திங்கள், 20 செப்டம்பர், 2021

புனிதமும் அபுனிதமும்!!!


//உத்தரப் பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர்[இதுவும் புனிதமானதா?!?!] கொண்டுவரப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜய் ஜாலி நடத்தும் டெல்லி 'கல்வி வட்டம்' என்ற அரசு சாரா அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டெல்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது// 

19.10.2021இல் மாலைமலரில் வெளியான செய்தி இது[https://www.maalaimalar.com/news/topnews/2021/09/19032510/3026911/Tamil-News-Holy-water-came-from-115-countries-of-the.vpf ]

நீரைப் பொருத்தவரை, 'சுத்த நீர்', 'அசுத்த நீர்', 'குளிர்ந்த நீர்', 'சுடு நீர்' என்றெல்லாம் பாகுபாடு செய்யலாம்.

இவை தவிர, ஒட்டுமொத்த உலகிலும் 'புனித நீர்', 'அபுனித நீர்' என்று  எதுவும் கிடையாது. அறிவியலால் ஆராய்ந்து அறியப்பட்ட உண்மை இது.

'புனிதம்' என்றால் என்ன?

புரியக்கூடிய வகையில் இதற்கு விளக்கம் தந்தவர் எவருமில்லை.

அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களுமே கடவுளால் படைக்கப்பட்டவை என்கிறார்கள். இவற்றில் நீருக்குள் மட்டும் கடவுள் புனிதத்தை ஏற்றினாரா? 

காற்றும், நெருப்பும், மண்ணும் பிறவும் புனிதமற்றவையா?

புனிதமானது என்று சொல்லப்பட்டுவரும் 'கங்கை', சாக்கடை நீரும், சாயக்கலவைகளும், பிணங்களும், மனிதக் கழிவுகளும் கலந்து கலந்து கலந்து நாறிக் கிடக்கிறது.

இதில்தான், பக்தகோடிகள் பாவம் தீரக் குளித்தார்கள்; குளிக்கிறார்கள். இதனால் புதுப் புது நோய்கள் பரவுவது அயோத்தி தாசர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது; அல்லது, அறியாதது போல் நடிக்கிறார்கள்.

கும்பாபிஷேகம், கோபுர அபிஷேகம் என்று இந்த அசுத்த நீரைத்தான் இத்தனை காலமும் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள். இது போதாதென்று 115 நாடுகளிலிருந்து புனித நீர் கொண்டுவந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார்களாம்.

ராமர் குடியேற்றப்பட இருக்கிறார் என்பது அறிவிக்கப்பட்டவுடனே, அங்கே சூழ்ந்துகொண்டிருக்கும் அத்தனைத் தீய சக்திகளும் கொடிய நுண்கிருமிகளும் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடுமே, அப்புறம் எதற்குப் புனித நீர்ப் பயன்பாடு?

115 ஆறுகளிலிருந்து புனிதநீர் கொண்டுவந்தார்களாம். அதென்ன 115?  உலகளவில் இதற்குமேலும் ஆறுகள் இல்லையா?

ஆற்று நீரில் மட்டும்தான் 'புனிதம்' கலந்துள்ளதா? சிறு சிறு ஓடை நீரிலும் வாய்க்கால் நீரிலும் புனிதம் கலக்கவில்லையா? இந்தக் கலப்படத்தை ஆறுகளில் மட்டுமே கடவுள் எனப்படுபவர் செய்தது ஏன்?

'புனிதம்' என்று ஒன்று இருப்பது உண்மையானால், அது நிச்சயமாக நீரில் இல்லை; சூதுவாதற்ற மனித நெஞ்சங்களில் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. எனவே.....

கட்டப்படுகிற ராமர் கோயிலில் ராமர் குடியேறுவதும், கட்டடத்தில் புனிதம் கலப்பதும்.....

'ஆற்று நீரோ குளத்து நீரோ, சுத்த நீரோ அசுத்த நீரோ அதில் மனிதாபிமானத்தைக் கலந்து கட்டினால் மட்டுமே சாத்தியமாகக்கூடும்' என்பதை ராமர் தாசர்கள் புரிந்துகொள்வது நல்லது.

இது, இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே நன்மை பயப்பதாகும்!

====================================================================================