம்.

இதை எழுதும் நான், உங்களைச் சிவலிங்கத்தை வழிபடச் சொல்லவில்லை. சிவலிங்கத்தை வழிபட்ட அன்றைய தமிழனின் தேவை இன்று இல்லை. அளப்பரிய மக்கள் பெருக்கத்தால் அவதியுற்று வருகிறோம் நாம். நாம் நமது வரலாற்றையும் மரபுகளையும் முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதை முன்னிறுத்தி எழுதப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. மூடநம்பிக்கையைக் காக்க வேண்டியதில்லை. ஆனால், மரபுகளைக் காக்க வேண்டும். அதற்கு வரலாற்றுத் தேவையள்ளது. மரபைக் காக்க, தெய்வ நம்பிக்கை தேவையில்லை. 

===============================================================================

முக்கியக் குறிப்பு:

சிவனும் சக்தியும், தேவருலக விதிகளுக்குப் புறம்பாக, பகற்பொழுதில் இணைந்து இன்பம் துய்த்துக்கொண்டிருந்ததாகவும், அது கண்டு கடும் கோபத்துக்குள்ளான தேவர்களின் குருவான வியாழ பகவான்[பிரகஸ்பதி] சாபம் கொடுத்ததாகவும், அதன் விளைவாக இணைந்த கோலத்தில் சிவசக்தி உறுப்பு[கள்] மண்ணுலகை அடைந்ததாகவும், இங்குள்ள மானிடர்கள் அதை[சிவலிங்கம்] வழிபட்டதாகவும் சொல்லப்படும் கதையும், இதனையொத்த பிற புராணக் கதைகளும் பிற்காலத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டவையாகும். 

தேவை கருதி மூலக் கட்டுரை சற்றே சுருக்கப்பட்டுள்ளது.

நன்றி:

முனைவர். வே. பாண்டியன் (porkkaiponds@yahoo.co.in)

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/4253-2010-02-25-10-16-25