அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 28 ஆகஸ்ட், 2021

'பாலுறவுக் கட்டுப்பாடுகள்'... மறுபரிசீலனை ஓர் அவசரத் தேவை!!!


சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரிகிற குறைபாடுகளுக்குக் காரணமானவற்றைக் கண்டறிந்து, பழையனவற்றில் தேவையானவற்றைத் திருத்துவதிலும், புதியனவற்றை உருவாக்குவதிலும் அரசுகளும் அமைப்புகளும் ஈடுபடுகின்றனவே தவிர, கண்ணுக்குத் தெரியாத காரணங்கள் குறித்துப் பெரிதும் அக்கறை காட்டுவதில்லை.

அக்காரணங்களுள் முக்கியப் பங்கு வகிப்பது பாலுணர்ச்சியாகும்.

இதிலுள்ள குறைபாடுகளாலும் பலவீனங்களாலும் விளையும் தீங்குகள் கணக்கில் அடங்காதவை. எனவே, பாலுறவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அல்லது, திருத்துவது குறித்து ஆராய்ந்திட அறிஞர் குழுக்களை உருவாக்கி, அக்குழுவின் பரிந்துரைகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவது மிக அவசரத் தேவையாகும்.

பாலுணர்வுக் குறைபாடுகளால், அல்லது, பாலுறவுக் குற்றங்களால் விளையும் பாதிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். வாசியுங்கள்... யோசியுங்கள்.

1.மனநிலை பாதிக்கப்பட்டுக் கணிசமானவர்கள் பைத்தியம் போல் நடமாடுகிறார்கள்; சிலர் பைத்தியமாகவே ஆகிறார்கள்.

2.எதிர்பார்க்கும் அளவு உறவுகொள்வதற்கான வாய்ப்புகள் அமையாதபோது ஆண், பெண் என்று இருபாலரும் தற்கொலை செய்துகொள்ளுதல் அடிக்கடி நிகழ்கிறது.

3.கட்டுப்படுத்துவதற்கென்று நிறைய நேரம் செலவாவதால் சுய முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

4.கட்டுப்படுத்த இயலாதபோது செய்யும் தவறுகளுக்குத் தண்டிக்கப்பட்டு அவமானபபடுதல், அதைத் தாங்கிக்கொள்ள இயலாதோர்  ஓடிப்போதல், அல்லது தற்கொலை புரிதல் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.

5.கடத்துதல், மானபங்கப்படுத்துதல் போன்ற குற்றங்களைச் செய்து சிறைத் தண்டனை பெறுபவர்களும், அல்லது தூக்கிலிடப்படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

6.பாதிக்கப்பட்டப் பெண்களின் குடும்பத்தாரால் குற்றம் புரிந்தோர் கொலை செய்யப்படும் கொடூரங்களும் நிகழ்கின்றன.

7.கடந்த காலங்களில் பெரும் போர்கள் நடந்து வாழ்விடங்கள் பேரழிவுகளுக்கு உள்ளானது போல, இன்றும் குழு மோதல்களால் அவை நிகழ்கின்றன. 

8.கொடிய கொள்ளை நோய்கள்[பாலியல் நோய்கள், எயிட்ஸ்] பரவிட வழி ஏற்படுகிறது.

9.இனக்கலவரங்களின்போது பகைவர் கூட்டத்துப் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

10.கட்டுப்பாடின்றி உறவு கொள்வதால் மக்கள் தொகை பெருகிட, வறுமை கோரத் தாண்டவம் புரிகிறது.

என்றிவையும் இவைபோல்வனவும் ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் சிதைத்துச் சீரழிக்கின்றன என்பது பெரும் பேரவலங்கள் ஆகும்.

பாலுணர்வுக் குற்றங்களில் ஈடுபட்டுத் தண்டனை பெறுகிற எல்லோருமே கெட்டவர்கள் என்பதில்லை; பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ நினைப்பவர்களையும் குற்றங்கள் புரியத் தூண்டும் அசுர பலம் வாய்க்கப்பெற்றது இந்தப் பாலுணர்ச்சி என்பதை மக்கள் ஒருபோதும் மறந்துவிடுதல் கூடாது.

கூடவே கூடாது!

==============================================================================