அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 19 ஜூலை, 2021

அமெரிக்காவில் 'குரங்கு அம்மை'! பிற நாடுகளுக்குத் தாவுமா?!


கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே உலகை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தொற்றுதான். உலகில் எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. 

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளால்கூட இதன் கோரப் பிடியிலிருந்து விடுபட இயலவில்லை. சொல்லப்போனால் உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காதான் அதிக மக்களை இழந்துள்ளது. 

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவருக்கு, அரிய வகையான குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அம்மை நோய்க்கு உள்ளானவர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நைஜீரியா நாட்டில் இருந்து நாடு திரும்பினாராம். அவர் தற்போது டல்லாஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். 

அந்த நபர் வந்த விமானத்தில் பயணித்த நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணிகளில் அமெரிக்கத் 'தொற்று நோய்க் கட்டுப்பாடு அமைப்பு' ஈடுபட்டுள்ளது. 

அவர் இரண்டு விமானங்களில் பயணித்துள்ளார். முதலில் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து அட்லாண்டாவுக்குக் கடந்த ஜூலை 8ஆம் தேதி பயணித்துள்ளார். அதன்பிறகு அதே தேதியில் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸுக்குச் சென்றுள்ளார். உடன் பயணித்தவர்கள் குறித்தத் தரவுகளைத் தொற்று நோய்க் கட்டுப்பாடு அமைப்பு சேகரித்து வருகிறது. 

இதுவரை, இந்த ஒருவருக்கு மட்டுமே குரங்கு அம்மைப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2003ஆம் ஆண்டு 47 பேருக்குக் குரங்கு அம்மைப் பாதிப்பு ஏற்பட்டதாம். அப்போது அமெரிக்காவின் மேற்கு மாகாணத்தில் நாய்கள் மூலம் இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. 

குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான தொற்று நோய் என்பதோடு, தீவிரமாகப் பாதிக்கக்கூடிய 'தீநுண் கிருமி' [வைரஸ்] ஆகும். 

எலிகளுக்குள்ளேதான் இந்த வைரஸ் உயிர் வாழுமாம். ஆனால், சில சமயங்களில் இது மனிதர்களுக்கும்கூட பரவும் ஆபத்து உள்ளது. 

குரங்கு அம்மை வைரஸும் பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். பெரும்பாலான மற்ற வைரஸ்களைப் போலவே இந்த வைரசும் முக்கியமாகச் சுவாசத் துகள்கள் மூலமே பரவுகிறது. அந்தச் சுவாசத் துகள்கள் கண்கள், வாய், மூக்கின் வழியே உடலில் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதேபோல ஒரு நபரின் உடலில் காயங்கள் ஏதேனும் இருந்தால், அதன் மூலம்கூட குரங்கு அம்மை பரவும் அபாயம் உள்ளது. அதேபோல, துணிகள் மூலமும் ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக்கூடியது. 

'முகக் கவசம் அணிவதன் மூலம், இது பரவுவதைத் தடுத்திட முடியும் என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

====================================================================================

https://tamil.oneindia.com/news/washington/us-reports-monkeypox-case-in-texas-resident-in-nearly-20-years/articlecontent-pf572788-427332.html  [July 17, 2021, 19:24 [IST] ]