இதுவே இங்குள்ள மிகப் பெரும்பான்மையான கட்சித் தலைவர்களின் எண்ணமும் ஆகும். இவ்வகையான தலைவர்களில் மு.க. ஸ்டாலின் அவர்களும் ஒருவரே என்பது நம் நம்பிக்கை.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே சீரான வளர்ச்சியை/வசதிகளைப் பெற்றிடப் பாடுபடுவதே தம் இலட்சியம் என்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னரான மிகக் குறைந்த கால இடைவெளியில், அந்த இலட்சியத்தை நிறைவேற்றிடும் வகையில் முனைப்புடன் செயல்படுகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகையதொரு நல்ல வரவேற்கத்தக்க சூழ்நிலையில், தமிழ்நாடு பிரிக்கப்படுதல் வேண்டும் என்னும் கோரிக்கை எழுப்பப்பட்டது. பிரச்சினைகள் ஏதுமின்றிச் சிறப்பானதொரு நிர்வாகம் இங்கே அமைந்திருக்கும் நிலையில் 'கொங்கு நாடு மாநிலம்' தேவையில்லை என்பதும் உணரப்பட்டது. கொங்கு மாநிலப் பிரிவினை முழக்கம் படிப்படியாகத் தணியத் தொடங்கியது.
நாட்டை ஆளும் 'பாஜக' தலைமையும்கூட 'பிரிக்கும் திட்டம்' ஏதும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த 'பெஸ்ட்'ராமசாமி என்னும் ஒரு தொழிலதிபர் 'பிரிப்பு' முழக்கத்தைப் புதுப்பித்திருக்கிறார்.
'1976இல் இருந்து ஒரு அமைப்பை நடத்தி வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். கொங்குநாடு என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல. கொங்கு நாட்டில் வாழும் அனைவருக்குமானது. தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம்' என்பது அவர் வழங்கியுள்ள ஊடகச் செய்தி.
'கொங்குநாடு' என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல என்பது மற்ற சமுதாயத்தவருக்குத் தெரியும். அது பெரும்பான்மை எண்ணிக்கையைக் கொண்ட ஜாதி என்பதும் தெரியும். அப்புறம் எதற்கு ஜாதியைக் குறிப்பிட்டுப் பேசினார் என்பது புரியவில்லை.
'கொங்கு மாநிலக் கோரிக்கை ஏற்கப்பட்டு, அது உருவாக்கப்படுவதற்கான அறிவிப்பை நடுவணரசு வெளியிட்டால்தான் அதை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவரும்.
கோவையில் தொடங்கி, கிருஷ்ணகிரி & தர்மபுரி வரையிலான பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய மண்டலத்தை மாநிலமாக்கி, அதற்குக் 'கொங்கு மாநிலம்' என்று பெயரிட்டால் அதை முதலில் எதிர்ப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், 'வன்னியர் பெல்ட்' என்று சொல்லப்படும் கணிசமான பகுதிகள் இதில் உள்ளடங்கியுள்ளன[மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை டாக்டர் ராமதாஸ் அவர்கள் அண்மைக் காலங்களில் எழுப்பிடவில்லை என்பது அறியத்தக்கது].
தெலுங்கர்கள் இத்தனை லட்சம் பேர்[வீட்டில் தெலுங்கு பேசும் அனைத்துச் சாதியாரையும் கணக்கிட்டு..., முன்பு ஒருவர் முயன்று தோல்வி கண்டார்] இருக்கிறோம் என்று சொல்லித் 'தெலுங்கு மாநிலம்' என்று பெயர் சூட்டச் சிலர் கோரிக்கை வைக்கக்கூடும். வீட்டில் தெலுங்கு பேசினாலும்[அதுவும் வெகுவாகக் குறைந்துவிட்டது] தாமும் தமிழர் என்றே எண்ணித் தமிழினத்துக்காகப் பாடுபடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர்['வைகோ' போதும்] என்பதை மறந்துவிட்டு மனம்போன போக்கில் பேசுதல் கூடாது.
'கொங்கு மாநிலம் அனைத்துச் சமுதாயத்தினருக்குமானது'[சமுதாயம் என்னும் மேல்பூச்சு தேவையில்லை; ஜாதி என்றே சொல்லலாம்] என்று பெஸ்ட் ராமசாமி அவர்கள் சொன்னாலும், பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்த அவரின் உள்நோக்கம்[கொங்கு மாநில முதல்வர் ஆவது] மற்ற ஜாதியாருக்குப் புரியாமல் போகாது.
"ஜாதிகள் எல்லாமே செயற்கையாக உருவாக்கப்பட்டவை. 'தமிழ்ச்சமுதாயம்' என்பது பேசும் மொழியின் அடிப்படையில் இயற்கையாக உருவானது. அந்த அமைப்பைத் தங்களின் சுயநலத்திற்காகச் சிதறடிக்க வேண்டாம்" என்பது 'பெஸ்ட்'ராமசாமி உட்படக் கொங்கு நாடு மாநிலக் கோரிக்கையை முன்னெடுக்கும் அனைவருக்கும் பணிவுடன் நாம் முன்வைக்கும் கோரிக்கை ஆகும்.
சிறுபான்மை ஜாதியார்கள் தமிழ்நாட்டின் முதல்வர்களாக ஆட்சிபுரிந்தது அனைவருக்கும் தெரியும். அவர்களின் பொதுநல நோக்கும் உழைப்பும்தான் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்தது.
பெஸ்ட் ராமசாமி அவர்களுக்கு அந்த ஆசை இருந்தால், தன் தன்னலமற்றச் செயல்பாடுகளால் தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வராக ஆகலாம். அதற்குக் கொங்கு மாநிலம்தான் வழிவகுக்கும் என்ற தவறான கணிப்பு வேண்டாம்.
நன்றி!