சாந்த் பட்டேல் என்பவர் ஒரு முறை காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த சீரடி சாய்பாபாவைக் கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படிக் கூறினார். அவரும் சம்மதித்தார். இருவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார்கள்.
இருவரும் புகைபிடிக்க விரும்பினார்கள். நெருப்பு தேவையாக இருந்தது.
!!!பாபா, தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தைத் தோண்ட நெருப்பு வந்தது. இருவரும் புகை பிடித்தார்கள்.
"தாகமாக இருக்கிறது" என்றார் பட்டேல்.
!!!பாபா, தன் கைத்தடியால் பூமியின் மீது ஓங்கி அடித்தார். தண்ணீர் பீறிட்டது. தாகம் தணிந்தார் பட்டேல்.
!!!பட்டேலின் வேண்டுகோளின்படி, காணாமல் போயிருந்த பட்டேலின் குதிரை இருக்குமிடத்தைப் பாபா கூறினார். பெருமகிழ்ச்சிக்கு உள்ளானார் பட்டேல்.
பாபாவின் மகிமையை அறிந்த பட்டேல் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, சில நாட்கள் தங்கவைத்து உபசரித்தார்.....
!!!.....ஒருமுறை பாபா, ஒரு மசூதிக்கு அருகிருந்த ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். மரத்து இலைகளின் கசப்புச் சுவை இனிப்பாக மாறிய அதிசயம் நிகழ்ந்தது.
!!!!!இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள், "நீங்கள் யார்?" என்று கேட்க, "நானே அல்லா. நானே சங்கரன். நானே ஸ்ரீகிருஷ்ணன். நானே அனுமன்" என்றார். மக்கள் அவரைத் தொழுது கழிபேருவகை எய்தினார்கள்.
ஒருநாள், ஒரு பசுமாட்டுக்காரனிடம், "கொஞ்சம் பால கறந்து தா" என்றார்.
அவன், "இது மலட்டுப்பசு. பால் தராது" என்றான்.
!!!அதைப் பொருட்படுத்தாத பாபா, பசுவின் மடியில் கை வைத்துத் தடவிக் கொடுத்தார். பால் சுரக்க ஆரம்பித்தது.
!!!பிறிதொரு முறை, இறந்து கிடந்த ஒருவன் மீது, தன் குருவின் காலடிபட்ட மண்ணை அள்ளித் தூவினார். செத்தவன் உயிர்பெற்று எழுந்தான்.
!!!இவர் சீரடியில் இருந்தபோது, தான் தங்கியிருந்த துவாரகாமாயி என்னும் மசூதியில் தினமும் விளக்கேற்றுவார். இதற்கான எண்ணையை இரு வியாபாரிகள் கொடுத்துவந்தார்கள். பாபாவின் சக்தியைச் சோதிக்க நினைத்த அவர்கள் ஒரு நாள் எண்ணை தரவில்லை. பாபா, தண்ணீரை ஊற்றி விளக்கெரித்தார்.
!!!பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும், அத்தனை பேரும் உண்ணும் வகையில், இருக்கிற கொஞ்சம் உணவையே பல மடங்காகப் பெருகச் செய்வார் அவர்.
இப்படி, எண்ணிலடங்காத அற்புதங்களை நிகழ்த்தியதாக இந்தச் சாயிபாபாவைப் பற்றி ஊடகங்கள் நிறையவே எழுதின; எழுதிக்கொண்டிருக்கின்றன.
சீரடி சாயிபாபா, 1918ஆம் ஆண்டு இறந்தார். இன்றளவும், உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் சீரடிக் கோயிலுக்கு வந்துசெல்கிறார்கள்.
* * *
மனிதராகப் பிறந்த எல்லோருமே மனிதர்கள்தான். மகான்கள், அவதாரங்கள் என்று எவரும் இயல்பாக உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்டவர்களில் இந்தச் சீரடி சாய்பாபாவும் ஒருவர்.
இவருடைய உண்மையான தொடக்ககால வாழ்க்கை வரலாறு எவருக்கும் தெரியாது.
மேற்குறிப்பிடப்பட்ட பட்டேல் என்னும் நபர், இவரை அதிசய மனிதர் என்று சொல்லிவைக்க, ஆளாளுக்குக் கற்பனைக் கதைகள் கட்டி, இவரை மகானாக மட்டுமல்லாமல் கடவுளாகவும் ஆக்கிவிட்டார்கள்.
கத்தியால் நிலத்தைத் தோண்டி நெருப்பைக் கண்டறிவது, தடியால் தரையைத் தட்டி நீரை வரவழைப்பது, செத்தவரைப் பிழைக்க வைப்பது என்றிவை போன்றவையெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லை என்பதை அறியும் பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதற்கு, ஊரூருக்குப் பாபா கோயில்கள் உருவாகியிருப்பதே சான்றாகும்.
நம் முன்னோர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம். அவர்களையெல்லாம்விடவும் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடிய கில்லாடிக் கடவுள்கள் நம்மவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். தேவையைத் தமக்குத்தாமே நிறைவு செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.
காலப்போக்கில் இன்னும் பல மாயாஜாலக் கடவுள்கள் இங்கே உருவாக்கப்படுவார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.
====================================================================================
உதவி: செய்தி ஊடகங்கள்.