கருத்தாக்கம்

"பொய் சொல்லியும், துதிபாடியும், புன்சிரிப்பை வெளிப்படுத்தியும் மக்களில் பெரும்பாலானோர் ஒருவரை ஒருவர் இங்கே ஏமற்றிக்கொண்டு திரிகிறார்கள்" -பிரபல எழுத்தாளர்.

சனி, 22 மே, 2021

முதுமை மறதியும்[Dementia] முழு மறதியும்[Alzheimer]!!

'முதுமை மறதி(டிமென்ஸியா)'க்கும், 'அல்சீமர் மறதி' நோய்க்கும் வேறுபாடுகள் உள்ளன. வயதாக ஆக, மூளையிலுள்ள அணுக்கள் அழிந்துகொண்டிருப்பதே இந்நோய்களுக்கான காரணம் ஆகும்.

'முதுமை மறதி'யில் மறந்துவிடுகிற ஒன்று கொஞ்ச நேரம் கழித்து நினைவுக்கு வந்துவிடும். அல்சீமரிலோ மறந்தது எளிதில் நினைவுக்கு வராது. 

'முதுமை மறதி' உள்ள ஒருவரிடம் பேனாவைக் கொடுத்தால் முதலில் ‘கத்தி’ என்பார். ‘நல்லா பாருங்க... எழுதிப் பாருங்க...’ என்று சொன்னால், ஆமாம்! பேனாதான்! என்று ஏற்றுக்கொள்வார்.

அல்சீமர் மறதிக்குள்ளானவர், "இல்லை, கத்தியேதான்" என்று சாதிப்பார். பாதிப்பு கடுமையாக இருக்கும். அல்சீமர் உள்ளவர்கள் சமையலறையில் போய் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு மறதி உடையவர்களாக இருப்பதும் உண்டு. 

பிரெஷ்ஷில் பேஸ்ட்டை வைத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்பார்கள். காபி குடித்ததை மறந்துவிட்டு, ‘எனக்குக் காபியே கொடுக்கவில்லை’ என்று வீட்டுப் பெண்களிடம் சண்டை போடவும் செய்வார்கள்.

மரபு ரீதியாக வரும் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள், வேதியியல் பொருட்களின் தாக்கம் ஆகியவற்றால் அல்சீமர் வருவதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுவரை நிரூபணம் இல்லை. அல்சீமர் நோய் பாதித்தவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு டிமென்ஷியாவும் சேர்ந்தே இருக்கிறது.

70 வயது தாண்டிய பெண்களுக்கே இப்பிரச்னை அதிகமாக வருகிறது. தனிமையும் மனச்சோர்வும்கூட மறதிக்குக் காரணமாக அமையும். வீட்டுக்குப் போகும் பாதையை மறப்பார்கள். இடம், காலம், நேரம் எல்லாம் அவர்களுக்கு அடிக்கடி மறக்கும். 

"50 வயதுக்கு கீழே உள்ள சிலருக்குக்கூட அல்சீமர் வருகிறது. இதை Early Alzheimer என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். வீரியமான மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கும், தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரப்பவர்களுக்கும், அதிக மனச்சோர்வு உள்ளவர்களுக்கும், தலையில் கட்டி அல்லது காயம் உள்ளவர்களுக்கும், வைட்டமின் பி12 குறைவாக உள்ளவர்களுக்கும் அல்சீமர் நோய் தாக்கக்கூடும்" என்கிறார்கள் அவர்கள்.

அல்சீமர் நோய் வந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரைக் குழந்தையாகப் பாவித்து அரவணைத்து வழிநடத்த வேண்டும். அறியாமல் அவர்கள் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தக்கூடாது. 

பசலைக்கீரை, கிரீன் டீ, வெங்காயம், முளை கட்டிய கோதுமை, உலர் திராட்சை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வல்லாரைக் கீரை ஆகியவை மூளைக்குப் பலம் தந்து நினைவாற்றலைத் தக்க வைக்க உதவுகின்றன.

அல்சீமர் நோய்க்கு உள்ளானவர்கள் உடலைப் பருமனாக வைத்திருக்கக் கூடாது. 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தினமும் போதிய நடைப்பயிற்சி செய்யவேண்டும். தகுந்த கால இடைவெளியில் முறையான மருத்துவப் பரிசோதனையைச் செய்தல் வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். மது அருந்துவதையும் புகைப்பிடித்தலையும் நிறுத்திவிட வேண்டும்.

தனிமையை, முதியவர்கள் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பது, விளையாடுவது போன்றவை அவர்களின் தனிமைத் துன்பத்தைப் போக்கும். மூச்சுப்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வது நல்ல பலன் தரும். 

மூளையைத் தூண்டும் பயிற்சிகளான குறுக்கெழுத்து, வார்த்தை விளையாட்டு, பாடல்களை மனப்பாடம் செய்து எழுதுதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டலாம். கணினியைத் தினமும் பயன்படுத்தினால் மூளைக்குப் போதிய பயிற்சி கிடைக்கும். நடைமுறை விஷயங்களை மாற்றிப் புதிதான செயல்களில் ஈடுபடுவது மூளைக்குப் புத்துணர்ச்சியைத் தரும். அல்சீமரைப் பொருத்தவரை வாழ்க்கை முழுவதும் இருக்கும். அதனுடன் வாழப் பழகிக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள்.

======================================================================

'மறதி' குறித்த தகவல்கள் இணையங்களில் வெளியான மருத்துவக் கட்டுரைகளில் இடம்பெற்றவை.