ஞாயிறு, 9 மே, 2021

'தினமலர்' உருவில் ஒரு 'தீநுண்கிருமி'[corona]!!!

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் அளித்த அமோக ஆதரவால் பெரும்பான்மை[125 தொகுதிகளில் வெற்றி] பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்.

மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், 33 பேர் அமைச்சர்களாகவும் தமிழ்நாடு கவர்னர் முன்னிலையில் பதவி ஏற்றார்கள்.

மக்கள் மகிழ்ந்தார்கள். எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள், நச்சு மனம் படைத்த  ஒரு நபரைத் தவிர. அந்த நபர்.....

'தினமலர்' நாளிதழ்க்காரர்!

//இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வரும் அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை// என்று செய்தி வெளியிட்டு, தன் அல்பப் புத்தியை அம்பலப்படுத்தியிருக்கிறார் அவர்.

''இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன்; உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன்; அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச் சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்” என்றிவ்வாறு பதவி ஏற்றுக்கொள்பவர்கள் உறுதிமொழி எடுப்பார்கள்.

இங்கே கவனிக்கத்தக்கது, கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்பது கட்டாயமில்லை என்பதுதான்[இது குறித்த சட்டத் திருத்தம் கீழே *].

'பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை' என்று குறிப்பிட்டதோடு கீழ்க்காணும் செய்திக் குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது தினமலர்.

//பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் இன்று மதியம் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்கள் அனைவருமே கடவுள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மட்டும் ஏனோ கடவுள் பெயரால் யாரும் உறுதிமொழி எடுக்காமல் பதவியேற்றனர். இதற்குக் காரணம் திமுகவின் கொள்கையா? இல்லை வேறு எதுவும் காரணமா என கேள்வி எழுகிறது. இந்த நிகழ்வு, பதவியேற்வு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது//[https://m.dinamalar.com/detail.php?id=2763510  [மே 07,2021 15:43]

கடவுளின் பெயரால், காலங்காலமாகப் பொய்யுரைகளையும் ஆபாசப் புனைகதைளையும் சொல்லிச் சொல்லி மக்களை அடிமடையர்கள் ஆக்கிய கும்பலைச் சேர்ந்த தினமலர்க்காரர், கடவுளை நம்பி, அந்தக் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுப்பவன்தான் பரம யோக்கியன் என்கிறாரா?

புதுச்சேரியில் ரங்கசாமியும் மற்றவர்களும் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்களாம்.

கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுப்பதும், விரும்பினால் கட்டிய கோவணத்தோடு பதவி ஏற்பதும் அவர்களின் விருப்பம். அவர்களைப் பின்பற்றவில்லை என்பது படு படு படு முட்டாள்தனமான வாதம்.

"இங்கு தி.மு.க.வினர் செய்தது போல, ரங்கசாமி வகையறா மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்காதது ஏன்?" என்றும் கேள்வி கேட்கலாம். தினமலர்க்காரர் கேட்கமாட்டார். 

இந்திய மண்ணைக் காங்கிரஸ் கட்சி ஆண்டவரை அவர்களுக்கு ஜால்ரா அடித்தவர்கள்தான் தினமலரும் அதைச் சார்ந்த கூட்டத்தாரும். இப்போது, இப்போதைய ஆளுங்கட்சிக்கு அனுசரணையாகத் தட்டுகிறார்கள். எப்போது எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றினாலும், அப்போதே அந்தக் கட்சிக்கு ஜால்ரா தட்டுவதே இவர்களின் தொழிலாக இருக்கும்.

ஆளும் நடுவணரசின் ஆதரவோடு, இனவுணர்வுள்ள தமிழர் கட்சிகளை அழித்தொழிக்கும் வேலையைத் தயங்காமல் செய்வார்கள்; செய்துகொண்டே இருப்பார்கள் இவர்கள்.

தமிழில் பத்திரிகை நடத்திப் பிழைப்பு நடத்தினாலும், "நாங்களும் தமிழர்களே" என்று எந்நாளும் இவர்கள் சொன்னதில்லை; இனியும் சொல்ல மாட்டார்கள். காரணம், இவர்களால் மதிக்கப்படும் ஒரே பாஷை சமஸ்கிருதம் என்பதுதான்.

'கொரோனா', உயிர் பறிக்கும் நச்சுக் கிருமி என்பதை நம்மில் பலரும் அறிவார்கள். தமிழர்களின் தன்மானத்தை அழிப்பதில் தீவிரம் காட்டும் தினமலரும் ஒரு நச்சுக் கிருமிதான் என்பதை நம்மில் மிகச் சிலரே அறிவார்கள்!
===============================================================================
* கடவுளின் பெயரால் உறுதி ஏற்க மறுப்பது அல்லது நிராகரிப்பது, அதற்கு மாற்றாக, ‘உளமார’ உறுதி ஏற்பது என்பது எளிதாகக் கிடைத்த வாய்ப்பு அல்ல. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு தனி மனிதனின் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம், சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பிறகு கிடைத்த, மகத்தான உரிமை. அந்த ஒற்றை மனிதர், பிராட்லா.

நார்த்தாம்ப்டனிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 1880ல் லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் இறை மறுப்பாளரான பிராட்லா. மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். அதற்கான அமைப்பையும் நடத்தியவர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும்போது, ‘உண்மையான நம்பிக்கையுள்ள கிறிஸ்தவனாக கடவுளின் பெயரால் உறுதியேற்கிறேன்” எனச் சொல்வதற்கு பிராட்லா மறுப்புத் தெரிவித்தார்.

“கடவுள் மீது உறுதியெடுக்கச் சொல்கிறீர்கள். இதில் ஆரம்பச் சிக்கல் என்னவென்றால் கடவுள் என்ற வார்த்தையை விளக்குவதுதான். சரியாக விளக்கமுடியாத நிலையில், இந்த உறுதிமொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லின் அடிப்படையில், கடவுளை ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பதும் சமமாக விளக்க முடியாததாகும். என்னைப் பொறுத்தவரை, கடவுள் என்பது எவ்வித அர்த்தமும் இல்லாமல் தனித்து நிற்கும் ஒரு சொல். கடவுள் என்பது விளக்க முடியாததாக இருக்கும்வரையில், நான் கடவுளை மறுப்பதாகவும் கொள்ள முடியாது” என்றார் பிராட்லா.

அவர், கடவுள் பெயரால் உறுதியேற்க மறுத்ததால், அவரை அதிகாரப்பூர்வ உறுப்பினராக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்க முடியவில்லை. மசோதாக்கள் மீதான அவரது வாக்குரிமையும் நிராகரிக்கப்பட்டன. சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார். ஆனாலும், தன் நிலையில் உறுதியாக இருந்த பிராட்லா, மாற்று வகையில் உறுதிமொழி ஏற்க வழிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இதனையடுத்து, 1880ல் ஒரு தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது தேர்வு கமிட்டியும் அமைக்கப்பட்டது. கடவுளை மறுத்து உறுதிமொழி ஏற்பதா என பெரும்பாலான உறுப்பினர்கள் பிராட்லாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். பிராட்லாவின் போராட்டம் தொடர்ந்தது. அரை மாமாங்க காலப் போராட்டத்திற்குப் பிறகு, 1886ல் கடவுளின் மீது ஆணையாக என்பதற்குப் பதிலாக, உளமார (மனசாட்சியின்படி) உறுதிகூறி பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு பிராட்லா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மட்டுமல்ல, உரிய சட்டத்திருத்தத்தின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடவுள் பெயராலோ, உளமாரவோ உறுதியேற்க அனுமதி வழங்கப்பட்டது.

உறுதி குலையாத அறவழிப் போராட்டத்தின் வழியாகப் பெற்றதுதான், ‘உளமார’ உறுதியேற்கும் வாய்ப்பாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தைப் பெருமளவில் தழுவி, சட்டம் இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன. அதில், தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியானதாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1967ல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசில் அத்தனை பேரும் ‘உளமார’ (மனசாட்சியின்படி) உதவியேற்றனர். கடவுள் பெயரால் உறுதி ஏற்பதைத் தவிர்த்தனர். 1969, 1971 என இருமுறை பதவியேற்ற கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசிலும் அனைவரும் இதையே கடைப்பிடித்தனர். எம்.ஜி.ஆர் தலைமையில் 1977, 1980, 1984 என மூன்று முறை அ.தி.மு.க அரசு அமைந்தபோதும் இதே நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு எம்.ஜி.ஆர் சென்று வந்தாலும், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தங்களின் ஆன்மிக ஈடுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டபோதும், ஆட்சி என்பது அண்ணா உருவாக்கிய வழியில் பதவியேற்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1989, 1996, 2006 தி.மு.க ஆட்சியிலும் கலைஞரிலிருந்து அனைவரும் உளமார உறுதியேற்றனர்.

இந்த நடைமுறைக்கு இடையூறு செய்தவர், தமிழக அரசியலின் ஆகப்பெரிய கேடான ஜெயலலிதாதான். 1991ல் முதன்முதலாக அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, உளமார என்பதைத் தவிர்த்து, கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றார். ஆட்டுமந்தையில் முதல் ஆடு தாவினால், அத்தனை ஆடுகளும் ஏனென்று அறியாமலேயே தாவும். அதேபோல ஜெயலலிதா வழியிலேயே, கடவுளின் பெயரால் மற்ற அமைச்சர்களும் பதவியேற்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகளாக திராவிட இயக்க மூத்த தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியனும், கே.ஏ.கிருஷ்ணசாமியும் உளச்சான்றின்படி உறுதியேற்றனர்.

2001இல் ஜெ இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தபோது நாவலர் உயிருடன் இல்லை, கே.ஏ.கே தேர்தல் களத்திற்கே வரவில்லை. அதனால் 2001, 2011, 2016 என ஜெ ஆட்சி அமைந்தபோதெல்லாம் கடவுள் பெயரால் மட்டுமே உறுதிமொழி எடுக்கப்பட்டது. உளச்சான்றின்படி உறுதியேற்கலாம் என்பதை ஓ.பி.எஸ், எடப்பாடி போன்ற தற்காலிகப் பிரபலங்களும் அறிந்ததில்லை.

கடவுளின் பெயராலோ, உளச்சான்றின்படியோ இரண்டில் ஒன்றை ஒருவர் தேர்ந்தெடுத்து உறுதி மொழி ஏற்கலாம். இதனைக் கடந்து வேறு பெயர்களைச் சொன்னால், அந்தப் பதவிறேப்பு செல்லுமா என்பது கேள்விக்குறியாகிவிடும். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் எம்.பிக்கள் முறைப்படியாகப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்ற பிறகு தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, திராவிடம் வாழ்க, பெரியார்-அண்ணா-கலைஞர் வாழ்க என்று சொன்னவை எதுவும் அவைக் குறிப்பில் பதிவாகாது எனத் தெரிவிக்கப்பட்டது. அவை உண்மை உணர்வை வெளிப்படுத்தும் சொற்கள் மட்டுமே.
- கோவி.லெனின், பத்திரிகையாளர்