திங்கள், 23 ஆகஸ்ட், 2021

'குமுதம்' இதழுக்கு 'மகா பெரியவா' மீது என்ன கோபம்?!?!


மறைந்த, 'மகா பெரியவா' என்று சொல்லப்படும் 'சந்திர சேகரேந்திர சுவாமியை மையப்படுத்தி, குமுதம் இதழ் தொடர்ந்து கற்பனை நிகழ்வுகளை வெளியிட்டுவருகிறது.

அவரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து அது வெளியிடும் கட்டுரைகள், அவரை எந்த அளவுக்குச் சிறுமைப்படுத்துகின்றன என்பதைக் குமுதம் அறியமலிருப்பது ஏன் என்று புரியவில்லை.

25.08.2021 இதழில் வெளியாகியிருக்கும் பெரியவா தொடர்பான கட்டுரையின் தலைப்பு, 'மகா பெரியவா தந்த மட்டைத் தேங்காய்' ஆகும்.

மகப்பேறு இல்லாத ஒரு பெண்ணிடம், "இந்தா இதை மடியில் வாங்கிக்கோ"ன்னு  மட்டை உரிக்காத இரண்டு தேங்காய்களைக் கொடுத்தார் பெரியவா. அந்தப் பெண்ணும் அவ்வாறே செய்தாள்; கருவுற்றாள்[இரண்டு தேங்காய் என்பதால், ஓர் ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனவாம்].

"இது உண்மை நிகழ்வென்றால், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு,  பிள்ளைப் பேறு இல்லாத அத்தனைப் பெண்களும் பெரியவாவைத் தரிசித்து[பெரியவா உயிரோடு இருந்தவரை]க் குழந்தை பெற்றிருக்கலாம். மருத்துவச் செலவு மீதியாகியிருக்கும்.

இந்த நிகழ்வுக்கு முன்பே, 'சாத்தனூர்' என்னும் அந்தப் பெண்ணின் ஊருக்குச் சென்று அவர் முகாமிட்டிருந்தபோது, அவர் வருகைபுரிந்த சமயத்தில் மாதவிலக்கு நின்றுபோனதால், தன் வயிற்றில் கரு தங்கியிருப்பதாக அந்தப் பெண் நம்பினாராம். கதாசிரியரின் இந்தக் கற்பனை எத்தனை அபத்தமானது என்பது சிறிது சிந்தித்தாலே புரியும்.

இப்படி நடப்பது சாத்தியம் என்றால்.....

பெரியவா முகாமிட்ட ஊர்களில் எல்லாம் குழந்தை இல்லாத பெண்கள் கருவுறும் அதிசயம் நிகழ்ந்திருக்கும் அல்லவா?

கிஞ்சித்தும் சிந்திக்கத் தெரியாதவர்கள்கூட இந்தக் கேள்வியைக் கேட்பார்களே!

குமுதம், தனிச்சுற்றுக்கு மட்டுமேயான ஓர் இதழ் அல்ல; பொது மக்களுக்கானது. இதில் வெளியாகும் இம்மாதிரியான கதைகள் மக்களின், குறிப்பாக, பெரியவா பக்தர்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிக்கக்கூடியவை என்பதால், இந்தக் கதை குறித்த விமர்சனத்தை அடியேன் எழுதிட நேர்ந்தது.

பெரியவாவைப் பெருமைப் படுத்துவதாக நம்பிக்கொண்டு, அவரைச் சிறுமைப்படுத்தும் இம்மாதிரிக் கதைகளை இனிமேல் குமுதம் வெளியிடாது என்று நம்புவோம்.

====================================================================================