“நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தம் இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் குவித்தார் ஒரு பிராமணர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில்,1895-ஆம் ஆண்டில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்த அவர் பெயர் வெ. சாமிநாத சர்மா; பன்மொழி வித்தகர்; 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
இவர் செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கல்வி பயின்றார். "உண்மையில் பள்ளிக்கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று'' என்று தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக்கொண்டவர்[விக்கிப்பீடியா].
"தாய் மொழியில் பயிற்சி இல்லாதவன், தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள், முதலில் மொழிச் சுதந்திரத்திற்காகவே பாடுபட்டார்கள்'' என்று தம் தாய்மொழிப் பற்று குறித்துப் பதிவு செய்துள்ளார்.
கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் சாமிநாத சர்மா, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இந்த அறிஞர் பற்றி மறைந்த கவியரசு கண்ணதாசன்:
‘உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி, தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இவரைப்போல் எவரும் முயன்றதில்லை. கதைப் புத்தகங்கள்கூட இரண்டாயிரத்துக்கு மேல் விற்காத காலத்தில் அறிவியல் நூல்கள் எழுதி அவஸ்தைப்பட்டவர்.
நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு.சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.
பஞ்சாங்கம் எழுதியிருந்தால் நல்ல ராயல்டி வந்திருக்கும். இவரோ விஞ்ஞானம் எழுதினார்.
சீனாவில் சியாங்கே ஷேக் ஆட்சி வந்தபோது, ‘புதிய சீனா’ எழுதினார்; ‘பிரபஞ்சத் தத்துவம்’ எழுதினார். பொது மேடையில் தோன்றி, ஒரு மாலைகூட வாங்கிக்கொள்ளாமல் காலமாகிவிட்டார். அவர்தான் வெ.சாமிநாத சர்மா.’
========================================================================