திங்கள், 3 மே, 2021

சித்தர்கள்[எழுதி எளிதில் புகழ் பெறுவது எப்படி?!]


'சித்தர்கள்' என்று ஒரு பதிவு எழுதி, செப்பம் செய்யப்படாத 'மாதிரி'ப் படிவமாக[Draft] வைத்திருந்தேன்.

என் மனைவி எனக்கான கணினியைப் பயன்படுத்தியபோது தவறுதலாக அது வெளியிடப்பட்டுவிட்டது.

சற்று முன்னர் 'தமிழ்ச்சரம்' இடுகைகளை நான் வாசிக்க நேர்ந்ததில், 'சித்தர்கள்' பதிவு தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன். பதிவைச் செப்பம் செய்து வெளியிடப் போதிய நேரம் இல்லாததால், அதை நீக்கிவிட்டு,  பழைய பதிவொன்றை இடம்பெறச் செய்துள்ளேன். 

தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.

                                               *                                  *                               *

எழுதி எளிதில் புகழ் பெறுவது எப்படி?!

தை எழுதினாலும் வாசகரின் மனம் கவரும் வகையிலும் அவர்களுக்குப் பயன்படும் வகையிலும் எழுதினால் புகழ் பெறலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

’எதையும்’ என்பதில் பாலுணர்வுக் கதைகளைச் சேர்க்க வேண்டாம்.

இவ்வகைக் கதைகளைத் தனிமையில் படித்து மனதுக்குள் சிலாகித்தாலும், பொது இடங்களில் பழித்துப் பேசுவதே நம்மவரில் மிகப் பெரும்பாலோர் வழக்கம். அது பற்றி இங்கு விவாதிப்பது தேவையற்றது.

விறுவிறு நடையில் மண் மணம் கமகமகமக்கும் அற்புதமான புனைகதைகளைப் படைத்தளித்த, கரிசல் காட்டு எழுத்தாளர்  கி. ராஜநாராயணன், கொஞ்சம் பாலுணர்வுக் கதைகளையும் எழுதியதற்காகக்[’தாய்’ என்னும் வார இதழில் வெளி வந்தன; நூல் வடிவமும் பெற்றது] கடும் கண்டனங்களுக்கு ஆளானது யாவரும் அறிந்ததே.

சிறந்த நாவல்களும் சிறுகதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கிய, எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ தொகுத்ததற்காக எழுந்த எதிர்ப்பலையில் எதிர் நீச்சல் போட்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் ‘செக்ஸ்’ எழுதிப் புகழீட்டும் எண்ணம் வேண்டவே வேண்டாம்.

வேறு எதை எழுதுவதாம்?

குடும்பக் கதைகளும் மர்மக் கதைகளும் எழுத நம்மில் ஏராள எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் சரித்திரக் கதைகளும் படைக்கிறார்கள். அறிவியல் கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும்தான் கடும் பஞ்சம் நிலவுகிறது.

அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குத் தமிழில் எழுதத் தெரிவதில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லை. எனவே, தமிழில் அறிவியல் கதைகள் உதிப்பதற்கான தருணம் எப்போது மலருமோ தெரியாது[சுஜாதா, இத்துறையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை].

கல்கி, தேவன், துமிலன், சாவி போன்றோருக்குப் பிறகு, நகைச்சுவைக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘அப்புசாமி-சீத்தாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி மட்டுமே.

இவருக்குப் பின்னர்.....

நகைச்சுவைக் கதைகள் எழுதிட எழுத்தாளர்கள் இல்லை.

அந்த வெற்றிடத்தை நீங்கள் நிரப்பலாமே?

எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுவது முக்கியம். இயல்பாகவே இவ்வுணர்வு உங்களுக்கு வாய்த்திருக்குமேயானால் புகுந்து விளையாடலாம். 

அப்புறம் என்ன, புகழைத் தேடி நீங்கள் ஓட வேண்டியதில்லை. அது உங்களைத் தேடி ஓடோடி வரும். 

இன்றே, இக்கணமே எழுதத் தொடங்குங்கள்.

சாதனை நிகழ்த்திட வாழ்த்துகள்! 

"எங்களை வாழ்த்துறது இருக்கட்டும். நீயும் பல வருசங்களா, கடவுள், காமம், கத்தரிக்காய்னு எதையெதையோ எழுதிட்டுத்தான் இருக்கே. நகைச்சுவைக் கதைகள் எழுதிப் பிரபலம் ஆகியிருக்கலாமே?"ன்னு கேட்குறீங்களா?

நல்லாக் கேட்டீங்க. நான் எழுதிட்டுத்தான் இருக்கேன். அதுகளைப் படிக்கிறவங்க யாரும் என்னைப் புகழ்ந்து பேசியும் எழுதியும் பிரபலமாக்கத் தயாரா இல்லை. காரணம் என்ன தெரியுமா?

நம்ம மக்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லீங்க. அது மழுங்கிப்போய் ரொம்பக் காலம் ஆச்சுங்க! ஹி...ஹி...ஹி!!
===============================================================================