அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 30 செப்டம்பர், 2021

"வாங்க, 'கடவுள்'ஐக் 'கூறு' போடலாம்"!!![படு அறுவைப் பதிவு]


கடவுளின் ‘இருப்பு’ குறித்து நான் எழுதியதொரு பதிவைப் படித்த என் உள்ளூர் நண்பர், “என்ன சொல்ல வர்றீங்க, கடவுள் இல்லேன்னுதானே?” என்று கேட்டார்.

“சொல்ல நினைப்பதை இன்னும் சொல்லல. கடவுள் உண்டு என்பதற்குத் தரப்பட்ட ஆதாரங்களை நான் மறுத்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றேன்.

“ஆதாரங்களை மறுக்கிறதுன்னா என்ன அர்த்தம்? இல்லேன்னு சொல்றதுதானே?” -மடக்கினார்.

“ஆதாரங்களை மறுக்கிறது வேறு; கடவுளே இல்லேன்னு சொல்றது வேறு.”

“சரியான ஆதாரங்கள் தந்தா நம்புவீங்கதானே?”

“தாராளமா.”

“கடவுள் இருக்கிறார்னு அவரை நம்புறவங்க சொல்றாங்க. நம்பாதவங்க இல்லேன்னு சொல்றாங்க. ரெண்டு பேருமே கடவுளை முன்நிறுத்தித்தான் விவாதிக்கிறாங்க. இதிலிருந்தே கடவுள் இருக்கார்ங்கிறது உறுதியாகுது. இல்லாத ஒன்றைக் கற்பனை செய்ய முடியாது.”

“இன்னும் விளக்கமா சொல்லுங்க.”

“நாம் பயன்படுத்துற ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிக்குது. நிலம்கிற சொல் இருக்கு. ‘நிலம்’கிற பொருளும் இருக்கு. கடவுள்ங்கிற சொல் இருக்கு; கடவுளும் இருக்கார். இப்படி எல்லாமே. இல்லாத எந்தப் பொருளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுக்க முடியாது. கடவுள்ங்கிற சொல் இருப்பதால் கடவுளும் இருக்கார்னு நம்பணும்.

சிறிது மவுனத்திற்குப் பிறகு நான் கேட்டேன். “ஆகாயத் தாமரைன்னு தமிழ் இலக்கணக்காரங்க ஒரு எடுத்துக்காட்டுத் தருவாங்க. தாமரைன்னு ஒரு பொருள் தண்ணீரில்தான் இருக்க முடியும். ஆகாயத்தில் தாமரை ஏது? இங்கே, இல்லாத ஒரு பொருள்தான் நினைக்கப்படுது. இன்னும், ஆகாயத்தில், ஆயிரம் தலைகளோட அறுபதாயிரம் கால்களால ஒரு யானை நடந்து போச்சுங்கிற மாதிரி நிறையச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அது உண்மை ஆயிடாது. கடவுளும் அப்படித்தான்.”

நண்பர் லேசாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னார். “இங்கே ஒரு தனிச் சொல்லைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளணும். ஆகாயத் தாமரையில் ரெண்டு சொற்கள் இருக்கு. ஆகாயம் ஒரு சொல். அது குறிக்கிற பொருள் ‘வெளி’. வெளின்னு ஒன்னு இருக்கு[இல்லையென்று சொல்கிற மதங்கள் உள்ளன]. தாமரை ஒரு சொல். அது குறிக்கிற தாமரைங்கிற பொருளும் இருக்கு. நீங்க ரெண்டு சொற்களை இணைச்சி இல்லாத ஒரு பொருளைக் [ஆகாயத் தாமரை] கற்பனை பண்ணியிருக்கீங்க. இது சரியான அணுகுமுறை அல்ல. இது மாதிரிதான் யானை உதாரணமும். இம்மாதிரி உதாரணமெல்லாம் இங்கே பொருந்தி வராது” என்றார் நண்பர்.

நான் கேட்டேன். “எல்லாத் தனிச் சொல்லுமே ‘நிஜமான’ பொருளை உணர்த்துதா?”

“பொருளை மட்டுமல்ல, உணர்ச்சியைக் குறிக்கலாம்; ஒரு பண்பைக் குறிக்கலாம். ‘வெறுமை’, ‘பொய்’ போல நம்மால் உணரத்தக்க ஒன்றைக் குறிக்கலாம். இன்னும் சொல்ல நிறைய இருக்கு.” -நண்பர்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, தனிச் சொற்கள் தரும் பொருள்கள்தான் உண்மை; ரெண்டுக்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் தர்ற பொருள் எல்லாம் உண்மை இல்லைன்னு ஆகுதே?” -நான்.

“ஆகாயத்தாமரை மாதிரி, திட்டமிட்டுத் தொகுத்த சொற்களும் தொடர்களும்தான் அப்படி.”

“கடவுளும் அப்படித்தான்னு நான் சொல்றேன். இதுவும் திட்டமிட்டுத் தொகுத்த சொல்தான். அதைப் பிரிச்சா, கட+உள்.

‘கட’ன்னா கடத்தல். ‘உள்’னா உள்ளே. இந்த ரெண்டு சொற்களும் இணைந்து கடவுள்ங்கிற பொருளைத் தந்துவிடா. உள்ளே கடப்பதுன்னா எதனுள்ளே? கடப்பது எது? அது கடவுளானது எப்படி? இப்படி எழும் கேள்விகளுக்கு இந்தச் சொற்கள் மட்டும் விளக்கம் தந்துவிடா. நீண்ட விவாதம் தேவைப்படும். அதிருக்கட்டும், தனிச் சொல்லானது கடவுள்ங்கிற பொருள் தரும்னு சொன்னீங்களே, உதாரணத்துக்கு ஒரு சொல் சொல்லுங்களேன்.”

“இறை.”

“பொருள்?”

“தங்கியிருப்பது. அதாவது, ஒவ்வொரு பொருளிலும் தங்கியிருப்பது/இருப்பவர் கடவுள்.”

“இந்தத் தனிச்சொல்லும் நேரடியா கடவுளைக் குறிக்கல. ஒவ்வொரு அணுவிலும்[?] தங்கியிருக்கிற ஒன்னுன்னா, அந்த ஒன்னு கடவுள் ஆனது எப்படி? இதுவரை யாரும் புரியும்படியாகச் சொன்னதில்ல. கடவுள்ங்கிற வார்த்தை மனிதனால் உருவாக்கப்பட்டது. கடவுள் உண்டுன்னோ இல்லைன்னோ ஆதரிப்பவர், மறுப்பவர் என இரு தரப்பாரும் அதைச் சொல்றதால கடவுள்னு ஒருத்தர் இருப்பதை ஏற்க முடியாது" என்றேன் நான்.

“இலக்கணம், சொல்லாராய்ச்சின்னு இறங்கினா,  குழப்பம்தான் மிஞ்சும்.” -நண்பர் சலித்துக்கொண்டார்.

"நானும் அதைத்தான் சொல்றேன். வார்த்தைகளையும் அவை தர்ற பொருள்களையும் கொண்டு கடவுளை நிரூபிக்க முடியாது. விரும்பினா இன்னொரு நாள் வாங்க. கடவுளை ரெண்டுல ஒன்னு பார்த்துடுவோம்” என்று சொல்லிச் சிரித்தேன்.

நண்பரும் சிரித்தார், கொஞ்சம் அசடு வழிய!