புதன், 21 ஜூலை, 2021

'நரக வாசல்'!!!


'மரணத்திற்குப் பிறகு, புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கும், பாவம் செய்தவர்கள் நரகத்திற்கும் சென்று தத்தமக்குரிய வினைப்பயன்களை அனுபவிப்பார்கள்' என்று 'மகா ... பெரிய' மகான்களும் ஞானிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

போதுமான அளவிற்குப் புண்ணியம் செய்யாதவர்களுக்காக, ஒரு 'குறுக்கு வழி'யையும் காண்பித்து அவர்கள் அருள்பாலித்திருக்கிறார்கள். 

'வைகுண்ட ஏகாதசி தினத்தில் வைணவக் கோயில்களின் வடக்கு வாசல்(சொர்க்க வாசல்) வழியாகக் காட்சிதருவார் பகவான். அப்போது அவரைத் தரிசித்துப் புளகாங்கிதப்பட்டாலே சொர்க்கம் சேரலாம்' என்பதே அந்தக் குறுக்கு வழி.

மலையளவுக்குப் பாவங்கள் செய்திருந்தாலும், அவரைத் தரிசித்த அந்தக் கணப்பொழுதிலேயே அவை முற்றிலுமாய் நீங்கிவிடுமாம்!

சொர்க்கம் செல்வதற்கான குறுக்கு வழியாக, 'சொர்க்க வாசல்' அமையும் என்றால், 'நரகம்' செல்வதற்கும் ஒரு 'குறுக்கு வழி'[நரக வாசல்] இருந்துதானே தீரும். 

பெரும் பெரும் பாவங்களைச் சுமந்து திரிந்தாலும், சிலர்[பலராகவும் இருத்தல்கூடும்],  அரங்கனைப் பணிந்து போற்றிச் சொர்க்கம் செல்லுவதை வெறுக்கவும் செய்யலாம். நரகம் செல்வது 100% உறுதி என்பதால், இந்தப் பொல்லாத உலகில் மரணம் வரும்வரை காத்திருக்க விரும்பாமல், 'நரக வாசல்'இல் நுழைந்து பூத உடலுடன் விரைந்து நரகத்திற்குச் சென்றுவிட அவர்கள் ஆசைப்படலாம்.

எனவே, சொர்க்க வாசல்கள் கண்டறியப்பட்டது போல, எங்கெல்லாம் நரக வாசல்கள் இருக்கின்றன என்பதை, 'ஜக்கி வாசுதேவ்' போன்ற நடமாடும் கடவுள்கள் கண்டறிந்து சொல்வார்களேயானால், அது நம் மக்களில் ஒருசாராருக்குச் செய்த பெரும் சேவையாக அமையும்.

மனம் இரங்குவார்களா ஜக்கியும், அவரனைய பிற அவதாரங்களும்?!

====================================================================================

***சொர்க்கவாசல் பிறந்த கதை :

ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதுகளிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். 'இந்த அசுரச் சகோதரர்களை அடக்க வல்லவர் விஷ்ணுபகவான் ஒருவரே' என்ற முடிவில் தேவர்கள் அவரிடம் முறையிட, பெருமாள் அரக்கர்களுடன் போர் புரிந்தார்; அவர்களைச் சரணடையச் செய்தார்.

'பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். தங்களைப் போல் பலரும் இந்தப் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.

"எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களைத் தரிசிப்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி முக்தி அளிக்க வேண்டும்." 

அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது[https://www.facebook.com/542657935767949/posts/2291620617538330/]

                                          *  *  *

கீழ்க்காண்பது மனதைக் கலங்கடிக்கும் காணொலி!