விழா இனிதே நடந்து முடிந்த பிறகு, வருகை புரிந்து வாழ்த்தியவர்கள் விடை பெற, மிக நெருங்கிய சொந்தபந்தங்கள் மட்டுமே இல்லத்தில் குழுமியிருந்தனர்.
அவர்களில், திரேதனின் நண்பர் துவாபரனும் ஒருவர்.
“உங்களுடன் தனிமையில் பேசணும்” என்றார் துவாபரன்.
இருவரும் தனி அறைக்குச் சென்றார்கள்.
"999 ஆண்டுகள் நிறைவா வாழ்ந்து முடிச்சிட்டீங்க. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து முடித்த பெருமிதம் உங்கள் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அதுக்குப் பதிலா அடர்த்தியான சோகம் அல்லவா அப்பிக் கிடக்குது!” என்றார் துவாபரன்.
“இப்போதைய மனித குலத்தின் அதிகபட்ச வாழ்நாள் 1000 ஆண்டுகள்தான். என் வாழ்நாளில் 999 ஆண்டுகள் இருக்கும் இடம் தெரியாம கரைஞ்சி போச்சி. மிஞ்சியிருப்பது ஓர் ஆண்டு மட்டுமே. எந்த நேரத்திலும் சாவு என்னை அரவணைக்கலாம். அடுத்து வரும் பிறந்த நாளை நான் கொண்டாடுவது சாத்தியம் இல்லாமல் போகலாம். உண்மையைச் சொன்னா, நான் அதிகபட்ச மரண பயத்துடனும் வருத்தத்துடனும்தான் இருக்கிறேன்” என்றார் திரேதன்.
“என்ன செய்ய? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் ஆயுட்காலம் 100 ஆகத்தான் இருந்தது. இப்போ ஆயிரம். அதை நினைச்சிப் பார்க்கணும். வருங்காலத்தில் இது இருபதாயிரம் ஆகலாம்; இருபது லட்சம் ஆகலாம். விஞ்ஞானிகள் சாதிப்பார்கள்.”
”இருபது லட்சம் என்ன, மனிதனின் ஆயுள் அதற்கு மேலேயும் அதிகரிக்கலாம்; அதிகரித்துக்கொண்டே போகலாம். ஆயினும் என்ன, கோடி கோடி ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு நாள் ஒவ்வொரு மனிதனும் செத்துத்தான் ஆகணும். சாகப்போகும் நாள் நெருங்கும் போது, மரண பயத்தில் சிக்கி வேதனைப்படுவதைத் தவிர்க்க முடியுமா என்ன?”
“ஆன்மிகச் சிந்தனையால் அது சாத்தியப்படும் என்கிறார்களே?”
"அது ஒரு நம்பிக்கை மட்டுமே. 'ஆன்மிகத்தால் மரண பயத்தைப் போக்கலாம்; மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்' என்பதெல்லாம் ஆதாரமற்ற கூற்றுகள். எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதைவிட, மரணத்தைப் பற்றிய அச்சம் சிறிதுமில்லாமல் சாக வேண்டும் என்பதே விரும்பத்தக்கது. அறிவியல் அடிப்படையில் அதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சிப்பதே புத்திசாலித்தனம். ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் திருத்துவதன் மூலம் இது சாத்தியமாகலாம். விஞ்ஞானிகள் இது பற்றித் தீவிரமாகச் சிந்திக்கணும்; சிந்திக்க வைக்கணும். நீதான் பத்திரிகையாளன் ஆச்சே. உன் பத்திரிகையில் இதைப் பத்தி எழுதேன்.”
“கண்டிப்பா எழுதுவேன்” என்று சொல்லி விடை பெற்றார், திரேதனைக் காட்டிலும் 100 ஆண்டுகள் இளையவரும் பத்திரிகை ஆசிரியருமான துவாபரன்.
=========================================================================================
* பழைய கதை; மெருகூட்டப்பட்டது. எழுதியவர்?
150 ஆண்டுகள் உயிர் வாழ ஆசைப்படும் ஒரு மூத்த குடிமகன்! ஹி...ஹி...ஹி!!