'பாசம்' என்றவுடன் 'தாய்ப் பாசம்'தான் நம் நினைவுக்கு வருகிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வதில் தந்தையின் பங்கு பெரிதென்றாலும், பாசத்தைப் பொழிவதில் 'தாய்க்கு நிகர் தாய்தான்' என்பதே உலகோரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
"இல்லையில்லை, தாயை மிஞ்சும் 'பாசக்காரத் தந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறது... நம்மையும் சொல்ல வைக்கிறது 'சீனா'வின் 'ஷாண்டோங்' மாகாணத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 'ஜின்ஷேன்' என்ற 2 வயதுச் சிறுவனைக் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றார்கள். காவல்துறையின் உதவியை நாடினார் அவனின் தந்தை 'குவோ கேங்டாங்'. பலனில்லை.
மகனை எங்கெங்கெல்லாமோ தேடி அலைந்தார் அவர்; அலைந்தார்; அலைந்துகொண்டே இருந்தார்.
ஒரு மாதம் அல்ல; ஓராண்டு அல்ல; 24 ஆண்டுகள் தேடினார்.
தன் வாழ்க்கை முடிவதற்குள் எப்படியாவது தன்னுடைய மகனைக் கண்டு பிடித்துவிடவேண்டும் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன், சிறுவனின் புகைப்படம் பொறித்த கொடியுடன் 24 ஆண்டுகள் 'பைக்'கில் கிட்டத்தட்ட 5 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்தார் குவோ.
ஒன்றன்பின் ஒன்றாக அவர் பயன்படுத்திய ''பைக்'குகளின் எண்ணிக்கை10. பலமுறை ஏற்பட்ட விபத்துகளால் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. நம்பிக்கை இழக்காமல், சீனாவில் காணாமல் போனவர்களைத் தேடும் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு தேடினார். பலன் கிடைத்ததா?
கிடைத்தது.
சீனப் பாதுகாப்பு நலவாரியத்தின் உதவியுடன், டி.என்.ஏ சோதனை வாயிலாகத் தன் மகன் மத்தியச் சீனாவில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
குவோ தன் மகன் ஜின்ஷேனைக் கட்டியணைத்து அழும் காணொலிகள் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.
பலரும் அவரை வாழ்த்தியவாறு இருக்கிறார்களாம்.
நாமும் வாழ்த்துகிறோம்.
"பாசம் மிகு தந்தையே,
உங்களின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மனதாரப் பாராட்டுகிறோம். அளவிட முடியாத உங்களின் பிள்ளைப் பாசத்தைப் போற்றி மகிழ்கிறோம்."
===================================================================================
நன்றி: 'புதிய தலைமுறை'