புதன், 1 செப்டம்பர், 2021

நாத்திக ஜென் குரு!!!


யதான ஜென் குரு அவர்.

தனக்குப் பிறகு தன்னுடைய ஆசிரமத்தைப் பொறுப்பேற்று நடத்தத் தன் சீடர்களில் ஒருவனைத் தேர்வு செய்ய விரும்பினார்.

சிறந்த மூன்று சீடர்களை அழைத்து, "குருவிடம் பாடம் கற்பது வேறு; உண்மை ஞானம் பெறுவது வேறு. நீங்கள் மூன்று பேரும் இங்கிருந்து வெளியேறி விருப்பப்பட்ட இடங்களுக்கெல்லாம் பயணித்து, ஓர் ஆண்டுக்குப் பிறகு திரும்பி வாருங்கள். எனக்குப் பிறகான இந்த ஆசிரமப் பொறுப்பாளர் யார் என்பதைக் கூறுகிறேன்" என்று மூவரையும் வழியனுப்பி வைத்தார்.

மூன்று சீடர்களும் வேறு வேறு திசைகளில் தங்களின் பயணத்தை மேற்கொண்டார்கள்.

ஓராண்டு கழிந்த நிலையில்.....

மூவரும் திரும்பி வந்தார்கள்.

மூவரில் ஒருவனை அழைத்து, "கடவுள் குறித்த உன் அனுபவத்தைச் சொல்" என்றார் குரு.

"குருவே நான் கடவுளைக் கண்டேன். அவருக்கு உருவம் இல்லை. அண்டமெங்கும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார்" என்றான்.

புன்னகைத்த குரு, இரண்டாமனிடமும் அதே கேள்வியைக் கேட்டார்.

அவன் சொன்னான்: "கடவுளுக்கு உருவம் உள்ளது. அவரை ஒளி வடிவத்தில் நான் கண்டேன். மனம் ஒன்றி வழிபட்டதால் எனக்கு அது சாத்தியமானது."

மீண்டும் ஒரு மென்னகையைத் தவழவிட்ட ஜென் குரு மூன்றாவது சீடனைப் பார்த்து, "நீ சொல்" என்பது போல் சைகை செய்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, "குருவே, கடவுள் விசயம் எனக்குக் குழப்பமாக உள்ளது. நாட்கணக்கில் சிந்தித்தும் அவரை என் ஐம்புலன்களாலோ, ஆறறிவாலோ அறிந்திடவோ உணர்ந்திடவோ இயலவில்லை" என்றான் சற்றே வருத்தத்துடன்.

முகமெங்கும் மகிழ்ச்சி பரவிட, "நீ மட்டுமே உண்மை பேசியிருக்கிறாய். உண்மையில் எத்தனை தீவிரமாகச் சிந்தித்தாலும் கடவுளை அறியவோ உணரவோ முடியாது என்பதே எதார்த்தம். நீயே இந்த ஆசிரமத்தின் எனக்கான வாரிசு" என்று சொல்லி, அவனின் முன்தலை வருடி ஆசீர்வதித்தார் ஜென் குரு.

================================================================================

உதவி: 'ஞானம் தரும் ஜென் கதைகள்'[அம்பிகா சிவம்].