அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 21 ஆகஸ்ட், 2021

நடுவணரசின் ஓரவஞ்சனை!!!


'7 ஆண்டுகளாக 'வார்ஸா'[போலந்து] பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைகளுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை' என்பது செய்தி.

'வார்ஸா'வில் 4 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர், டாக்டர் கி.நாச்சிமுத்து அவர்கள் இது குறித்துக் கூறும்போது,2013இல் கடைசியாகக் கோயம்புத்தூரிலிருந்து சென்ற மொழியியல் துறைப் பேராசிரியர் ஏதோ சில காரணங்களால் வெறும் 6 மாதங்களில் இந்தியா திரும்பினார். மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் 'ஐசிசிஆர்' அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் 1970ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய அரசு சார்பிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஐசிசிஆர் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் பேராசிரியருக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும்.

வெளிநாடுகளின் 69 கல்வி நிறுவனங்களில் இந்திய இருக்கைகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக இந்திக்கு 25-க்கும் மேற்பட்ட இருக்கைகளும், இதையடுத்து, சம்ஸ்கிருதத்துக்கும் உள்ளன. தமிழுக்கு வெறும் 2 இருக்கைகள் மட்டுமே போலந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றாக வார்ஸா நகரின் வார்ஸா பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிகள் துறையில் 47 வருடங்களாகத் தமிழ் இருக்கை உள்ளது. இதன் அருகிலுள்ள 'கிராக்கூப்' நகரின் 'கிராக்கூப்யாகி எலோனியன்' பல்கலைக் கழகத்தில் 2008 முதல் தமிழ் இருக்கை உள்ளது.

2015, டிசம்பர் 15இல் கேரளா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பி.ஜெயகிருஷ்ணன் தேர்வாகியும் அவரை ஐசிசிஆர் ஏனோ அனுப்பவில்லை. இவ்வாறு 7 ஆண்டுகளாக வார்ஸா தமிழ் இருக்கைகள் காலியாக இருப்பதற்கு மத்திய அரசு தமிழுக்கு எதிரான மனநிலையில் இருப்பதையே காட்டுகிறதுஎன்றார்.

"தொடக்கக் காலங்களில் இங்குப் பணியாற்றும் பேராசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இதில், அவரது குடும்பத்தினருக்கும் தங்குமிடம், உணவு வசதி போலந்து நாட்டால் அளிக்கப்பட்டது. அடுத்து, அப்பணிக்காலம் ஓராண்டாகக் குறைக்கப்பட்டு, தற்போது இது வெறும் 9 மாதங்களுக்கு மட்டும் என மாற்றப்பட்டது.

'கிராக்கூப்' தமிழ் இருக்கைக்குத் தனிப் பேராசிரியரை அனுப்பாமல் வார்ஸா செல்பவரையே 4 மணி நேரம் பயணம் செய்து வகுப்பு எடுக்கவைத்த நிலையும் தொடங்கியது. இதுபோன்ற பிரச்சினை, இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மற்றப் பாடப்பிரிவுகளில் இல்லை. இதனால் அங்குப் பணியாற்றத் தமிழ்ப் பேராசிரியர்கள் இடையே நிலவிய ஆர்வம் குறைந்தது. எனவே, அதிகப் பணிக் காலத்துடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்பது தமிழ்ப் பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது" -பேராசிரியர், டாக்டர் கி.நாச்சிமுத்து.

இச்சூழலில், போலந்தின் 2 தமிழ் இருக்கைகளுக்கும் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பை 'ஐசிசிஆர்' தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் அயல்பணியில் இங்கு பணியாற்ற விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது. 

[விண்ணப்பங்கள் வருமா? உரிய முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு, பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்களா? குடும்பத்துடன் அவர்கள் அங்குப் பணியாற்ற உரிய வசதிகள் செய்யப்படுமா? இவை விடை தெரியாத கேள்விகள்]

                                           *  *  *

மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து அப்பட்டமாக அறியப்படுகிற உண்மை.....

இந்தியாவிலுள்ள பிற மாநில மொழிகள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தொழிந்து மறைந்திட, இந்தியும் சமஸ்கிருதமும் செழித்து வளர்ந்திட வேண்டும் என்பதே நடுவணரசின் உள்நோக்கம்.

'தாய்த்தமிழ்', 'தமிழினம்' என்று பேசினாலோ, எழுதினாலோ 'இவன் பிரிவினைவாதி' என்று முத்திரை குத்தி வாய்ப்பூட்டுப் போட முயலும் தமிழ்நாட்டுப் பாஜக தேசபக்தர்கள் இது குறித்துக் கருத்துச் சொல்வார்களா? நடுவணரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து அறிக்கை விடுவார்களா? போராடுவார்களா?

செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். ஏனென்றால், இவர்கள் எல்லாம் இந்திய நாட்டைச் சேர்ந்த தமிழர்களே என்பது நம் நம்பிக்கை!

============================================================================

நன்றி: பேராசிரியர், டாக்டர் கி.நாச்சிமுத்து & 'இந்து தமிழ்'

https://www.hindutamil.in/news/india/651770-poland-1.html    சனி, ஆகஸ்ட் 21 2021