அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

அதிமதுர மரணம்!!!

வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில் அது அத்தனைத் துன்பமானதா?

இல்லை... இல்லவே இல்லை.

முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத் தழுவுகிற அந்தக்கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.

அந்த அனுபவம் சுகமானது.

உழைத்துக் களைத்து, வயிறார உண்டு முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத் தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.

'உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில் புதிய அணுக்கள் உருவாக, அல்லது பழையவை புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப் படுகிறது.'

உறக்கத்தில் ஆழ்ந்திடும்போது எவ்வகையான வலியையோ வேதனையையோ நாம் உணர்வதில்லை. இது தற்காலிக மரணம்.

அணுக்களைப் புதுப்பித்துக்கொள்ளும் அல்லது புதியனவற்றை உருவாக்கும் ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும் நிலையில் எய்துவது மரணம். இது நிரந்தரமான உறக்கம்.

[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும் திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச் சிந்திக்க நேர்ந்தால் இதை ஆராயலாம்]

தற்காலிக மரணத்தின்போதோ, நிரந்தர மரணத்தின்போதோ உடல் எந்தவொரு வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை என உறுதிபடச் சொல்லலாம்.

அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே, அதெல்லாம் வெறும் கற்பனைதானா?

ஆம்.

ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும்போது, அந்த நோயால் உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை என்று தவறாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறோம்.

விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு, அதனால் விளையும் வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது ஆக ஆக வலிமை குன்றிவருகின்றன; செயலாற்றும் திறனை இழக்கின்றன.

இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்துவருகிறது.

சிந்திக்கும் திறன் பெருமளவில் குறைவதால்.....

கடந்த காலங்களில் அனுபவித்த சுகபோகங்களையோ, அன்புக்கும் பாசத்திற்கும் உரிய உறவுகளின் பிரிவையோ நினைத்துத் துயருறுவதும் வெகுவாகக் குறைகிறது.

எனவே, இயல்பான மரணத்தை நாம் தழுவும் அந்தக் கணங்களில் துன்பத்திற்கு உள்ளாவதில்லை என்று உறுதியாக நம்பலாம்.

முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச் சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுயநினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது. அம்மாதிரியான சூழலிலும், உடலளவிலோ, மனத்தளவிலோ துயருறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று சொல்லலாம். ஆக.....

இயற்கையாக நிகழும் ஒரு மரணம் துன்பம் பயப்பதல்ல என்பது உண்மை.

வயது அதிகரித்துவரும் நிலையில், 'சாகப்போகிறோம். இவ்வுலக வாழ்வையும், இங்குள்ள சுகபோகங்களையும் முற்றிலுமாய் இழக்கப்போகிறோம். செத்த பிறகு என்ன ஆவோம்' என்பன போன்ற சிந்தனைகளால்தான் பெரும் துன்பங்களுக்கு ஆளாகிறோம். மரணத்தைத் தழுவுவதால் அல்ல... அல்லவே அல்ல!
====================================================================================

மிக முக்கியக் குறிப்பு:
இளம் வயதிலிருந்தே அவ்வப்போது மரணத்தை நினைத்து மனம் கலங்கும் வழக்கம் என் குருதியில் இரண்டறக் கலந்த ஒன்றாக இருந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இக்கலக்கம் சற்றே அதிகரித்தது. இதன்விளைவாக, என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்ள எழுதியது இப்பதிவு.

எனவே, இங்கு இடம்பெற்றுள்ள கருத்துகளின் நம்பகத்தன்மை குறித்து எவ்வகையிலும் உறுதியளிக்க இயலாது என்பதை மிக்கப் பணிவுடன் தெரிவிக்கிறேன்.

ஹி...ஹி...ஹி!!!
====================================================================================