புதன், 29 செப்டம்பர், 2021

பெருகிவரும் 'பிரமச்சாரினி'ப் பெண்கள்!!!


பாலியல் என்பதே கவர்ச்சியானதொரு உணர்வுதான். இது குறித்துப் பேசும்போதும், பேசக் கேட்கும்போதும், கவர்ச்சிப் படங்கள், காணொலிகள் போன்றவற்றைப் பார்க்கும்போதும் பரவசத்துக்கு உள்ளாவது இயல்பு.

ஆனால், பாலுறவு என்றாலே எரிச்சலுக்கும் வெறுப்புக்கும் உள்ளாகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். 

பாலுறவு கொள்ளாமல் இருக்கும் பிரம்மச்சரிய நிலைக்கு ஆங்கிலத்தில் ‘செலிபசி’[Celibacy] என்று பெயர். இன்றைய இளைஞர்கள் மிகவும் குறைவாகப் பாலுறவு கொள்வதாக அறிக்கைகள் வெளியாகும் நிலையில் இந்தச் செலிபசி, அதாவது 'பிரம்மச்சரிய விருப்பம்', அதிக விவாதப் பொருளாகி உள்ளது.

'தி ஜெனரல் சொசைட்டி சர்வே' என்ற ஆய்வு நிறுவனம் ஆயிரக்கணக்கானோரிடம் இந்த ஆண்டு நடத்திய கணிப்பு, கடந்த ஆண்டு அமெரிக்காவில் வயதுவந்தோரில் 23 சதவீதம் பேர் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இரட்டிப்பாகி உள்ளது அதிர்ச்சி அளிப்பதும்,  ஆச்சரியமூட்டுவதும் ஆன விசயம்.  

இதன் மூலம், பாலியல் அனுபவங்களை விரும்பாத 30 வயதுக்கு உட்பட்டோர் எண்ணிக்கை நாளும்  அதிகரித்துவருகிறது என்பதை அறிய இயலுகிறது.

'2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து 28 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது'  என்று 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' என்ற இதழின் சார்பில், 34 ஆயிரம் வயதுவந்தோரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்புகள் 1972இல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டவர் குறைவான அளவே உடலுறவு வைத்துக்கொள்வதாக இது சுட்டிக்காட்டியிருக்கிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 16 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில், சரிபாதிக்கும் குறைவான ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பாலியலை வெறுப்பது ஏன் என்பது குறித்தும் சிலர் மனந்திறந்து பேசியிருக்கிறார்கள்.

பெண்சாரா[வயது 23]

பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன், சுமார் இரண்டரை ஆண்டுகளாகப் பாலுறவை விட்டு ஒதுங்கியிருப்பதாகக் கூறும்  இவர், மனோ ரீதியான பிரச்சினைகள் காரணம் என்கிறார். சில நேரங்களில் 'சுய இன்ப'ப் பழக்கம் மட்டுமே இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

தற்போது, தனது வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், எந்த ஒரு விஷயத்திலும் சிந்தனையை ஒருநிலைப்படுத்த முடிவதாகவும், இதனால் தனது வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை என்றும் இவர் உறுதிபடக் கூறியிருப்பது பலரையும் பாலுறவு பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

அனைஸ்[30]

மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று தான் சிறுவயதிலேயே முடிவு செய்துவிட்டதாகக் கூறுகிறார், 31 வயதாகும் அனைஸ். இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான, நீடித்திருக்கக்கூடிய உறவு தனக்கு வாய்க்கவில்லை என்கிறார்.

‘‘நான் 30 வயதை எட்டியபோது என் நண்பர்கள் பலர் திருமணம் செய்துள்ளதைப் பார்த்து, பாலுறவு வைத்துக் கொள்ளாததாலோ திருமணம் செய்யாததாலோ என்னுடைய வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டுள்ளேனா என யோசித்துப் பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு தேவையில்லை என்று நான் முடிவெடுத்ததை நினைவூட்டிக்கொண்டபோது, அது குறித்த சஞ்சலம் சில நாட்களே நீடித்தது.

எனக்குத் தெரிந்த பலர், தங்களுடைய படுக்கையில் தங்கள் இன்னாள் மற்றும் முன்னாள் காதலர்கள் எப்படி என்பதைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், நான் இதுபோன்று பேச வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில்கூட ஓர் உறவில் நுழையும்போது இந்தச் சுமையை நான் தூக்கிக்கொண்டு செல்லத் தேவையில்லை’’ என்கிறார் அனைஸ்.

பாலியல் என்பது தனிச்சிறப்புமிக்கது என்று கூறும் அனைஸ், அதைக் கொண்டாட வேண்டும் என்றும், அது வெறும் உடல் சார்ந்த செயலல்ல, இருவருடைய மனம் சார்ந்தது என்கிறார்.

டேன்[29]

பாலுறவு வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கு முன், சிறுவயதில் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை உணராமல் பெண்களுடன் பாலுறவு கொள்வதற்காகப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார், 29 வயதாகும் 'டேன்'.

"சுமார் ஐந்து ஆண்டுகளாக நான் உடலுறவு கொள்ளாமல் இருக்கிறேன். இதுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு. தற்போது, நான் என்னை முழுமையான மனிதனாக, ஒரு நோக்கத்துடனும், திட்டத்துடனும் இருப்பவனாக உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்தச் சக்தியையும் வேலை மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

தற்போது ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருவதாகக் கூறும் டேன், அவரைத் திருமணம் செய்யப்போவதாகவும், ஆனால் இதுவரை அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டதில்லை என்றும் சொல்கிறார்.

எலினா[21]

17 வயதானபோது தான் பாலுறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்ததாகக் கூறும் 21 வயது 'எலினா', அப்போதெல்லாம் பிறர் தன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று உணர்ந்ததாகக் கூறுகிறார்.

‘‘பிறரோடு பேசும்போது திடீரென ஓர் எண்ணம் எழும், அவர்கள் நம்முடன் பாலுறவு வைத்துகொள்வதற்காகத்தான் நம்முடன் பேசுகிறார்களோ என்ற சந்தேகம் வரும். அதுகுறித்து அளவுக்கு அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். என்னை விரும்பிப் பேசுகிறார்களா அல்லது என் உடலுக்காகப் பேசுகிறார்களா என்ற அச்சம் எனக்கு எழுந்தது. இந்த எண்ண ஓட்டங்கள் என் தலையைச் சுற்றிச் சுற்றி வந்ததால், பிறரோடு நெருங்கிப் பழகுவதையே நிறுத்திக்கொண்டேன்’’ என்கிறார் இவர்.

தான் சிலரோடு கொண்ட உடலுறவுக்காக இப்போது வருந்துவதாகக் கூறும் எலினா, சிலரைத் திருப்திபடுத்துவதற்காக அவர்களுடன் பாலுறவு வைத்துக்கொண்டது தவறு என்று உணர்ந்ததாகவும், தொடர்ந்து பலருடைய பாலியல் விருப்பங்களைப் புறக்கணித்து ஒட்டுமொத்தமாக பாலுறவை விட்டே ஒதுங்கிவிட்டதாகவும் சொல்கிறார்.

‘‘தற்போது என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நான் அதிகக் கவனம் செலுத்துகிறேன். எனக்குப் பிடித்தவர்களுடன் நான் பேசும்போது, அந்த நட்புறவைச் சுலபமாக வளர்க்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது’’ என்கிறார் எலினா.

எதிலும் ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதே இவர்கள் கூறும் கருத்துகளில் இருந்து புரிகிறது.

                                          *  *  *

நம் கேள்வி:

நம்ம ஊர் இளசுகளால் இவர்களைப் போல் மனம் திறந்து இவ்வாறான அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?

முடியும். ஆனால், பகிர்ந்துகொண்டால்.....

'இதுகளெல்லாம் கெட்டுச் சீரழிஞ்சதுகள். குடும்ப வாழ்க்கைக்குச் சரிப்பட்டுவராது' என்று முத்திரை குத்திவிடுவார்கள் நம்மவர்கள்!

ஆகவே, இளசுகளே... குறிப்பாக, இளம் பெண்களே, 'பேட்டி' அளிக்க நேர்ந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுங்கள்! 

=======================================================================================

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/06/16112522/Sexual-DesireWhat-is-the-reason-to-be-affected.vpf