திங்கள், 27 செப்டம்பர், 2021

தமிழ் வளர்க்கும் சீன அரசு!!!


இந்தியாவில் பல மொழிகள் இருக்கையில், சீனர்களில் கணிசமானவர்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதும், தமிழ் கற்பதற்குச் சீன அரசு உதவித்தொகை வழங்குகிறது என்பதும் தமிழர்களாகிய நம்மைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற செய்தியாகும்.

சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழ் பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்திகொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதும் அறியத்தக்கது.

ஆர்வத்தால் தமிழ் கற்றதோடு, தமிழ் வளர்க்கும் பணியையும் சீனாவில் மேற்கொண்டுள்ள் சீன தேசத்துப் பெண்களைப் பேட்டி கண்டு, சுவையானதொரு பதிவைத் தமிழார்வலர்களுக்கு வழங்கியிருக்கிறார் சாராம் ஜெயராமன்[பிபிசி தமிழ்].

அவர், சீனாவின் 'யுன்னான் மின்சு' பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த் துறையைத் தொடர்புகொண்டு இது குறித்த தகவல்களைச் சேகரித்தார்.

அப்பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டில் தமிழ்த்துறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

'யுன்னான் மின்சு' பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதி[சீனப் பெயர் கிகி ஜாங்), "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலைப் பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார்.

"இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா?" என்று கேட்டபோது, "இந்தப் படிப்பிற்குச் சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்குப் பிறகு தமிழை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களைக் கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். தமிழைப் படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது" என்றார் நிறைமதி.

ஈஸ்வரி என்றழைக்கப்படும் Zhou xin 'பெய்ஜிங்' பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்க் கலாச்சாரத்தைச் சீன மக்களிடம் கொண்டு செல்வதே தனது நோக்கம் என்றும், உலகின் பழமையான தமிழ் மொழியைச் சீன மாணவர்கள் கற்க ஆர்வம் கொள்வது மகிழ்ச்சிகரமான செய்தியாகும் என்றும் பெருமிதப்படுகிறார் அவர்.

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தன் பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டுள்ளார் Zhou Xin. பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ஈஸ்வரி மற்றும் வீராசாமி ஆகியோர் தமிழ்ப் பேராசிரியர்களாக உள்ளனர். 

Zhou Xin என்னும் கொஞ்சும் தமிழ் பேசும் இந்தச் சீனப் பெண், தமிழ் நாட்டில் இன்றளவும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் பேசும் தூய தமிழை நன்றாக உச்சரிக்கின்றார். இதன் மூலம்,  மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

ஈஸ்வரி சீனாவின் தேசிய ரேடியோவில் (CRI) தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளார். Communication university of china-வில் தமிழைச் சிறப்புக் கவனமாகக்கொண்ட mass communicationஇல் பட்டம் பெற்ற பிறகு தன் பெயரை ஈஸ்வரி என மாற்றியுள்ளார்.

பாண்டிச்சேரியில் உள்ள 'puduchery institute of linguistic and culture'இல் நடைமுறைத் தமிழ் மொழியைக் கற்க, சீன உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு( 2013-2014 ) ஈஸ்வரிக்கு வழங்கப்பட்டது. நடைமுறையில் பேசப்படும் தமிழுக்கும் தாம் பேசிய தமிழுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் பெய்ஜிங் வரும் தமிழ்ப் பிரபலங்களைப் பேட்டி எடுக்கச் சிரமப்பட்டதாக ஈஸ்வரி தெரிவித்து இருந்தார். 

சீனாவில் உள்ள பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில், பெய்ஜிங், யூனான், ஷேன்டாங் உள்ளிட்ட பகுதியில் இருந்து 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் முனைவர் கலாதி வீராசாமி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழர்களின் பண்பாட்டையும்  கலாச்சாரத்தையும் கற்பிப்பதோடு, தமிழ் மொழியை எழுதுவது, உச்சரிப்பது, மொழிபெயர்ப்புச் செய்வது போன்றவையும் கற்பிக்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு மாணவர்களுக்குத் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான பட்டம் வழங்கப்படும்.

2018-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேச திருக்குறள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர் ஈஸ்வரி தமிழில் தன் சொற்பொழிவை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .


=======================================================================================

ஆதாரம்: https://www.bbc.com/tamil/global-46945186