வியாழன், 22 ஜூலை, 2021

'மது சுமந்த மங்கை'... இராஜாஜி சிறுகதை!!!


திருமணம் ஆகாத அழகான ஒரு பிரமச்சாரி இளைஞன் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கிராமத்துப் பாதையில் தனியாகச் சென்றுகொண்டிருந்தான்.

சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, உடல் உறுதியும் பேரழகும் வாய்ந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் எதிரே வந்துகொண்டிருப்பதை அவன் கவனித்தான். அவள் தன் தலையில் 'மதுக்குடம்' சுமந்திருந்தாள்; இடுப்பில் குழந்தை. 

அவனை அவள் மிக நெருங்கிவிட்ட நிலையில், அவளின் இடுப்பில் ஒரு கூர்மையான கத்தி செருகப்பட்டிருப்பதையும் அவன் கண்டான்.

அவள் இவனைக் கூர்ந்து நோக்கினாள்; இவனுடன் இணைந்து இன்புற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.

"அக்கம்பக்கம் யாரும் இல்லை. ரெண்டுபேரும் சந்தோசமாக இருக்கலாம்" என்று கிறங்கடிக்கும் குரலில் அவள் சொன்னாள்.

அவன் திடுக்கிட்டான்; "மன்னிக்கணும். நீ இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள். நானோ பிரமச்சாரி. நமக்குள் தகாத உறவு வேண்டாம்" என்று திடமான குரலில் சொன்னான்.

அடுத்த கணமே அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தன் இடுப்பிலிருந்த கத்தியைத் தொட்டுக்காட்டி, "என் இச்சைக்கு நீ இணங்கணும். இதுல விருப்பம் இல்லேன்னா, என் குழந்தையைக் கொல்லணும். அதுக்கும் நீ சம்மதிக்கலேன்னா, குடத்தில் இருக்கிற மதுவை உன் வயிறு முட்டக் குடிக்கணும். இந்த மூன்றில் எதையாவது ஒன்றை நீ செய்தே ஆகணும். மறுத்தால் என் இடுப்பில் இருக்கிற கத்தியால் குத்தி உன்னைக் கொலை செய்வேன். இது உறுதி" என்றாள்.

அவளின் முகபாவனை, எதற்கும் துணிந்தவள் அவள் என்பதை அடையாளப்படுத்தியது.   

இந்த மூன்றுமே பாவ காரியங்கள் என்பதை அவன் உணர்ந்திருந்தான்; மூன்றில், மது குடிப்பதுதான் தனக்குக் குறைவான பாவங்களைச் சேர்க்கக்கூடியது என்று நினைத்தான்; குடத்திலிருந்த மதுவை அருந்தினான்.

போதை தலைக்கேறியவுடன், மனம் மாறி அவளுடன் சேர்க்கை கொள்ள ஆசைப்பட்டான்.

செயல்படத் தலைப்பட்டபோது, குழந்தை வீறிட்டழுது, தாயைப் பிரிய மறுத்து அடம்பிடித்தது.

குழந்தையின் பிடிவாதம் அவனின் வெறியுணர்ச்சியை உச்சநிலைக்குக் கொண்டுசென்றது. மனதைக் கல்லாக்கிக்கொண்டு, அவளின் இடையிலிருந்த கத்தியால் குழந்தையைக் குத்திக் கொன்றான்.

அந்தப் பெண்ணோடு இணைந்து இன்புற்றான்.

ஆக, செய்யக்கூடாது என்று அவன் நினைத்த இரண்டு பெரிய குற்றங்களையும் அவன் செய்திடக் காரணமாக அமைந்தது கொடிய மது போதைதான்.

====================================================================================

***மதுவால் விளையும் கேடுகளை உணர்த்த இராஜாஜி அவர்கள் எழுதிய இந்தக் கதை எப்போதோ எங்கோ படித்தது. எனக்குப் பழக்கமான நடையில் பதிவு செய்திருக்கிறேன்; கதையின் 'தரம்' குன்றாத வகையில் கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறேன்.

பதிவின் தலைப்பு['மது சுமந்த மங்கை'] நான் தந்தது.